பிரம்மிக்க வைக்கும் ‘புறம்போக்கு’

Purampokku-Engira-Podhuvudamai-Movie-Stills-9

தற்காலத் தமிழ்த் திரையின் பொதுவுடமைக் குரலாக ஒலி(ளி)ப்பவர் இயக்குனர் எஸ் பி ஜனநாதன்.

இயற்கை , ஈ , பேராண்மை என்று இவர் இயக்கிய படங்கள் எல்லாமே,  சினிமாவை மக்களுக்கான பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் பயன்படுத்தாமல் மக்களுக்காகப் பேசி மக்களுக்கு அறிவுறுத்தும் மக்கள் சினிமாக்களாகவே இருந்தன .

அந்த வகையில் தனது அடுத்த படமாக , எஸ் பி ஜனநாதன் முதல் பிரதி அடிப்படையில் தனது  பைனரி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, யூ டி வி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி, கார்த்திகா ஆகியோர் நடித்து இருக்கும் படம்

மனித வாழ்வில்,  இந்திய,  தமிழக அரசியலில் சிறைகள்  என்பது எப்படி பயன்படுத்தப்பட்டன ;  படுகின்றன  என்பதையும் தூக்குத் தண்டனைக்கு எதிரான தனது குரலையும் பதிவு செய்யும் படமாக இதை உருவாக்கி இருக்கிறார் ஜன நாதன்.

சமூக நலனுக்காக போராடி புரட்சியாளனாக சித்தரிக்கப்பட்டு தூக்குத் தண்டனை கைதியாக ஆன  பாலுசாமி (ஆர்யா), சட்டம் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றும் குணம் உள்ள ஜெயிலர் மெக்காலே (ஷாம்) , தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் ஊழியர் எம லிங்கம் ( விஜய் சேதுபதி), பெண் புரட்சியாளர் குயிலி (கார்த்திகா) இந்த நான்கு பேரின் நகர்வுகளே இந்தப் படம் என்கிறார் ஜன நாதன்.

பொதுவாக சினிமாவில் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பதற்கு பின்னால் எந்த காரணமும் யாரும் வைப்பதில்லை. சும்மா வாய்க்கு வந்ததை பெயராக வைப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரங்களுக்கு ஜனநாதன் வைத்துள்ள பெயர்களுக்குப் பின்னால் அர்த்தம் உள்ள வரலாறு இருக்கிறது.

வெள்ளைக்காரன் ஆண்டபோது சுதந்திரத்துக்காகப் போராடி சிறை வைக்கப்பட்டவர்களை சுதந்திரம் அடைந்த பின் விடுதலை செய்து இருப்பார்கள் என்றுதானே சொல்வீர்கள்.? அதுதான் இல்லை  அப்படி விடுதலை செய்யாமல் வெள்ளைக்காரனை எதிர்த்து போராடிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை சுதந்திரம் அடைந்தபின் தூக்கில் போட்டார்கள் மதுரையில்! இந்திய அரசு நிர்வாகத்துக்கு மாற அவப்பெயரை உண்டாக்கிய அந்த சம்பவத்தில் அநியாயமாக கொல்லப்பட்டவரின்  பெயர்தான் பாலுசாமி .

இந்தியாவின் அறிவுப்பூர்வமான கல்வியை அழித்து ஆங்கிலேயர்களுக்கு கிளார்க்குகளை உருவாக்கும் ஆட்டு மந்தைக் கல்வியை ஏற்படுத்தியதோடு , இந்திய தண்டனை சட்டத்தையும் எழுதியவர் மெக்காலே.

Purampokku-Engira-Podhuvudamai-Movie-Stills-5

உலக அளவில்,  நாட்டின் நன்மைக்காக முதல் மனித வெடிகுண்டாக தன்னுயிரை தியாகம் செய்தது, பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் வேலு நாச்சியார் படையில் பணியாற்றிய குயிலி என்ற ஒரு பெண்தான்.

