கண்ணன் ரவி குழுமம் சார்பில் திட்டக்குடி கண்ணன் ரவி தயாரிக்க, சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு , சஞ்சய், அருள்தாஸ்,, பி எல் தேனப்பன் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கி இருக்கும் படம் .
( ‘இராவணக் கோட்டம்’ என்று எழுதுவதே சரியான தமிழ். எல்லோரும் எட்டு எழுத்து வரக்கூடாது என்பதற்காக மெய்யெழுத்துக்களைக் கொல்வார்கள். ஆனால் ‘இராவணக் கோட்டம்’ என்ற பெயரில் சரியான தமிழ் இயல்பாக இருந்தும் இவர்கள் க் என்ற எழுத்தை வெட்டி எரிந்து இராவண கோட்டம் என்று போட்டு, தமிழ்க் கொலை செய்து எட்டு எழுத்துக்கு விரும்பி வந்திருக்கிறார்கள். ஏதாவது ‘ஆன்ட்டி’ சென்டிமென்ட்டாக இருக்கும் ).
ராமநாதபுரம் மாவட்டக் கிராமம் ஒன்று . மேலத் தெரு கீழத் தெரு என்று சாதிப் படிநிலைக்கு ஏற்ப தெருக்கள். மேலத்தெரு பெரிய மனிதர் ஒருவர் (பிரபு) . பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிம்பம் போன்ற கதாபாத்திரம் இது . கீழத் தெரு பெரிய மனிதர் ஒருவர் (இளவரசு) . ஒரு வாதத்துக்கு அம்பேத்கார் போல என்று வைத்துக் கொள்ளலாம். இவர் குடிகாரர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். எனவே அந்த ஊருக்குள் சாதிச் சண்டை இல்லை.
மேலத் தெரு பெரிய மனிதரின் மகன் ஒருவன் ( சாந்தனு) . கீழத் தெரு பெரிய மனிதரின் மகன் ஒருவன் (சஞ்சய்) . இருவரும் பங்காளிகள் என்று அழைத்துக் கொள்ளும் அளவுக்கு நண்பர்கள் .
இரு தரப்பு ஒற்றுமை காரணமாக ஊருக்குள் எந்த கட்சிக் கொடிக்கும் அனுமதி இல்லை. இவர்களுக்குள் சண்டை மூட்டி விட்டு அரசியல் குளிர்காய ஒரு எம் எல் ஏ வும் ( அருள்தாஸ்) ஒரு மந்திரியும் ( தேனப்பன்) முயல்கிறார்கள். இதற்கு கீழ்த் தெருவைச் சேர்ந்த சிலர் துணை போகின்றனர் . பங்காளிகள் என்று அழைத்துக் கொண்டு நெருக்கமாக வாழும் நண்பர்களைப் பகையாளிகள் ஆக்கினால் ஊருக்குள் சாதிச் சண்டை வரும் என்று எண்ணி, அவர்கள் செயல்படுகின்றனர்.

மேலத் தெரு பெரிய மனிதரின் மகனும் அவன் அத்தை மகளும் குடும்பச் சண்டை காரணமாக ரகசியமாகக் காதலிக்கின்றனர். ஆனால் கீழத் தெரு பெரிய மனிதரின் மகனிடம் , ” அவள் உன்னைத்தான் காதலிக்கிறாள்” என்று லாஜிக்கே இல்லாத நாடகத்தனத்திலும் நாடகத்தனமான காட்சிகள் மூலம் கீழ்த் தெரு ஆட்கள் நம்ப வைக்கின்றனர். ஒரு நிலையில் நாயகன் நாயகியின் உண்மைக் காதல் தெரிய வரும்போது , நண்பன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக நம்புகிறான் கீழத் தெரு பெரிய மனிதரின் மகன்.
நட்பு உடைகிறது .
கீழத் தெரு பெரிய மனிதரின் மகன் துரோகியாகிறான் .
ராமநாதபுரம் மண்ணின் தொடர் வறட்சிக்குக் காரணமாக சீமைக் கருவேல மரங்கள் பற்றி அறிந்து கொள்ளும் பெரிய தலைகள் இரண்டும் அவற்றை அகற்ற திட்டம் போட, அதை தடுக்க நினைக்கும் அரசியல் கூட்டம் இருவரையும் கொல்கிறது . மேலும் சீமைக் கருவேல மரங்களை வளர்ந்து ராமநாதபுரம் மண்ணை மலடாக்கி மக்களை வெளியேற்றி அங்கே இருக்கும் கனிம வளங்களை வெட்டி எடுக்க பன்னாட்டுக் கம்பெனிகள் , கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் திட்டமிட, நடந்தது என்ன என்பதே படம்.
படத்தின் மிகப் பாராட்டத்தக்க அம்சம் சாந்தனு, சஞ்சய் , அருள்தாஸ் ஆகியோரின் ஒத்துழைப்பு. படத்துக்கு ஏற்ற தோற்றம் வருவதற்காக வெயில் காய்ந்து கருவாடு ஆகி, வறுத்து வெறுத்து , வியர்வை, ரத்தம் சிந்தி உழைத்து இருக்கிறார்கள்.
நிறைய செலவு செய்து தயாரித்து இருக்கிறார் கண்ணன் ரவி
லொகேஷன் தேர்ந்தெடுப்பு, மாண்பு மிக்க அந்த மண்ணின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களை காட்சிப்படுத்துவது இவற்றில் வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் .
ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு யாவையும் ஒகே.

