ராஜவம்சம் @ விமர்சனம்

செந்தூர் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி டி ராஜா , ஆர் சஞ்சய் குமார் தயாரிக்க,

சசிகுமார், நிக்கி கல்ராணி , ராதா ரவி ,தம்பி ராமய்யா ,விஜய குமார், சதீஷ், மனோபாலா , சிங்கம்புலி, யோகி பாபு, ஆடம்ஸ், சரவண சக்தி, ராஜ்கபூர், சாம்ஸ், நமோ நாராயணா,ஓ ஏ கே சுந்தர், சுமித்ரா, நிரோஷா, ரேகா,  சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணிமேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சிதா, ரம்யா, வாம்மா மின்னல் தீபா நடிப்பில்

கே வி கதிர்வேலு இயக்கி இருக்கும் படம் ராஜ வம்சம். 

குளோபல் வார்மிங்கை குறைக்க ,  நடவடிக்கை எடுக்க விரும்பும்   ஒரு பெருந்தொழில் அதிபர் அதற்காக முக்கியமான நான்கு கம்பெனிகளிடம் திட்டம் கேட்கிறார் . நால்வரும் சேர்ந்து திட்டம் கொடுத்து பணத்தை வாங்கி பங்கிட்டுக் கொள்ளலாம் என்று ஒருவர் சொல்ல, இரண்டு பேர் ஒத்துக் கொள்கின்றனர். நேர்மையாக செய்ய விரும்பும் ஒருவர் ( ஜெயப்பிரகாஷ்) தனித்துச் செயல்பட விரும்புகிறார் . 

அவரது நிறுவனத்தில் பணிபுரியும் கண்ணன்( சசிகுமார்) வசம் திட்டம் ஒப்படைக்கப்படுகிறது. மரங்களை வெட்டுவதை தடுக்க, பேப்பர் அல்லாமல் விர்ச்சுவல் முறையில் செய்திகள் அனுப்பும் முறை ஒன்றை கண்ணன் சொல்ல,  புராஜக்ட் அந்த நல்ல தொழில் அதிபருக்கே கிடைக்கிறது. மற்ற மூவரும் அது சரியாக செயல்பட விடாமல் தடுக்க முடிவு செய்கின்றனர். 

கண்ணனுக்கு ஊரில் அம்மா அப்பா ஐந்து அக்கா, ஐந்து அண்ணன் அவர்களது  வாழ்க்கைத் துணைவி, பிள்ளைகள் , தாயமாமன் (தம்பி ராமையா) என்று பெரிய கூட்டுக் குடும்பம்.  குடும்பம்தான் கண்ணனுக்கு முதல் முக்கியம் . 

கூட்டுக் குடும்பத்தை பிரிய மறுப்பதால் கண்ணனுக்கு திருமணம் தள்ளிப் போகிறது . 
அலுவலகத்தில் பணி புரிய வந்து , கண்ணனால் ஒதுக்கப்பட்டதால் கோபத்தில் இருக்கும் காயத்ரியை (நிக்கி கல்ரானி), தன்னை காதலிக்கும் பெண்ணாக தனது குடும்பத்தார் முன்பு நடிக்க சொல்கிறான் கண்ணன். பணத்துக்கு நடிக்க வருகிறாள் அவள். 

ஆனால் கண்ணனின் உறவுகள் அவள் மீது பாச மழை பொழிகின்றனர். கல்யாணத்துக்கு முதல் நாள் காயத்ரி பணம் வாங்கிக் கொண்டு கிளம்புகிறார். உறவுகள் கஷ்டப்பட்டாலும் பிரச்னை முடிந்தது என்று கண்ணன் நினைக்க, மீண்டும் வந்து தாலி வாங்கிக் கொண்டு அதிர்ச்சி தருகிறாள் காயத்ரி. 