இவர்களது பெயர்களையே தனது கதாபாத்திரங்களுக்கு சூட்டி இருக்கிறார் ஜனநாதன். அவரது ஜனநாதனின் படம் எவ்வளவு பொருள் பொதிந்த ஒன்றாக இருக்கும் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும் ?

மக்களுக்கான புரட்சியாளன் பாலுசாமியை,  ஜெயிலர் மெக்காலே சட்டத்தின் படி தூக்கில் போட முயல , அந்தத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் ஊழியன் எம லிங்கம் தயங்க, எம லிங்கத்தை தங்கள் பக்கம் ஈர்த்தது பாலு சாமியா இல்லை மெக்காலேவா என்பதே இந்தப் படம்

Purampokku-Engira-Podhuvudamai-Movie-Stills-12

“படத்துக்கு புறம்போக்கு என்று ஒரு திட்டல் வார்த்தையை வைத்து இருக்கிறீர்களே?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லும் ஜன நாதன்

“புறம்போக்கு என்பது பேச்சு வழக்கில் தவறான வார்த்தையாக ஆகி விட்டது.  ஆனால் அது நல்ல வார்த்தைதான் . குளக்கரை, மயானம் , ஏரிப் பகுதி , மேய்ச்சல் நிலம் இதெல்லாம் புறம்போக்கு நிலங்கள்தான். இவை இல்லாவிட்டால் மக்கள் நிலைமை என்ன ஆவது ? அரசே புறம்போக்கு என்ற சொல்லுக்கு வேஸ்ட் லேண்ட் என்று பொருள் சொல்கிறது . ஆனால் அது வேஸ்ட் லேண்ட் இல்லை . பயனுள்ள நிலம்தான் . தஞ்சை பகுதிகளில் புறம்போக்கு நிலங்களே இல்லாத காரணத்தால் பஸ் ஸ்டான்ட் கட்ட இடம் இல்லாமல் அரசே தவிக்கிறது. எனவே புறம்போக்கு என்பது உண்மையில் தவறான வார்த்தை அல்ல ” என்கிறார் .

Purampokku-Engira-Podhuvudamai-Press-Meet-Photos-11

படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் மூன்று பாடல்களையும் , படத்துக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில், கலை இயக்குனர் செல்வகுமாரால்  போடப்பட்ட ஜெயில் செட் பற்றிய ஆவணப் படத்தையும் காட்டினார்கள்.

அந்த ஆவணப் படத்தில் ஜெயில் செட் உருவாக்கப்பட்ட விதத்தையும் அந்த செட்டின் பகுதிகளை படப்பிடிப்பில் எப்படி பயன்படுத்தினோம் என்பது பற்றியும் ஜனநாதன்  தோன்றி விளக்க விளக்க,  உடனே உடனே அந்தந்தப் பகுதிகளில் எடுக்கப்பட்ட காட்சிகளையும் இணைத்துக் காட்டிய விதம் அருமை (இந்த ஆவணப் படத்தை இயக்கியவர் ஜன நாதனின் உதவியாளரான ரோகாந்த் ).

 ஆவணப் படத்தில் இயக்குனர் ஜன நாதன் “காலகாலமாக ஜெயில் என்பது குற்றவாளிகளை வைத்திருக்கும் இடமாக மட்டும் இருக்கவில்லை. மக்கள் நலனுக்காக புதிய புரட்சிகரமான அரசியல் சிந்தனைகள் உருவாகும்போது அதை ஒடுக்கும் இடமாகவும் இருந்திருக்கிறது.” என்று குறிப்பிடும் விஷயம் மிகுந்த வலுவான சிந்தனை அலையை ஏற்படுத்துகிறது. படத்துக்கான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகமாக்குகிறது.

