ஆதர்ஷ் சித்ராலயா சார்பில் ரவிராஜா பினிசெட்டி தயாரிக்க, அவரது இளைய மகன் ஆதி ஹீரோவாக நடிக்க, மூத்த மகன் சத்யா பிரபாஸ் தனது முதல் படமாக எழுதி இயக்கி இருக்கும் படம் யாகாவாராயினும் நாகாக்க .
படம் பார்க்கும் ரசிகர்கள் காக்கப்படுவார்களா? பார்க்கலாம் .
ஒழுங்காக வேலைக்குப் போகாத காரணத்தால் அப்பா கிருஷ்ணனால் (ஆடுகளம் நரேன் ) கரித்துக் கொட்டபடுகிற– அதே நேரம் அம்மாவால் (பிரகதி) செல்லம் கொடுக்கப்படுகிற– ஒரு நடுத்தர வர்க்க இளைஞன், சகா (ஆதி) .
அவனுக்கு மந்திரி மகன், எம்.பி. மகன் , கமிஷனர் மகன் என்று, மூன்று பண பலம் மற்றும் அதிகார பலம் நிறைந்த நண்பர்கள். சகாவைக் காதலிக்கும் இளம்பெண் கயல் (நிக்கி கல்ராணி).
சகாவின் அக்காவுக்கு திருமணம் நிச்சயம் ஆன நிலையில் , ஒரு நாள் சகாவின் நண்பர்கள் ஒரு உயர்தர ஹோட்டலின் உணவு விடுதியில் மது போதையில், பக்கத்து டேபிளில் அமர்ந்து இருக்கும் பெண்ணை (ரிச்சா பலோட் ) செல் போனில் படம் எடுக்கிறார்கள். அந்தப் பெண் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க, படம் எடுக்கும் நண்பன் அவளை மிகவும் அசிங்கமாகப் பேசுகிறான் .
அந்தப் பெண்ணின் தோழன் அதைத் தட்டிக் கேட்க, அவனையும் சகாவின் நண்பர்கள் அவமானப்படுத்துகிறார்கள். மிகக் கேவலமான வார்த்தைகளால் அவனைத் திட்டுகிறார்கள். அவன் நண்பர்களை அடிக்க, அங்கு வரும் சகாஅதைப் பார்த்து விட்டு, நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அவனை அடிக்கிறான்
வாய்ச் சண்டை கைகலப்பாகிறது. போலீஸ் வருகிறது . வந்த போலீஸ் சகாவின் நண்பர்கள் யாரென்று தெரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக சலாம் போட்டுப் பேசுகிறது . பொங்கி எழும் அந்தப் பெண்ணை, மரியாதைக் குறைவாக பேசும் போலீஸ் அதிகாரி, அவளை ”விபச்சாரக் கேசில் உள்ளே போடுவேன்” என்று மிரட்டுகிறார் .
‘நம் பக்கம் நியாயம் இருந்தும் இவ்வளவு அவமானமா?’ என்று, எரிமலையாகும் அந்தப் பெண் , நண்பர்களைப் பார்த்து ”இதுதான் நீங்கள் உயிர்வாழும் கடைசி நாள்” என்று எச்சரிக்கை விடுக்கிறாள் . அடுத்த நாள் முதல் நண்பர்கள் நால்வருக்கும் ஆபத்து ஆரம்பிக்கிறது .
சகாவின் பணக்கார நண்பர்களின் அப்பாக்கள் நம்ம ஊரு பெரும்புள்ளிகள் என்றால் , அந்தப் பெண் மும்பையைச் சேர்ந்த முதலியார் என்ற மாபெரும் தாதாவின் (மிதுன் சக்கரவர்த்தி )மகள். (நாயகன் படத்தில் கமல் ஏற்ற அதே வரதராஜ முதலியாரை நினைவு படுத்தும் கேரக்டர் ).
இந்த விஷயம் அறிந்து நடுங்கும் அந்த பெரும்புள்ளி அப்பாக்கள், முதலியாரிடம் இருந்து தங்கள் பிள்ளைகள் மூவரையும் காப்பாற்ற, ரகசிய இடத்தில் மறைத்து வைத்துக் கொள்கிறார்கள். அக்காவின் திருமணம் காரணமாக மறைவு வாழ்க்கைக்குப் போக முடியாத சகா, எந்த பலமும் இல்லாத நிலையில் தடுமாறுகிறான் .