மற்றபடி எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.
கருவேல மர அரசியல் அதன் பின்னால் உள்ள கார்ப்பரேட் சதிகளைச் சொல்வது தேவையான ஆணி இல்லையா என்ற கேள்வி வரும் . அது தேவையான ஆணிதான். ஆனால் அதை தப்பான இடத்தில் அடித்து இருக்கிறார்கள் படத்தில் .
தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மர விதைகளைத் தூவ அனுமதி கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர் .அவர் மிகப் பெரிய சமூக அறிவியல் அறிவும் கொண்ட தலைவர்தான் என்றாலும் இதன் பின்னால் உள்ள வஞ்சக அறிவியல் அவருக்கு தெரியாது . கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சும் . அதனால் நீர் வளம் குறையும் . விவசாயம் பாதிக்கப்படும் . அதை அழிப்பது கஷ்டம் என்பது எல்லாம் அப்போது அவருக்கு மட்டுமல்ல. தமிழ் நாட்டுத் தலைவர்கள் யாருக்கும் தெரியாது . இந்தியாவில் அதற்கு இடம் கொடுத்த டெல்லி அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் தெரிந்து இருக்கலாம்.
காமராஜரிடம் ”இந்த மரம் வெட்ட வெட்ட வேகமாக வளரும் “என்றார்கள் . காமராஜர் “சரி ஏழை மக்கள் அடிக்கடி வெட்டி விறகு விற்றாவது பிழைத்துக் கொள்ளட்டும் ” என்றுதான் அனுமதி கொடுத்தார் .
ஆனால் இந்தப் படத்தில் நேரடியாக காமராஜர் பெயரைச் சொல்லவில்லை என்றாலும் ” மண்ணை மலடாக்கி , மக்களை விரட்டி , கனிம வளங்களை கொள்ளையடிக்க அந்நிய நாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கோடி கோடிகோடியாக லஞ்சம் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரத்துக்கு அனுமதி கொடுத்த அரசியல்வாதிகள் ” என்று மறைமுகமாக காமராஜரைத் தாக்கும் ஒரு வசனத்தை ,அந்தக் காமராஜரின் சீடராகிய ச நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான் இளைய திலகம் பிரபு வாயாலேயே பேச வைத்தது எல்லாம் .. ஆஹா .. அபாரம்.. பேஷ்.. பேஷ்.. பேஷ்… ரகம், சாகும்போது நூற்றிச் சில்லறை ரூபாய் இரண்டு ஜோடி சட்டை வேட்டி தவிர ஏதும் இல்லாமல் செத்துப் போன தலைவர் காமராஜர்.

எனினும் படத்தில் இப்படி பழி போடக் காரணம் , அரசியல் ரீதியாக அன்று காமராஜருக்கும் பசும் முத்து ராமலிங்கம் அய்யா அவர்களுக்கும் இருந்த பகைதான். . இன்றைய நிலையில் இருந்து பார்த்தால் அவர்கள் இருவருமே உயர்ந்த சிறந்த மாபெரும் தலைவர்கள் . ஆனால் பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ் பாடும் படத்தில் இப்படி காமராஜர் அசிங்கப்படுத்தப்பட்டு இருப்பது
திட்ட மிட்ட வஞ்சகமே என்பது புரிகிறது.
இன்னொரு பக்கம் படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும் விட்டு வைக்கவில்லை.
பொதுவாக குடிகாரன் குடிக்காதவன் , நல்லவன் , கெட்டவன் , நம்பிக்கையானவன் , துரோகி , வஞ்சகன் …இவர்கள் எல்லா ஜாதிகளிலும் தெருக்களிலும் உண்டு . ஆனால் இந்தப் படத்தில் கெட்டவர்கள் , வஞ்சகர்கள், துரோகிகள் எல்லோரும் கீழத் தெரு ஆட்களாகவே இருக்கிறார்கள். மேலத் தெரு ஆட்களில் அப்படி எந்த எந்தக் கேரக்டரும் மருந்துக்கும் இல்லை.
கீழத் தெரு தலைவர் கேரக்டர் நல்லவராக இருக்கிறார் . ஆனால் அவரும் குடிகாரராக இருக்கிறார். மேலத்தெரு ஆட்கள் யாருமே குடிகாரர்கள் இல்லை.
இது இன்னொரு வஞ்சகம்.
இந்த மண்ணைப் பொறுத்தவரை ராவணன் என்பவன் நல்லவன் . ஆனால் சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை ராவணன் கெட்டவன்.
இவர்கள் இந்த மண்ணுக்குரிய ராவணக் கோட்டத்தை எடுப்பதாகச சொல்லிக் கொண்டு சனாதனம் சொல்லும் ராவணனின் கோட்டத்தை எடுத்துள்ளார்கள்.
இன்னும் விரிவான காணொளி விமர்சனத்துக்கு …
https://youtu.be/7zm4tFRnMog