Purampokku-Engira-Podhuvudamai-Press-Meet-Photos-9

மேலும் படத்தைப் பற்றிப் பேசிய ஜன நாதன் “படத்தில் ஸ்ரீகாந்த் தேவா அமைத்திருக்கும் பின்னணி இசை வெகுவாக பாராட்டப்படும். படத்துக்கு மிகப் பெரிய பலமாக அது அமைந்திருக்கிறது. கார்த்திகா ஒரு ஆக்ஷன் காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்தார் . அதை ஒரே கேமராவை பயன்படுத்தி ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மிக சிறப்பாக படம் பிடித்தார்.  ஷாம் மெக்காலே கேரக்டரில் சரியாகப் பொருந்தி இருக்கிறார் ஆர்யாவை  இதுவரை பார்க்காத கோணத்தில் இந்தப் படத்தில் பார்க்க முடியும். விஜய் சேதுபதி மிக சிறப்பாக நடித்துள்ளார் . ” என்றார் .

ஷாம் பேசும்போது ” இயற்கை படத்தை எனக்கு கொடுத்த ஜனநாதன் சாரின் இந்தப் படத்தில் நடிப்பது எனக்குப் பெருமை. பொதுவாக ஜெயிலர் கேரக்டர் என்றால் முரட்டு உடம்பு. முரட்டு மீசை இவற்றின் மூலம் அதை காட்சிப்படுத்த முயல்வார்கள். ஆனால் ஜனநாதன் சார் என்னிடம் பாடி பில்டிங் செய்ய வேண்டாம் என்றார் . மீசை வைக்கக் கூடாது என்றார் . நடிப்பின் மூலமே அந்தக் கேரக்டரை உணவைக்க வேண்டும் என்றார் . அப்படியே செய்து இருக்கிறேன்.

பொதுவாக முதல் பிரதி அடிப்படையில் பணம் வாங்கி படம் எடுப்பவர்கள் முதலில் ஒரு தொகையை தங்களுக்கென்று ஒதுக்கிக் கொண்டுதான் படம் எடுப்பார்கள். ஆனால் ஜன நாதன் வாங்கிய மொத்த பணத்தை மட்டும் அல்லாது சொந்தப் பணத்தையும் செலவு செய்து படத்தை அற்புதமாக எடுத்து இருக்கிறார் ” என்றார் .

Purampokku-Engira-Podhuvudamai-Press-Meet-Photos-8கார்த்திகா பேசும்போது ” குயிலி மாதிரி ஒரு கேரக்டர் இனி எனக்கு அமையுமா என்று தெரியவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சி , வசனங்களுக்கு பின்னால் ஜன நாதன் சொன்ன வரலாற்று செய்திகளை கேட்கும்போது பிரம்மிப்பாக இருந்தது ” என்றார் .

யூ டி வி மோஷன் பிக்சர்ஸ் துணை தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன் ” இந்தப் படம் எங்கள் யூ டி வி நிறுவனத்தின் மாபெரும் கவுரவமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜெயில் கட்சிகளை  பார்த்திருக்கிறோம் . அனால் இந்தப் படத்தில் ஜெயில் காட்சிகள் தரும் உணர்வு உங்களுக்கு ரொம்ப புதுசாக இருக்கும் . அதே போல படத்தில் ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி, கார்த்திகா நான்கு பேருக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து அதே நேரம் சுவையாக திரைக்கதையை ஜன நாதன் அமைத்து இருக்கும் விதத்தில் பிரம்மித்து விட்டேன் .” என்றார் .

Purampokku-Engira-Podhuvudamai-Press-Meet-Photos-17அது எப்படி சாத்தியப் பட்டது என்று ஜன நாதனிடம் கேட்டால் ” நான் ஆர்யா, ஷாம் , விஜய் சேதுபதி , கார்த்திகா இவங்களுக்கு எல்லாம் உண்மையா இருக்கணும்னு நினைக்கல  . நான் உருவாக்கிய பாலுசாமி, குயிலி, மெக்காலே , எம லிங்கம் ஆகிய நான்கு கேரக்டர்களுக்கு உண்மையாக இருந்தேன் . அதனால் சாத்தியப்பட்டது ” என்றார் .

இவருதான்யா டைரக்டர் !

‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ வரும் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →