ஒரு பெரிய குடும்பத்தின் தலைவரான அய்யன் காளை (ராஜ்கிரண்) தனது பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து வெளிநாடுகளில் செட்டில் செய்கிறார் . அவர்களும் பிள்ளை பேரன் என்று அப்படியே இருந்து விடுகிறார்கள். மகன்களில் ஒருவரான மல்லிகைராஜனை (பேராசிரியர் ஞான சம்மந்தம்) மட்டும் மதுரையில் ஆசிரியராக இருக்க வைக்கிறார் .
ஆசிரியரது நெருங்கிய நண்பரான நீலகண்டன் (அச்யுதகுமார்) தீவிர ரஜினி ரசிகர். ஆசிரியருக்கு மகன் பிறந்த போது பிள்ளைக்கு ரஜினி முருகன் என்று பெயர் வைத்ததே அவர்தான் . நீலகண்டனுக்கு ஒரு மகள் பிறக்கிறது. ஒரு நிலையில் நண்பர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் வந்து பிரிகிறார்கள் .
இளைஞனான ரஜினி முருகன் (சிவகார்த்திகேயன்) தனது நண்பனான தோத்தாத்ரி (சூரி)யுடன் சேர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’ நபராக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார் . நீலகண்டனின் மகள் கார்த்திகா தேவியும் வளர்ந்து இளம்பெண் ஆன நிலையில் (கீர்த்தி சுரேஷ்) , அவளை ரஜினி முருகன் காதலிக்க , நீலகண்டன் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை .
அய்யன்காளை தன் பெயரில் உள்ள பெரிய பங்களாவை விற்று எல்லா பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்து , அதில் ரஜினி முருகனுக்கு வரும் பங்கை வைத்து அவனை செட்டில் செய்ய நினைக்கிறார் .
இந்த நிலையில் , மதுரையில் அடாவடி ரவுடித்தனம் பண்ணி பணம் சம்பாதிக்கும் ஏழரை மூக்கன் ( சமுத்திரக் கனி ) குறுக்கே வருகிறார். (நல்லவேளை , கார்த்திகா தேவியை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படவில்லை )
தன்னை ‘அய்யன்காளைக்கும் அவரது வப்பாட்டிக்கும் பிறந்தவரின் மகன் ; எனவே நானும் அய்யன் காளையின் பேரன்’ என்று சொல்லிக் கொண்டு தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று வந்து நிற்கிறார் .
இப்படிப்பட்ட புதுமையான புரட்சிகரமான சீரிய சிந்தனை கொண்ட கதையில் அப்புறம் என்ன ஆனது என்பதே ரஜினி முருகன் .
கேட்டால் கமர்ஷியல் மாஸ் , பொங்கல் விருந்து என்பார்கள் . பொங்கல் விருந்து என்றால் புதுசாக பொங்க வேண்டாமா? போன வருஷம் பொங்கியதையே பரிமாறினால் எப்படி?
‘மதுரை அடிதடியே இல்லாத ஊர் . அங்கே ஏழைரை மூக்கன் மட்டுமே அயோக்கியன்’ என்று ஆராம்பத்தில் சொல்லி விட்டு அப்புறம் காட்டுவது எல்லாம் அதற்கு நேர்மாறாக இருக்கிறது .
சிவகார்த்திகேயன் நடிப்பில் மேலும் முன்னேறி இருக்கிறார் . ஆனால் பட்டையைக் கிளப்பும் அந்த காமெடி அதகளம் கம்மிதான்
கீர்த்தி சுரேஷ் மிக அழகாக இருக்கிறார் . நடிப்பும் நன்றாக இருக்கிறது . படத்தின் பிளஸ் பாயின்ட் லிஸ்டில் இவரும் வருகிறார் .
லந்து பண்ணும் வில்லன் கேரக்டரில் சமுத்திரக் கனி நன்றாக நடித்துள்ளார் .
