இதில் கிண்டல் கேலி எதுவும் இல்லை நிச்சயமாக அது ஒரு வித்தியாசமான பாடல் வெளியீட்டு விழாதான். எப்படி ?
பொதுவாக பாடல் வெளியீட்டு விழா என்றால் படா படா பிரமுகர்கள் மேடையில் வீற்றிருப்பார்கள். அந்த படத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் மேடைக்கு கீழே நிற்பார்கள். அல்லது மேடையை விட்டு விழுந்துவிடுவது போன்ற ஆபத்தான பொசிஷனில் மேடையிலேயே நிற்பார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் எல்லாம் கீழே அமர்ந்திருக்க , படம் சம்மந்தப்பட்ட சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மேடையில் இருந்தார்கள் .
அப்புறம்… பெரும்பாலான பாடல் வெளியீட்டு விழாக்களில் படத்தில் நடித்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் அரங்குக்குள் கூட உட்கார முடியாது . ஆனால் அந்தப் படத்தில் நடித்த கன்னியப்பன் என்ற வயதான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பெரியவர் ஒருவர் மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்ததோடு பாடல்களை படத்தில் நடித்த சிறுவர்கள் வெளியிட கன்னியப்பன் பெற்றுக் கொண்டார் .

ரஜினியின் நண்பரும் அருணாச்சலம் படத்தின் தயாரிப்பாளருமான கே.எஸ்.நாகராஜன் ராஜா கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி (இன்னொரு பாடலாசிரியர்… ‘இயக்குனர்’ யார் கண்ணன்) தேஜு பிலிம்ஸ் தயாரிக்க நித்யானந்தத்தின் இயக்கத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிறுவர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் புதியதோர் உலகம் செய்வோம் என்ற படத்தின் ஆடியோ விழாவில்தான் இந்த நிகழ்வுகள் !

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி கூட “எல்லா பெருசுகளும் கீழயே உட்காந்து இருக்கு” என்றார் .
படத்தில் இசையமைப்பாளர் பிரவீன் சைவி இசைக்கருவிகளே இல்லாமல் ஒரு பாடலை உருவாக்கி இருக்கிறார். தொடர்ந்து 54 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற குமரன் என்ற சிறுவன் இந்தப் படத்தில் இருக்கிறான் .
இந்த நாட்டில் லஞ்ச ஊழளை ஒழிக்க வேண்டும் என்றால் அந்த உணர்வை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும் என்றார் அப்துல்கலாம் . அப்படி லஞ்ச ஊழலுக்கு எதிராக உணர்வு பெறும் குழந்தைகள் பெற்றோர்களை திருத்துவதுதான் படத்தின் கதையாம். கிட்டத்தட்ட தெலுங்கில் இதே கதையை வைத்து ரேப்பட்டி பவுர்லு என்று ஒரு படத்தை எடுத்தார் பிரபல இயக்குனர் கிருஷ்ணா . அது தமிழில் டப் செய்யப்பட்டு புரட்சிப் பூக்கள் என்ற பெயரில் வெளிவந்தது (அதை நான் பார்த்திருக்கேன் . படத்தில் டென்ஷன் பரபரப்பு இருக்குமே ஒழிய உணர்வு பூர்வமாக அமையவில்லை . படத்தை இயக்கும்போது பாதியிலேயே கிருஷ்ணா மறைந்து விட்டதால் அதற்கு அவரை குறை சொல்ல முடியாது )
ஆடியோ விழாவில் பல தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் பேச (முந்தா நாலா ரிலீஸ் ஆன பப்பாளி படத்துக்கு தியேட்டர்ல ஒம்போதே பேருதான் உட்கார்ந்து படம் பாக்கறாங்க ” என்றார் ஒருவர் ) …

கடைசியாக பேசிய டி.ராஜேந்தர் முந்தைய நாள் தகடு தகடு பட விழாவில் பேசிய அதே…. ‘டிக்கட் விலையை குறைச்சாதான் சினிமா உலகம் உருப்படும் ‘ என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாகப் பேசினார் ” டிக்கட் விலையை விட சில தியேட்டர்ல டூ வீலர் பார்க்கிங் கட்டணம் அதிகமா இருக்கே . அது ஏன்? தியேட்டருக்குள்ள ஒரு பிஸ்கட் வாங்கினா கூட அதுக்கு மூணு மடங்கு விலை இருக்கே . ஏன் ?” என்று கேள்விகளை கேட்டு அரங்கை கைதட்டலால் அதிர வைத்தார் (மேடையில் இருந்த கமலா தியேட்டர் உரிமையாளர் கணேஷ் முதல் கேள்விக்கு கை தட்டினார். அடுத்த கேள்விக்கு அமைதியானார் ).
கடைசியாக “பெரிய படங்களுக்கு ஒரு கட்டணம் சிறிய படங்களுக்கு ஒரு கட்டணம் என்று பிரித்து வசூலிக்கும் முறையை முதல்வர் ஏற்படுத்தி சினிமா உலகைக் காக்க வேண்டும் . அப்போதுதான் புதியதோர் சினிமா உலகம் செய்ய முடியும் “என்று கூறி முடிக்க .. இங்கும் ராஜேந்தர் ராஜ்யம்தான .