ஒரு உள்ளூர் தாதா (பசுபதி) கொடுத்த ஆலோசனைப்படி மும்பை சென்று முதலியாரை சந்தித்து நேரடியாக மன்னிப்பு கேட்க போகிறான் . பல சிரமங்கள் ஆபத்துகளுக்கு இடையே முதலியாரை சகா சந்திக்க, அந்த நேரம் பார்த்து சகாவின் நண்பர்களால் அவமானப்படுத்தப்பட்ட, முதலியாரின் மகள் காணாமல் போகிறாள்.
சகாவின் அம்மா அப்பா அக்கா மூவரையும் கடத்திக் கொண்டு வரும் முதலியார் ” உன் நண்பர்கள்தான் என் மகளை ஏதோ செய்து இருக்கிறார்கள். அவளைக் கண்டுபிடித்துக் கொடுத்து விட்டு , அவளுக்கு இவ்வளவு அவமானம் மற்றும் சிரமங்கள் வரக் காரணமான உன் நண்பர்களையும் என்னிடம் ஒப்படைத்து விட்டு, உன் அம்மா அப்பா அக்காவை மீட்டுச் செல் ” என்று கூறுகிறார்.
அதற்காக சகா முயலும் போது, முதலியாரின் மகளின் பிணம் கடற்கரையில் ஒதுங்குகிறது. முதலியாரும் அவரது கூட்டமும் எரிமலையாக, சகாவின் குடும்பம் தப்பியதா ? நண்பர்களை சகாவால் காப்பாற்ற முடிந்ததா? என்பதே இந்தப் படம் .
சகாவின் நண்பன் குடிபோதையில் பேசிய மோசமான வார்த்தைகளால், முதலியாரின் மகளின் நண்பன் பொங்கி எழுந்து சண்டையிட்டதால், பிரச்னை பெரிதானது. எனவே நாவை அடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே படத்துக்கு இந்தப் பெயர் என்பது டைரக்டோரியல் விளக்கம் .
முதலில் அச்சு அசலாக, இது டைரக்டரின் படம் . படத்தின் நிஜமான ஹீரோ அவரே . படம் துவங்கும் கணத்தில் இருந்தே மேக்கிங்கில் மிரட்டுகிறார் சத்யா பிரபாஸ்.
ஒரு இளைஞன் கடலில் ஒரு படகின் கீழ் தளத்தில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருக்க, அவனை யாரோ கடத்திக் கொண்டு போய் இருக்கிறார்கள் போல என்று பார்த்தால், முதலியாரிடம் இருந்து தன் மகனை காப்பாற்ற அந்த இளைஞனின் (முதலியார் மகளை செல் போனில் படம் எடுத்தவன் இவனே ) அப்பாதான் , அவனை அப்படிக் கொண்டு போய் ஒரு படகின் ரகசிய அறையில் மறைத்து வைத்திருக்கிறார் என்ற, அந்த ஆரம்பக் காட்சியே…. திரைக்கதைத் துவக்கம் , மேக்கிங் இரண்டிலும் மிரட்டுகிறது .
படத்தின் கடைசி வரை , இப்படி காட்சிகளை வித்தியாசமாக துவங்கி முடிக்கும் விதமும் மேக்கிங் நேர்த்தியும் நம்மை வியக்க வைப்பதால்தான் இது இயக்குனரின் படம் என்றோம் .
கதாநாயகி கயலின் கதாபாத்திரம் மற்றும் குணாதிசயத்தை வடிவமைத்த விதமும் அட்டகாசம் .படத்தின் முதல் பாதியில் ரசிகர்களை ஆக்கிரமித்து மயங்க வைக்கும் கதாபாத்திரம் அது. . படத்திலேயே கயலிடம் சகா , “ஏன்டி .. உனக்கு என்ன, மௌன ராகம் கார்த்திக்னு மனசுல நினைப்பா ?” என்று கேட்பதன் மூலமே அந்தக் கேரக்டரை உணரலாம். (வசனம் எஸ் குமரேசன் – மற்றும் சத்ய பிரபாஸ் )
நட்பு , ஜாலி, காதல் , சந்தோசம் என்று வாழும் இளைஞனின் வாழ்வில் காய்கறி மார்க்கெட் வழியே கலவரம் நுழைவதைக் காட்டி,
இதுதான் கதையாக இருக்குமோ என்று சொல்லி விட்டு , ஒரு நிலையில் இன்னொரு முனையில் இருந்து பிரச்னையைக் கொண்டு வந்து, அப்புறம் அதோடு இந்த பழைய ரவுடிகளை செகண்டரியாக்கிச் சேர்த்து, திரைக்கதை வளர்த்த விதமும் அருமை .