ராஜ்கிரண் குணச்சித்திர நடிப்பில் ஜொலிக்கிறார் . ஆனால் கதாபாத்திரம் கனம் இல்லாதததால் பலன் இல்லை . கடைசியில் அவரது கதபாத்திரத்தை வைத்து ஏதோ அசத்தப் போகிறார்கள் என்று பார்த்தால் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தை கிளைமாக்சில் இழுத்து விட்டு ரஜினி முருகனை மங்கலாக்குகிரார்கள்
இமான் வேறு தன் பங்குக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடல் மற்றும் இந்த பொண்ணுங்களே பாடல் அடிப்படை இசையை அப்படியே பயன்படுத்தி இரண்டு பாடல்களை போட்டு இருக்கிறார் . இப்படியாக எல்லோரும் இந்தப் படத்திலும் அந்தப் படத்தையே பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள் .
அதே நேரம், சரணத்தில் கொஞ்சம் டல்லடித்தாலும் , ” உன் மேல ஒரு கண்ணு…” பாடல் அட்டகாசமான தேனினிமை விருந்து (குறிப்பாக பல்லவி மட்டும் !) என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பாட்டுக்கான ட்ரெண்ட் காலாவதி ஆகிவிட்டது .
வாழைப்பழத்தை இழுத்து கடையைக் காலி பண்ணும் கேரக்டரில் நடித்துள்ள நபர் மட்டுமே நிஜமான மதுரை வாய்மொழி மற்றும் உடல் மொழியில் அசத்துகிறார்
மிக நன்றாக வர வேண்டிய உணர்சிகரமான அழுத்தமான காட்சிகளுக்கு இடையே கூட காமெடி என்ற பெயரில் எதையாவது பேசி காட்சியின் விளைவை நீர்த்துப் போகச் செய்கிறார்கள் .
ஒரு காட்சியில் வேலையில்லாப் பட்டதாரி படத்தில் இடம் பெற்ற ”அம்மா அம்மா பாடலை…” நக்கலாகப் பயன்படுத்தி தனுஷை சீண்டி இருக்கிறார்கள்
சரியான காட்சிகள் கிடைக்காமல் தவியாய் தவிப்பது முதல் பாதியில் நிறையவே தெரிகிறது .ஆரம்பத்தில் பொறுமையை சோதிக்கும் படம் போகப்போக கொஞ்சம் ஸெல்ஃப் எடுத்து மீண்டும் இறங்கி, கடைசியிலாவது ஏதாவது ரசிக்கும்படியாக சொல்வார்கள் என்று நம்ப வைத்து …. ம்ஹும் !
சிவகார்த்திகேயன் சூரி கூட்டணியில் அவ்வப்போது ஒரு சில நகைச்சுவை வெடிகள் வந்து வயிறுகுலுங்க சிரிக்க வைப்பதை மறுக்க முடியாது . ஆனால் அதற்காக ரொம்ப நேரம் காத்துக் கிடக்க வேண்டு இருக்கிறது.
பால சுப்பிரமணியெமின் ஒளிப்பதிவு மிக அருமை . உடைகள் நைஸ் .
உழைப்பு , அதிர்ஷ்டம் , சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்ட நெளிவு சுளிவு எல்லாம் சேர்ந்து, தமிழ் சினிமாவில் வேகமாக உயர்ந்து நிற்பவர் சிவ கார்த்திகேயன் . அதனால் சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு நல்ல ஒப்பனிங் இருக்கிறது . அது மட்டும் இந்தப் படத்துக்கு உதவலாம் .
இது சிவகார்த்திகேயனை பயன்படுத்திக் கொள்ளும் படம் மட்டுமே . சிவகார்த்திகேயனுக்கு பயன்படும் படம் அல்ல . தனக்குப் பயன்படும் படங்களை கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயம் சிவகார்த்திகேயனுக்கு இருக்கிறது .
ரஜினி முருகன் … தயிர்வடை தேசிகன் !
மகுடம் சூடும் கலைஞர்
——————————————-
வாழைப்பழத்தை இழுத்து டீ கடையையே சரிக்கும் அந்த பெயர் தெரியாத நடிகர்