நெகிழ்வின் ஆழத்திலும் மகிழ்வின் உச்சத்திலும் நின்று பேசுகிறார் நடிக்ர ரகுமான் . இருக்காதா ?
முப்பது வருடம் நான்கு மாதம் ஏழு நாட்களுக்கு முன்பு வெளிவந்த நிலவே மலரே படத்தின் மூலம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன ரகுமானுக்கு,
இதுவரை தமழ் சினிமா சிறு சிறு ஜன்னல்களையே திறந்து விட்டிருந்தது .
ஆனால் 22 வயதே ஆன இளம் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேனின் சிறப்பான இயக்கம் , மேதமைத்தனமான படமாக்கல் , பிரில்லியன்டான திரைக்கதை , இன்டலக்சுவல் வசனங்கள்…..
இவற்றுடன் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு , ஸ்ரீஜித் சாரங்கின் படத் தொகுப்பு, ஜேக்ஸ் பிஜாயின் இசை மற்றும் விநியோகஸ்தர் மலரின் சிறப்பான திரையீடு உத்திகள்…ஆகிய பெரும்பலங்களோடு திரைக்கு வந்து…
ஒரே நேரத்தில் பாராட்டு , மரியாதை , வணிக ரீதியிலான வெற்றி , ஆகியவற்றை சாதித்து இருக்கும் துருவங்கள் பதினாறு படம் , நடிகர் ரகுமானுக்கு தமிழ் சினிமாவில் நெடுங்கதவங்களைத் திறந்து விட்டிருக்கிறது .
அந்த உற்சாகமும் கனிவும் ரகுமானின் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது .
” மலையாளப் படம் ஒன்றில் போலீஸ் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ஒரு படப்பிடிப்பில், ஒரு நாள் இயக்குனர் கார்த்திக் நரேன் என்னிடம் கதை சொல்ல வந்தார் .
ரொம்ப சின்ன வயசு . குறும்படங்கள் மட்டுமீ எடுத்த அனுபவம் இருப்பதாக சொல்லி ‘கதை சொல்ல வந்திருக்கிறேன்’ என்றார் . என்ன கேரக்டர் என்றதும் போலீஸ் அதிகாரி என்றார் .
உடனே நான் நடிக்க விரும்பல என்று சொல்லி அனுப்பி விட்டேன் காரணம் அதுவரை தமிழ், மலையாளம் தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் நிறைய போலீஸ் கேரக்டர் நடித்து அலுத்து விட்டது.
ஆனால் மறுபடியும் வீட்டுக்கு வந்து ” இது வழக்கமான போலீஸ் கேரக்டர இல்லை ” என்று விளக்கினார் . அவர் கதை சொல்லும் போது துளிகூட பதட்டமே இல்லாமல் சொன்னது கவனிக்க வைத்து
நான்கைந்து முறை சந்தித்தோம் . அதுவரை நான் நடிக்க சம்மதிக்கவே இல்லை . அவரும் விடவில்லை . ஒரு முறை லேப் டாப்பில் சில காட்சிகளை கிராபிக்ஸில் செய்து கொண்டு வந்து காட்டினார் .
சும்மா இருக்கிற நேரத்தில் இந்த பண்ணினா என்ன என்று தோன்றியது . ஆனால் ஆளைப் பார்த்தால் ரொம்ப சின்னப் பையன் .
இந்த சின்னப் பையன் எல்லாம் என்ன பண்ணப் போறான் என்று ஏதோ ஒரு ஈகோ வந்து என்னை தடுத்தது .
அப்புறம் ஒரு முறை கேமராவின் கோணத்தில் கதை சொன்னார் . சவுண்டு எடிட்டர் வந்து சவுண்ட் உத்திகளை வைத்து எல்லாம் கதை சொன்னார் .
எத்தனையோ படங்கள் பண்றோம் . அதோடு இதுவும் இருக்கட்டுமே . வருமானமும் வரும் சரி பரவாயில்லை நடிப்போம் என்று தோன்றியது .
படப்பிடிப்பில் அவர் காட்சிகளை எடுத்த விதம் பரவாயில்லை என்று நம்பிக்கை தந்தது
28 நாள் கால்ஷீட் கேட்டார் . கொடுத்தேன் . 28ஆவது மதியம் ஒரு மணிக்கே படத்தை முடித்து என்னை அனுப்பி வைத்தார் . அப்போது கூட படம் ஒகே என்றுதான் தோன்றியது .
ஆனால் இது இப்படி சிறப்பாக வரும் என்று படம் பார்க்கும்வரை எனக்குத் தெரியாது .
படம் பார்த்து முடித்ததும் சிலிர்த்துப் போனேன் . என் கேரியரிலேயே இதுதான் பெஸ்ட் படம் என்று மனப் பூர்வமாக சொல்லி கார்த்திக் நரேனை கட்டிப் பிடித்துப் பாராட்டினேன் .
உண்மையில் இந்த முப்பத்தி சொச்சம் வருடங்களில் எல்லா மொழிகளிலும் நான் நடித்த படங்களில் இதுதான் பெஸ்ட் .
படம் அவ்வளவு பிடித்துப் போனதால் எனது சகலையான ஏ ஆர் ரகுமானிடம் பாடல்களை வெளியிட்டுத் தர வைத்தேன் .
எனக்கு தெரிந்த சினிமா பிரபலங்களை எல்லாம் படத்தைப் பார்த்து மனதில் உண்மையாக தோன்றுவதை சொல்லுங்கள் என்று சொன்னேன் .
படம் பார்த்த நடிகர் மோகன் ” இந்தப் படம்தான் உனது வாழ்நாள் அடையாளம். இப்படி ஒரு படத்தின் ஹீரோ நான் என்று நீ எங்கும் எப்போதும் பெருமையாகச் சொல்லலாம் ” என்று பாராட்டினார்
அவர்கள் பாராட்டு பலம் கொடுத்தது .
ஊடகங்கள் கொடுத்த ஆதரவு அபாரம் . மக்களும் படத்தை கொண்டாடி ஏற்றுக் கொண்டது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது .
தமிழில் நான் நடித்த முதல் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் அம்மாவுமான ஷோபா சந்திர சேகர் முப்பது வருடங்களுக்குப் பிறகு போன் செய்து பாராட்டினார்
நான் முக்கிய வேடத்தில் நடிக்கும் பகடி ஆட்டம் உட்பட இரண்டு படங்களுக்கு இப்போது முக்கியத்துவம் கிடைத்துள்ளது . இப்படியாக துருவங்கள் பதினாறு எனக்கு மறுமலர்ச்சியைக் கொடுத்துள்ளது .
என் மகளின் முதல் மொழியே தமிழ்தான் . அவள் தமிழ்ப் பொண்ணாகவே வளர்கிறாள் . நானும் முக்கால் தமிழன் ஆகி விட்டேன் . என் மகளுக்கு இரண்டு விருப்பம் .
ஒன்று நான் வில்லனாக நடிக்கக் கூடாது . இரண்டு மலையாளப் படங்களை விட தமிழில் நிறைய நடிக்க வேண்டும் . மகளது இரண்டு விருப்பங்களுக்கும் இனி முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறேன்
நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கக் காத்திருக்கிறேன் ” என்கிறார்
வாழ்த்துகள் ரகுமான் .