ஒரு பக்கம் இப்படி குடும்ப வாழ்வில் அதிர்ச்சி இருக்க, மறுபக்கம் புராஜக்டை வீழ்த்த அயோக்கிய தொழில் அதிபர்கள் திட்டமிட, நடந்தது என்ன என்பதே ராஜ வம்சம் . 

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருகிற – குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தருகிற, கண்ணன் கேரக்டரில் அட்டகாசமாக பொருந்துகிறார் சசிகுமார் . தனக்கே உரிய பாணி நடிப்பு, அதிரடி சண்டைக் காட்சிகள் என்று எல்லா வகையிலும் பொருத்தம் .  

பணத்தை அள்ளி இறைத்து ரிச் ஆக தயாரித்து உள்ளார் தயாரிப்பாளர் ராஜா. 

முதல் படத்திலேயே சுமார் ஐம்பது நடிக நடிகையரை வைத்து இயக்கி இருக்கிறார் கதிர்வேலு. 
சாம் சி எஸ் இசையில் மானே உன்ன, மாப்ள வந்தா பாடல்கள் அருமை . இனிமை.. காதுக்கு சுகம் .
சித்தார்த் ஒளிப்பதிவு  கண்ணுக்குள்  வண்ணக்கோலம் போடுகிறது . அருமை. 

கன்று போடும்போது கஷ்டப்படும் மாட்டுக்காக அந்தக் குடும்பமே கதறும் காட்சி, அருமை. உயிர்களிடத்தில் அன்பு , உறவுகளின் பெருமை சொல்லும் காட்சி அது . 

தினமும் முதலில் அம்மாவிடம் போனில் பேசி விட்டுத்தான் மற்றவர்கள் போனை எடுப்பேன் என்ற கண்ணனின் குணாதிசயம் அருமை . 

இவற்றைத் தவிர வேறு ஏதும் படத்தில்  நேர்த்தியாக இல்லை.

இவ்வளவு காமெடி நடிகர்கள் இருந்தும் காமெடி குறைவுதான்.

படத்தில் வரும் பல செண்டிமெண்ட் காட்சிகளில் ஆழம் இல்லை . 

எல்லோரும் எபோதும் ஃபுல் மேக்கப்பில் திரிவதால் யதார்த்தம் இல்லை. யோகிபாபு வேறு  படத்தில் உள்ள நடிக நடிகையரின் மற்ற படப் பெயர்களை அவ்வப்போது சொல்லி மேலும் யதார்த்தத்தை கொல்கிறார். 

அம்மா அப்பாவை அப்படி நேசிக்கும் கண்ணன் அப்படி ஒரு பொய் சொல்வது கதாபாத்திரச் சீர்குலைவு.

பிரம்மாண்டமான  வீடு தோட்டம் தொறவு , வீட்டுக்கு வரும் மருமகள் எல்லோர் பேரிலும் ஏராளமான சொத்துகளை எழுதி வைக்கும் விஜயகுமார் ஒரு காட்சியில் ”நான் ஒன்னும் கோடீஸ்வரன் இல்லை” என்கிறார் . 

ஒரு காட்சியில் சசிகுமாரை ”சன்னி லியோனுக்கே சேலை வாங்கித் தருவான் ” என்று  சொல்லும் சதீஷ் இன்னொரு காட்சியில்  பாலியல் பற்றி பேசும் போது சசிகுமாரை “இவன் ஆய கலைகள் அருவத்தி நாலும் தெரிந்தவன் ” என்கிறார். 

பல கதாபாத்திரங்கள் உயிர்ப்பின்றி உலவுகிறது .

படத்தின் முக்கியமான நோக்கத்துக்குள் போகாமலேயே படம் முடிகிறது . 

இப்படி சில பல குறைகள் இருந்தாலும் குடும்ப உறவுகள் , பாசம் நேசம் இவற்றில் அருமை சொல்லும் வகையில்  கவனிக்க வைக்கிறது ராஜ வம்சம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *