இயக்குனர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “ராட்சசன் ” படத்தில்
வில்லன் கிறிஸ்டோபர் கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் மறக்க முடியாத ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தது.
முகம் முழுக்க அடர்த்தியான மேக்கப்போடு நிஜ உருவம் சற்றும் தெரியாத நிலையில் அந்த கிறிஸ்டோபர் பாத்திரத்தில் நடித்தது யார் என்பது சஸ்பென்ஸாகவே இருந்தது.‘ராட்சசன்’ வெற்றி விழா சந்திப்பில், கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் அறிமுகம் செய்யப்பட்டார்.
அவருடைய பெயர் சரவணன், படத்தில் கொடூரமான வில்லனாக இருந்த சரவணன் நேரில் மிகவும் பவ்யமான சாது போல தோற்றமளித்தார்.
மேடையில் அவரை அறிமுகபடுத்தும் வரையில் அவர் தான் கிறிஸ்டோபர் என்று யாரும் யூகிக்கவும் இல்லை.“படத்தில் சரவணனுக்கு போட்ட பிராஸ்தடிக் மேக்கப் போடவும் கலைக்கவும் தலா மூன்று மணி நேரம் ஆகும். நாள் முழுக்க சாப்பிட முடியாது .
ஸ்ட்ரா போட்டு ஜூஸ்தான் குடிக்க முடியும் . மூச்சு விடவும் கஷ்டம் . ஒவ்வொரு முறையும் மேக்கப் கலைக்கும்போது சில இடங்களில் பிய்த்து எடுக்க வேண்டி வரும் .
அப்போது புண்ணாகி விடும் . அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தார் சரவணன் ” என்றார் இயக்குனர் ராம்குமார் .“படம் முழுக்க அவரது நிஜ முகம் வரப் போவதே இல்லை என்ற நிலையிலும் அவர் அவ்வளவு கஷ்டப்பட்டார். அதுதான் பெரிய விசயம்” என்றால் விஷ்ணு .
“சரவணனை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்” என்றார் தயாரிப்பாளர் டில்லி பாபு
நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்ந்து போய் மென்மையாக பேசிய சரவணன் , ” என் சொந்த ஊர் திருச்சி . பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளேன் . இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய அடையாளம் தந்துள்ளது . வாய்ப்புக் கொடுத்து இயக்குனர் ராம் குமார், நடிகர் விஷ்ணு விஷால், தயாரிப்பாளர் டில்லி பாபு ஆகியோருக்கு நன்றி ” என்றார் .
சினிமாவில் முகம் தெரிபவருக்கே அங்கீகாரம் கொடுக்க மறுக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்த சரவணனை மேடை ஏற்றி ,
அங்கீகார வெளிச்சம் பாய்ச்சிய இயக்குனர் ராம் குமார், தயாரிப்பாளர் டில்லி பாபு, நாயகன் விஷ்ணு விஷால் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள் .