ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ , சன் லேண்டு சினிமாஸ், ஒயிட் பக்கெட் புரடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்க வீரா, அஜய் பிரசாத், தயாரிப்பாளர் பட்டியல் சேகர், ரெஜினா, இளவரசு, ஆடுகளம் நரேன் ,ஆகியோர் நடிப்பில் ஏ.ஜி. அமித் இயக்கி இருக்கும் படம் ராஜதந்திரம். ரசனை மந்திரம் இருக்கா? பார்க்கலாம்
சின்ன சின்ன திருட்டுகள் செய்து பிழைக்கும் அர்ஜுன் (வீரா ) தேவராஜ் (அஜய் பிரசாத்) குள்ளன் ( டோம்புக ஷிவா) ஆகிய நண்பர்கள் ஒரு ஷேர் ஆட்டோ பயணத்தில் மிஷால் (ரெஜினா) என்ற பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடுகின்றனர். சட்டென அவள் போன் நம்பர் தர , நண்பர்கள் சிலிரிக்க அப்புறம்தான் தெரிகிறது அவள் மல்டி லெவல் மார்கெட்டிங்கில் தனக்கு கீழே இடது வலது இரண்டு பக்கத்துக்கும் ஆள் சேர்க்கிற ஆள் என்று .
காரணம் ? அவளது விதவை அம்மா , ஒரு பைனான்ஸ் கம்பெனியை நம்பி கடன் வாங்கி டெபாசிட் செய்ய , அந்தக் கம்பெனி திவால் ஆக, கடன்காரர்கள் நெருக்க, மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் சம்பாதித்து லட்சாதிபதியாகி கடனை அடைக்கலாம் என்று திடமாக நம்புபவள் மிஷல் . ஒரு நிலையில் அவள் மீது ஈர்ப்புக் கொள்கிறான் அர்ஜுன் .
அர்ஜுனுக்கு தெரிந்த ஃபிராடு பார்ட்டியான மாதவ அய்யர் (இளவரசு ) வீராவிடம், மேற்படி பைனான்ஸ் கம்பெனி அதிபரான தர்மாவுக்கு (ஆடுகளம் நரேன் ) உதவி செய்வதற்காக , ஒரு மிகப்பெரிய நகைக் கடையில் கொள்ளை அடிக்கச சொல்கிறார். ஆனால் சில்லறைத் திருட்டுக்கு மேல் நாங்கள் போவது இல்லை என்று கூறும் அர்ஜுன் அதை மறுக்கிறான் .
விளைவாக மாதவ அய்யர் அந்த பிரபல நகைக்கடையில் அர்ஜுன் திருடப் போகிறான் என்று ஒரு பொய்யை சொல்ல , கடுப்பான அர்ஜுன் அந்த பிரபல நகைக் கடை அதிபரான அழகப்பனை (பட்டியல் சேகர்) சந்தித்து , “உங்கள் கடையில் கொள்ளை அடிக்க மாதவ அய்யரும் தர்மாவும் முடிவு செய்து இருகிறார்கள் ” என்று போட்டுக் கொடுக்கிறான் .
அடுத்த நாள் தர்மாவை கார் ஏற்றிக் கொலை செய்ய அழகப்பன் முயல , பலத்த காயங்களோடு தப்பிக்கிறார் தர்மா . மாதவ அய்யர் பொங்கி எழுந்து வந்து அர்ஜுனை பார்த்து ” தர்மா மிக நல்ல மனிதர். . நேர்மையாக பைனான்ஸ் கம்பெனி நடத்தியவர். அவரை ஏமாற்றி பைனான்ஸ் கம்பெனியை திவாலாக்கியதே அழகப்பன்தான் ” என்ற உண்மையைக் கூறுகிறார் .
அழகப்பன் செய்த நம்பிக்கை துரோகம் அர்ஜுனை கொந்தளிக்க வைக்க , அதே பாணியில் அழகப்பனை நம்ப வைத்து , அழகப்பனின் நகைக்கடையை கொள்ளை அடிக்க தர்மா திட்டமிடுவதாக கூறி, தந்திரமாக திட்டமிட்டு , கொள்ளைத் திட்டத்தையும் அரங்கேற்றி , பெரும்பணத்தை ஈட்டி தர்மாவுக்கு கொடுத்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு தர வைத்து , குடும்பப் பெருமை மிக்க தர்மாவின் கவுரவத்தை அர்ஜுன் மீட்டுத் தருவதே இந்த ராஜ தந்திரம் .
மிக யதார்த்தமாக எளிமையாக விரிகின்றன படத்தின் ஆரம்பக் காட்சிகள் . அது இந்தப் படத்தின் சிறப்பு. வசனத்தில் இருக்கும் ஏகடியம் ரசிக்க வைக்கிறது.
ஜி வி பிரஜாஷின் இசையில் — அர்ஜுன் மிஷால் சண்டை முடிந்து வரும் பாடல் சுகமோ சுகம் . எடுத்த விதத்திலும் ஒரு கவிதை .
எப்படி எப்படி எல்லாம் திருடலாம் என்று ஐடியா கொடுக்கறாங்களே என்று தோன்றினாலும் படத்தில் வரும் சின்னச் சின்ன திருப்பங்கள் நாம் பார்ப்பது ஒரு சுவாரஸ்யமான படம் என்ற உணர்வை மட்டுமே ஏற்படுத்துகின்றன .
பைனான்ஸ் கம்பெனி அதிபர் என்றால் பொதுவாகவே எல்லோருக்கும் அயோக்கியனாகவே தோன்றும், அதுவும் கம்பெனி திவால் ஆகி மக்கள் எல்லாம் பணத்தை இழந்து நிற்கையில் !
ஆனால் அதில் மாற்றி யோசித்து , ஆடுகளம் நரேன் சிறப்பாக நடித்து இருக்கும் அந்த தர்மா கேரக்டருக்கு ஒரு குடும்பப் பெருமை , மக்களுக்காக நல்லதொரு கல்விக்கூடம் நடத்தும் ஆசை , அதற்காக நியாயமாக பைனான்ஸ் கம்பெனி நடத்த வந்தது ….. அவரை அழகப்பன் திட்டமிட்டு ஏய்த்தது … என்று மாற்றி யோசித்த விதத்தில் நிற்கிறார் இயக்குனர் .
ராஜ தந்திரம் …. குறுநிலம் !