படத்தில் நம்மை நூறு சதவீதம் கவர்வது சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு. காட்சிகளின் மூடுக்கு ஏற்ப காதல் , கண்ணீர், சந்தோசம் , திகில் , சோகம் , வலி, அதிர்ச்சி என்று எல்லா உணர்வுகளையும் சிந்தாமல் சிதறாமல் ரசிகனுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறது ஒளிப்பதிவு .
ஒரு பக்கம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் அதே நேரம் , லேசான ஒரு திரீ டைமன்ஷனல் எஃபெக்டையும் தருகிறது . ஒளிப் பயன்பாடு, வண்ணங்கள் பயன்பாடு இவை மிகப் பிரம்மாதம். இவை எல்லாவற்றையும் மீறி, இன்னும் முழுக்க ஈரம் காயாத ஓர் அதி அற்புத ஓவியம் போல ஜொலிக்கிறது.சபாஷ் சண்முக சுந்தரம்!
பிரஷன் பிரவீன் ஷ்யாமின் இசையில் பாடல்கள் மிக அருமை . அதற்குக் காரணம் இயக்குனர் சத்ய பிரபாஸ் கொடுத்திருக்கும் சிறப்பான சிச்சுவேஷன்களும் எடுத்திருக்கும் விதமும் . குறிப்பாக காதலியை கழட்டி விடுவது பற்றிய பாடலில், கூடவே ஆடும் அந்த மூன்று பரத நாட்டியப் பெண்கள் ஐடியா, வெகு ஏஸ்தட்டிக் !
பெண் போலீஸ் துரத்துவதில் இருந்து நாயகன் வெகு வேகமாக தப்பித்து ஓடி வந்தால் அதே வேகத்தில் கூடவே ஓடி வந்து முன்னால் நின்று ஆடுகிறார்கள் . ஹா ஹா ஹா ! தவிர ஆடும் அந்த பாரத நாட்டியப் பெண்களும் அவர்களின் எக்ஸ்பிரஷன்களும் கொள்ளை அழகு ! அழுத்தமான கை குலுக்கல் இயக்குனரே !
பின்னணி இசையும் காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது .
அமரனின் கலை இயக்கம் சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு இரண்டும், பாராட்டப்படும் லிஸ்டில்தான் இருக்கிறது .
ஆதி ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் மெனக்கெட்டு நடித்து இருக்கிறார் . நிஜமாகவே நிறைய அடி பட்டிருப்பார் போல. நிக்கி கல்ராணி மிக அழகாக…
நடித்தும் இருக்கிறார் . அப்பாவைப் பார்த்து சகாவுக்கு ஏற்படும் பயத்தை ரசிகனுக்கும் கடத்துகிறார் ஆடுகளம் நரேன் .
கொஞ்சம் ஓவர் ஆக்டிங் , கொஞ்சம் தமிழுக்கு அந்நியமான மாடுலேஷன் இருந்தாலும் , அவ்வப்போது ரசிக்கவும் வைக்கிறார் அம்மாவாக வரும் பிரகதி. இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் வரும் அக்கா தங்கைகளை ஒரு மாதிரி ஸ்டீரியோ டைப் ஆக்கி விட்டார்கள் . அதற்கு இந்தப் படத்தில் வரும் அக்கா கேரக்டரும் அதற்கு தப்பவில்லை .
முதன் முதலாக தமிழுக்கு வந்திருக்கும் மிதுன் சக்கரவர்த்திக்கு வரவேற்பு! அவர் யார் என்று தெரிந்தவர்களுக்கு அவர் கேரக்டருக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்படும் ‘நாயகன்’ பில்டப் சரியானதாகத் தோன்றும் . தெரியாத பாமர ரசிகனுக்கு ? எனினும் சிறப்பாக நடித்துள்ளார் மிதுன் .
சகாவின் நண்பன் பேசிய கெட்ட வார்த்தையால் பிரச்னை வரவில்லை . நம்மிடமும் பணபலமும் படை பலமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற — அந்த பணக்கார நண்பனின் – திமிரே பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் . எனவே நாகாத்தல் என்பது இங்கு முதன்மைப் பிரச்னை அல்ல.
ஆணவத்தால் ஆட்டம் போட்டு மாட்டிக் கொண்ட பணக்கார நண்பர்கள், அவர்களை காக்க விரும்பும் சகாவின் நட்பு, அதனால் பாதிப்புக்கு ஆளாகும் சகாவின் குடும்பம் ,
ஒரு மாபெரும் தாதாவாக இருந்தாலும் தன் மகளைக் காணோம் என்ற நிலையில் தன் பலத்துக்கு அப்பாற்பட்டு சகாவிடம் நியாயமான டீல் வைக்கும் முதலியாரின் பக்குவ கண்ணியம் ,
பண பலம் மற்றும் அதிகார பலம் கொண்ட நபர்கள் செய்யும் அநியாயங்களில் இருந்து அவர்களை காப்பாற்ற , எந்த ஒரு எளிய – நேர்மையான மனிதர்களையும் அசிங்கப்படுத்த தயங்காத சுயநல போலீஸ் அதிகாரிகள் ….
