அநியாயத்திலும் அநியாயமப்பா இது !
பொதுவாக திருட்டு விசிடி தயாரித்து விற்கும் தறுதலைகள் தயாரிப்பாளருக்கு வரும் லாபம் மற்றும் படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதால் படைப்பாளிகளுக்கு வரும் அடுத்தகட்ட வாய்ப்புகள், இவற்றைத்தான் திருடுகிறார்கள் என்று பார்த்தால் ….
பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்கு திருட்டு விசிடி போட்ட பண்ணாடைகள் இன்னொரு பெரிய திருட்டையும் செய்து இருக்கிறார்கள் .
அங்கீகாரத் திருட்டு !
திருட்டு விசிடிக்காக அவர்களே தயாரித்திருக்கும் போட்டோ கவரில் படத்தின் பெயர் நடிகர் நடிகைகள் படத்தை எல்லாம் போட்டுவிட்டு, எழுத்து இயக்கம் என்ற இடத்தில் பார்த்திபனின் பேரை போடாமல் சக்திவேல் என்று ஒரு பெயரை போட்டு இருக்கிறார்கள். (திருட்டு விசிடி தயாரிக்கிற பயபுள்ளைகள் எதுக்கெல்லாம் ஆசைப்படுது பாருங்களேன் )
கோவை அருகில் உள்ள அன்னூரில் அஷ்ட லட்சுமி என்ற தியேட்டரில்தான் படத்தின் திருட்டு விசிடிக்கள் தயாரிக்கப்பட்டது என்பதை கண்டு பிடித்து விட்டார்கள் , அநேகமாக இன்னும் சில நாளில் அந்த தியேட்டர் சீல் வைக்கப்படலாமாம்.
படத்தின் திருட்டு விசிடியை பிடிக்க பாடுபடும் கதையை வேதனையோடு விவரிக்கிறார் பார்த்திபன் ” பர்மா பஜார்ல போய் நான் திருட்டு விசிடி விக்கிற ஆட்களை புடிச்சுட்டு போலீஸ்கிட்ட சொன்னா… அப்புறம் வந்து வழக்குப் பதிவு பண்றாங்க.
நான் திருட்டு விசிடியை புடிக்கப் போனாலே, விக்கிற ஆட்கள் என்னை அடிக்கிற மாதிரி வந்து சூழறாங்க . நான் முன்னயே உதைக்கணும்னு சொன்னேன் இல்லியா ? அந்த கோபம்! (சிரிக்கிறார்) அதனால கவனமாதான் சூழ்நிலையை கையாள வேண்டி இருக்கு.
நம்ம படத்து சிடியை டாய்லட் உள்ள மறைச்சு வச்ச பையில இருந்தெல்லாம், எடுத்து கொடுக்கறாங்க. நம்மை படைப்பை இப்படி நாற விடறாங்களேன்னு வேதனையா இருக்கு .
நான் அவங்க கிட்ட கேட்டேன் . ‘ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாரின் சாராயத்தை கொண்டு வந்து ரெண்டாயிரத்துக்கு விக்கறீங்க. ஆனா அதுல அந்த முதல் ஆயிரம் ரூபாய் அதை தயாரிச்சவனுக்கு நியாயமா போயிடுது . ஆனா திருட்டு விசிடில சினிமாக்காரங்களுக்கு எதுவுமே வரலியே ? நீங்க இப்படி ஏமாத்தலாமா?”ன்னு கேட்டேன். பதிலே இல்ல.
நம்ம படம் தியேட்டர்ல ஓடற வரை நம்ம படத்து திருட்டு விசிடியை நாம தடுத்துக்க வேண்டியதுதான் ” என்றவர்…
படத்துக்கு கிடைக்கும் பாராட்டுகளில் உற்சாகமாகவும் இருக்கிறார் . “எங்க டைரக்டர் பாக்யராஜ் மனம் விட்டு பாராட்டினது ரொம்ப சந்தோஷமா இருந்தது . ஏன்னா அவரு ராமாயணத்திலேயே ஏழு தப்பு சொல்றவரு ” என்கிறார் .
திருட்டு விசிடி பிடிக்கும் வேலை முடிந்த உடன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்ட் டூ ஆரம்பிக்கிறார் பார்த்திபன். படத்தின் பெயர் உப்புமா கம்பெனி. படத்தில் பார்த்திபனும் தம்பி ராமையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மற்றவர்களும் அப்படியே முக்கி நடிக்க வாழ்த்துவோம் !