ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த வகையில் இருவரையும் ஒரு படத்தில் நடிக்க வைக்க கால்ஷீட் கேட்டு இருந்தார் பழம்பெரும் தயாரிப்பாளர் கதாசிரியர் பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம்.
அந்த சமயம் பார்த்து கமல் ரஜினி இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தார்கள் . பஞ்சு அருணாசலத்திடம் விஷயத்தை சொல்லி ஒரு சாரி சொல்லிவிடலாம் என்ற முடிவோடு அதை தெரியப்படுத்த,
சற்றும் அசராத பஞ்சு அருணாச்சலம் “அதனால என்ன ? நல்ல விஷயம்தான் . சரி…ரெண்டு பேரும் தனித்தனியா கால்ஷீட் கொடுங்க ” என்று, தன் பேனா இருக்கிற பலத்தில் கேட்க , ஒரு நிமிஷம் அயர்ந்து போன இருவரும் சந்தோஷமாக சம்மதித்தார்கள்.
சொன்னபடியே அடுத்தடுத்து கமலுக்கு கல்யாணராமன் படத்தையும் ரஜினிக்கு எங்கேயோ கேட்ட குரல் என்ற படத்தையும் எழுதி தயாரித்து இரண்டையும் வெற்றிப் படமாக்கினார் பஞ்சு அருணாச்சலம் .
அண்மையில் உடல்நலம் இல்லாமல் இருக்கும் பஞ்சு அருணாச்சலத்தை இளையராஜாவுடன் சேர்ந்து போய் பார்த்து பேசினார் ரஜினி என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்.
அப்போது எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் தான் நடித்த காலத்தை நினைவு கூர்ந்த ரஜினி ”அது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் . இந்தியில் அமிதாப் இப்போது வித்தியாசமான வேடங்களில் நடிப்பது போல, தானும் நடிக்க வேண்டும்” என்ற தனது ஆசையை கூறினாராம்.
இதை அடுத்து பஞ்சு அருணாசலத்தின் அழுத்தமான கதையில் ரஜினி மீண்டும் நடிக்கும் வாய்ப்பு அமையலாம் என்கிறார்கள்.
கட்டின பொண்டாட்டி விட்டு விட்டுப் போகும் கதைக்கு …. இமேஜ் பற்றி கவலைப்படாமல் ரஜினி களம் இறங்கினால், பேசாம எங்கேயோ கேட்ட குரலையே ரீமேக் செய்யலாம் . சும்மா அள்ளிக்குமே !