
எங்கள் படத்தில் கதையே இல்லை என்று சொல்லிக்கொண்டு, சினிமா எடுக்கப் போராடுபவர்களை களமாக கொண்டு வெளியாகி இருக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் …
‘நல்ல கதை இல்லாத படம் ஓடாது . சினிமா எடுப்பதை பற்றி எடுக்கப்படும் படம் ஓடாது’ என்கிற இரண்டு விதிகளையும் உடைத்திருக்கிறது என்று சந்தோஷப் படுகிறது அந்த படக் குழு .
படத்தின் வெற்றியை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கொண்டாடினார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் .படம் பற்றி பேசும் சிறப்பு பேச்சாளராக கவிஞர் மற்றும் தொலைக்காட்சி விவாதப் புகழ் மனுஷ்யபுத்திரன் வந்திருந்தார்.
பொதுவாக இது போன்ற வெற்றி விழாக்களில் அந்த வெற்றிக்குக் காரணமான முக்கிய நபர் அந்த மேடையில் கம்பீரமாக வீற்றிருப்பார் . ஆனால் இந்த விழாவில் மேடையில் எல்லோரையும் ஏற்றிய பார்த்திபன் தேவையான சமயத்தில் மட்டும் மேடை ஏறினார் . மற்றவர்கள் பேசும்போது எல்லாம் மேடைக்குக் கீழே நின்றுகொண்டும் பத்திரிக்கையாளர்களோடு அமர்ந்தும் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருந்தது … வித்தியாசமான கம்பீரம் !

பத்திரிக்கைகளுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி (பத்திரிக்கையும் ஒரு மீடியாதான் . ஆனா எல்லோருமே பத்திரிக்கையை மீடியா வரிசையில் இருந்து பிரித்து எழுதுவதை பார்த்திபனும் செய்திருந்தது ஆச்சர்யம் ) என்று எழுதப்பட்ட ஒரு பெரிய கேக் வெட்டப்பட்டு அந்த கேக் சிறு சிறு துண்டுகளாக்கப்பட்டு பத்திரிக்கையாளர்களுக்கு – நிஜமாகவே – வழங்கப்பட்டது.
படத்தைப் பற்றி பேசிய மனுஷ்ய புத்திரன் ” படத்தில் பிரைவசி இல்லாமல் கதாநாயகி படும் பாடு ஒரு தனிக்கதை, இறந்தவர் இருப்பதாக எண்ணி பேசும் வாட்ச் மேன் கேரக்டர் ஒரு தனிக் கதையாக செய்ய வேண்டிய விசயம். திருடன் அசிஸ்டன்ட் டைரக்டராக ஆவதும் அது போலதான் . இது போல இன்னும் பல கதைகள் படத்தில் உள்ளன. இப்படி பல படங்களுக்கான கதைகளை ஒரே படத்தில் அடக்கி , அதை கதையே இல்லாத படம் என்று சொல்லி மேஜிக் செய்து இருக்கிறார் ” என்று துவங்கி , ஆழமாக படத்தை பற்றி பாராட்டி பேசினார் .

பார்த்திபன் பேசும்போது “இந்தப் படத்தின் வெற்றி எனக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது . ரொம்ப நெகிழ்வாக இருக்கிறது , இந்த வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. நான் படத்தில் செய்திருப்பதை எல்லாம் மனுஷ்ய புத்திரன் விவரித்து சொல்லும்போதுதான் அவர் எவ்வளவு ஆழமாக பார்க்கிறார் என்பது புரிகிறது ” என்றவர்,
ஆனந்த விகடன் தனது படத்துக்கு குறைவான மார்க் கொடுத்திருப்பது மற்றும் குமுதம் இதழ் அஞ்சான் படத்துக்கு நன்று என்றும தனது படத்துக்கு ஒகே என்று ரேட்டிங் கொடுத்திருப்பது போன்றவை குறித்த தனது வருத்தத்தை ” மார்க் கொடுக்கிறது ஒரு பண்பு . போடற மார்க்கை வாங்கிக்க வேண்டியதுதான்.” என்றும் “ஒகே என்று ரேட்டிங் கொடுத்தாலும் நன்று. நன்று என்று கொடுத்தாலும் ஒகே ” என்று மறைமுகமாக குறிப்பிட்டார் .

பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென்று ஒரு விசிடியை எடுத்துக் காட்டி , ” இது என் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தோட திருட்டு விசிடி . இன்னிக்குதான் பர்மா பஜார்ல வாங்கிட்டு வந்தேன். இதை எடுத்துக்கிட்டு போய் கமிஷனர் கிட்ட சொன்னா ‘இப்படியெல்லாம் வருதா?’ன்னு கேட்கறார் . நான் அவர் கிட்ட ‘ இல்ல சார் நாங்க இந்த புகாரை எடுத்துகிட்டு ஐநூறு வருஷமா இங்க வந்துட்டு இருக்கோம் ‘ னு சொன்னேன்.
நான் எந்த மொழிப் படத்தையும் திருடி கதை பண்ணல. அதனால்தான் என் படத்துக்கு திருட்டு விசிடி போடறது நியாயமே இல்ல .
கர்நாடகாவுல திருட்டு விசிடியே இல்ல. காரணம் அங்க உள்ள ஒரு பிரமுகர் யாராவது திருட்டு விசிடி வித்தா உள்ள பூந்து அடிச்சு ஒதைக்கிறார் . அது மாதிரி நாமும் பண்ணாதான் சரி வருமோ என்னவோ ?”
– என்று பேசியவரை கூட ஒரு தப்பும் இல்லை .
ஆனால் மறுபடியும் மைக்கை வாங்கிய மனுஷ்யபுத்திரன் “போன ஆட்சியில் திருட்டு விசிடி இல்லை” என்று ஆரம்பிக்க, அரசியல் பேசாதீங்க” என்று சில நிருபர்கள் அவரை நோக்கி குரல் கொடுக்க, ஒரு சின்ன ரசாபாசம் .
”பார்த்திபன் தனது நெடுநாள் நண்பர்” என்று பேச்சின் போது சொன்னார் மனுஷ்யபுத்திரன் . இங்கே அரசியல் பேசுவது பார்த்திபனுக்கு தர்மசங்கடத்தை தரும் என்பது மனுஷ்யபுத்திரனுக்கு தெரியாதா ?