நயன்தாராவைப் பாராட்டும் ‘புறம்போக்கு’ ஏகாம்பரம்

Cinematographer NK Ekambaram at the Annual Day Celebration of Adyar Film Institute
‘ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு யானை பலம். ம்ஹும் .. ஒரு யானைப் படையின் பலத்தைக் கொடுக்கிறது.’– என்று நமது விமர்சனத்தால் பாராட்டப்பட்ட , புறம்போக்கு படத்தின் ஒளிப்பதிவாளரான ஏகாம்பரம் , படத்தின் இயக்குனர் ஜனநாதனைப் போலவே நிஜமான கம்யூனிச சித்தாந்தத்தில் பிறந்து வளர்ந்தவர் . சின்ன வயதில் கம்யூனிஸ்டு இயக்கத்தில் செயல்பட்டவர் . இவரது தாத்தா ருத்ராபதி எம் ஜி ஆர் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்டு எம் எல் ஏ வாக புகழ் பெற்று விளங்கியவர். சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேல் அந்தப் பகுதி கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த  காலம் அதுபின்னர் சினிமாவுக்கு வந்து விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனவர்.  ஜனநாதனின் முதல் படமான இயற்கை படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே . ஜனநாதனின் இரண்டாவது படமான ஈ படத்தின் ஒளிப்பதிவும் இவரே .

இவை  தவிர தெலுங்கில் நீக்கு நேனு நாக்கு நுவ்வு , மலையாளத்தில் வேட்டம், துரோணா….

இந்தியில் டீ டோனா டான்,  சிலா காஸியாபாத், ஷார்ட் கட் ரோமியோ , போலீஸ் கிரி , வெளிவர இருக்கும் பாய் வெல்கம் டு இந்தியா ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் .

தமிழில் தமிழன் , இயற்கை ஆகிய படங்களை  தொடர்ந்து கள்வனின் காதலி ,  ஈ, பொறி, கந்தசாமி , சுறா , காவலன், காவல் ஆகிய  படங்களுக்கும் அதைத் தொடர்ந்து இப்போது புறம்போக்கு படத்துக்கும் ஒளிப்பதிவு செய்து இருப்பவர்.

கந்தசாமி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட காலத்தில் இருந்து தாமதமாக துவங்கி தள்ளிப் போனதால், ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஏகாம்பரத்தல் பணி புரிய முடியவில்லை . எனினும் அந்தப் படத்தை தன் உதவியாளர் சதீஷுக்கு வாங்கிக் கொடுத்து அவரை ஒளிப்பதிவாளராக உயர்த்திய நல்ல மனிதர் ஏகாம்பரம். .

yeka 2புறம்போக்கு படம் வெளிவருவதற்கு முன்பே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவைப் பாராட்டிப் பேசிய  ஜன நாதன் “. கார்த்திகா ஒரு ஆக்ஷன் காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்தார் . அதை ஒரே கேமராவை பயன்படுத்தி ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மிக சிறப்பாக படம் பிடித்தார். நான் கூட இன்னும் இரண்டு கேமரா வேண்டும் என்றால் வைத்துக் கொள்ளலாம் என்றேம். மறுபடியும் நடிக்க கார்த்திகா துணிவாரா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிற ஆக்ஷன் காட்சி . ஒருவேளை கேமரா அதை கேட்ச் செய்யாவிட்டால் போச்சே என்ற பயம் எனக்கு .ஆனால் ஒரே கேமராவை பயன்படுத்தி அதை பிரம்மாதமாக படம் பிடித்தார் ஏகாம்பரம் . அவர் இந்தப் படத்துக்கு மிக சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார் ” என்று பாராட்டி இருந்தார் . அது உண்மை என்று நிரூபித்திருக்கிறது புறம்போக்கு படம் . ஏகாம்பரத்தில் ஒளிப்பதிவுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் .

அந்த சந்தோஷத்தில் படம் பற்றிய தனது அனுபவங்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொள்கிறார் ஏகாம்பரம் .

“எதையும் திட்டமிட்டு செய்வது ஜன நாதனின் வழக்கம். லொக்கேஷனை முன்னரே முடிவு செய்து சென்று பார்த்து அங்கே கிடைக்கும் விசயங்களை பயன்படுத்தி காட்சி அமைப்பார் . குலு மனாலி பனிமலையில் உருளும் பந்துக்குள் ஆர்யாவும் கார்த்திக்கும் பாய்ந்து உருளும் காட்சியை அப்படிதான் திட்டமிட்டார் . அது சிறப்பாக வந்துள்ளது .