மேற்சொன்ன கதாபாத்திரங்கள் மற்றும் சூழல்களால் ஏற்பட்ட பிரச்னையை அந்தக் கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு பயணித்து, படத்தை முடித்து இருந்தால் , தனக்கும் ஏற்பட வாய்ப்புள்ள ஒரு அபாயத்தின் பிரதிபலிப்பாக இந்தப் படம் ரசிகனுக்கு படும் . படம் இன்னும் இன்னும் பிரம்மாதமாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருக்கும்.
அது இல்லாமல் படம் முடிவதற்கு அரை மணி நேரம் முன்பு புதிதாக ஒரு கேரக்டரை அதுவும் நார்மல் இல்லாத ஒரு கேரக்டரை நுழைத்து, அதை மெயின் கதையோடு சம்மந்தப்படுத்துவது நாவல்டியாக தெரியலாம். ஆனால் படத்தில் இருந்து ரசிகனை அந்நியப்படுத்தி, அதுவே படத்தின் சுரத்தை குறைகிறது .
என்னதான் ஹீரோவின் நண்பர்கள் என்றாலும், ஒரு பெண்ணிடம் முறை தவறி நடந்து கொண்டு, அதை நியாயமாக தட்டிக் கேட்டவர்களை அடித்து உதைத்து அசிங்கப்படுத்துவது அவமானப் படுத்துவது மாபெரும் குற்றம் ! அது போன்ற ஆட்களுக்கு துணை போய் ஒரு காவல் துறை அதிகாரியே அந்த பெண்ணுக்கு விபச்சாரிப் பட்டம் கட்டுவது மிக மிகப் பெரிய குற்றம் !!
அந்த நபர்களுக்கு கடுமையான – நேரடியான- தண்டனை கண்டிப்பாகத் தரப்பட வேண்டும் . அதில் நாயகன் சகாவின் நிலை என்ன என்ற ரீதியில் இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருந்தால் இந்தப் படம் ஏற்படுத்தி இருக்கும் அதிர்வே வேறு .
அதை விட்டு விட்டு சம்மந்தப்பட்ட அயோக்கியர்கள் ஹீரோவின் நண்பர்கள் என்பதற்காக , முதலியார் மகளின் நண்பனும் ஒரு அயோக்கியன் என்று சொல்வது மிகப் பெரிய கேரக்டர் அசாசினேஷன். தனது திரைக் கதையின் கூர்மையை தானே முனை மழுக்கிக் கொள்கிறார் இயக்குனர். அப்படியானால் படத்தை பார்க்கும் ரசிகன், எந்த கேரக்டரில்தான் தான் தன்னை பொருத்திப் பார்ப்பது ?
விளைவு?
நமது மனைவி அல்லது காதலி அல்லது தோழியோடு ஒரு இடத்தில் இருக்கும்போது நம்மிடம் யாராவது இப்படி முறை தவறி நடந்து கொண்டால் , சம்மந்தப்பட்டவர்கள் எப்படி தண்டிக்கப் பட வேண்டும் என்ற ரசிகனின் ஏக்கத்துக்கு, சரியான திருப்தியான பதில் சொல்லாமல் நிற்கியது படம் .
அதே போல , நாம் பெரிய ஆள் என்றால் நமக்கும் மேலும் பெரிய ஆள் என்று இருப்பான். எனவே பண பலம் படை பலம் இருக்கிறது என்பதற்காக ஓவராக ஆடக் கூடாது….
தனக்கு இருக்கு போலீஸ் என்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு இது போன்ற குற்றவாளிகளை காப்பாற்ற நல்லவர்களைக் கூட யோசிக்காமல் அவமானப்படுத்தும் அயோக்கியத்தனத்தை செய்யக் கூடாது….
–போன்ற நியாயமான பயங்களை ஏற்படுத்தவும் படம் தவறுகிறது. இது ஒரு சமூகக் குற்றம்.
எனினும் படம் உருவாக்கப்பட்ட விதம் ஏற்படுத்தும் பாதிப்பு பல நாள் மனதில் நிற்கும் .
யாகாவா ராயினும் நா காக்க …. பாதுகாப்பு
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————