படத்துக்காக ரெண்டு கோடி ரூபாய் செலவில் ஜெயில் செட் போட்டார் இயக்குனர் தயாரிப்பாளர் ஜனநாதன். செட் போட்ட போது கைதிகளின் வெள்ளை உடைக்கு ஏற்ப ஜெயிலின் சுவர்களை சாம்பல் நிறத்தில் அமைத்தோம். எனினும் ஒரு மாற்றத்துக்காக ஜெயிலர் ஷாம் இருக்கும் அறையின் சுவர்களை மட்டும் வண்ணம் மாற்றினோம்.

ஆரம்பத்தில் அந்த ஜெயில் சுரங்கப் பாதை காட்சி எல்லாம் இல்லை . பின்னர் திரைக்கதை வளர்ந்தபோது அதற்கு ஒரு ஐம்பது லட்ச ரூபாய் வரை ஆனது . தயங்காமல் செலவு செய்தார் ஜனநாதன் .

படம் பிடிக்கும்போதே ஷாம் அந்தக் கேரக்டரை அற்புதமாக செய்வதை உணர முடிந்தது. விஜய சேதுபதியும் நன்றாக நடித்தார். ஆர்யா கார்த்திகாவும் அப்படியே .

yeka 3

படத்தின் முதல் காட்சி படப்பிடிப்பின் போது கார்த்திகா , முழு மேக்கப்பில் வந்து விட்டார் . அப்புறம் அது போராளி கேரக்டர் என்பதை புரிய வைத்து மேக்கப்பை குறைக்க சொன்னோம். . பனி மலைக் குகையில் அவர் வெடிகுண்டைப் பொருத்திக் கொள்ளும் காட்சியில் நடித்த போது வெளியே கொடூரக் குளிர்ச்சி மழை கார்த்திகா முகத்தில் தோல் வறண்டு வெடிப்பு வந்து  விட்டது . மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார் கார்த்திகா.அந்தக் காட்சியில் மட்டும் மேக்கப் நிறைய போட வேண்டியதாகி விட்டது. இயற்கை படத்தில் குட்டி ராதிகா  மேக்கப்பை குறைக்க சொன்னபோது அழுது விட்டார் . எனவே மேக்கப்பை குறைக்க சொல்லக் கூட ஜன நாதன் சங்கடப்படுவார் . நான் தான் சமயம் பார்த்து பேசி குறைக்க வைப்பேன் .

அந்த வகையில் நயன்தாரா பெஸ்ட்.   ஈ படத்தில் சேரிப் பெண் கேரக்டரை சொன்னபோது சரியாக புரிந்து கொண்டு மேக்கப்பே இல்லாமல் நடித்தார் .
சுசி கணேசனின் கந்தசாமி , ஷார்ட் கட் ரோமியோ படங்களுக்கும் நான்தான் ஒளிப்பதிவு. ஜன நாதன் கம்யூனிஸ்ட் டைரக்டர் என்றால் சுசி கணேசன் கார்ப்பரேட் ஸ்டைலில் படம் எடுப்பார் . அந்தந்தக் கதைக்கு ஏற்றவாறு என்னை தயார் செய்து கொண்டு ஒளிப்பதிவு செய்தேன்.

அறிமுகமான முதல் படமே விஜய் சார் படமான தமிழன் . பிறகு அவர் விருப்பத்துக்கிணங்க சுறா படத்திலும் அவருடன் பணியாற்றினேன் . அவரே காவலன் படமும் கொடுத்தார் .

டைரக்ஷன் செய்வீர்களா என்று பலரும் கேட்கிறார்கள் . தெரியவில்லை . ஒளிப்பதிவு என்றால் ஷூட்டிங் முடிந்த உடன் அடுத்த படத்துக்கு போய் விடலாம் . ஆனால் டைரக்ஷன் என்றால் அதன் பிறகும் கடுமையாக உழைத்து படத்தை செதுக்க வேண்டி இருக்கும் .

yeka 1அதுபோல எனது தோற்றத்தை பார்த்து நடிக்க விருப்பமா என்றும் கேட்கிறார்கள். அதெல்லாம் யோசிக்கவே இல்லை

ஜனநாதன் படத்தில் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் . உதாரணமாக இந்த புறம்போக்கு படத்திலேயே ஒன்றரை வருடம் இருந்தோம். ஆனால் அவர் படத்தில் பணியாற்றினால் நம்மை அடுத்தடுத்த உயரங்களுக்கு கொண்டு போய் விடுவார் . புறம்போக்கு படத்திலும் அதுவே நடந்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ” என்கிறார் ஏகாம்பரம்

இன்னும் உயரங்களை தொட வாழ்த்துகள் ஏகாம்பரம் சார் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →