முக்கியமானவர்கள் கொடுத்த தவறான நம்பிக்கையை நம்பி அதிக விலைக்கு லிங்கா படத்தை வாங்கி பெரு நஷ்டத்துக்கு ஆளாகி இப்போது வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் தவிப்பதாக புலம்பும் விநியோகஸ்தர்கள் இந்தப் பிரச்னையில் ரஜினி தலையிட்டு நஷ்ட ஈடு பெற்றுத் தர வலியுறுத்தி வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார்கள் .
இந்த உண்ணாவிரத அறிவிப்பு வந்த நிலையில் நஷ்டப பணத்தை தயாரிப்பாளரிடம்தான் கேட்க வேண்டும் . நடித்துக் கொடுத்த நடிகரிடம் கேட்கக் கூடாது என்ற ஒரு கருத்துக்கு விநியோகஸ்தர்கள் பதில் சொல்லவும் தவறவில்லை .
“லிங்கா படத்தை வாங்கி வெளியிட்டது வேந்தர் மூவீஸ் நிறுவனம்தான் . நஷ்டம் பற்றிக் கேட்டால் அந்த நிறுவனம் வியாபாரத்தில் லாப நஷ்டம் சகஜம்தான் என்கிறது. ஆனால் தலைவா படம் வெளியாகி நஷ்டப்பட்ட போது நடிகர் விஜய்யிடம் இருந்து ஐந்து கோடி ரூபாயை நஷ்ட ஈடு என்ற பெயரில் இதே நிறுவனம்தான் பிடுங்கிக் கொண்டது. இப்போது அதே போல் நடந்து ரஜினியிடம் வாங்கித் தராதது ஏன் ? ரஜினி கண்ணில் வெண்ணெய் . விஜய் கண்ணில் சுண்ணாம்பா?” என்று கேட்கிறார்கள் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் .
அதோடு முடியவில்லை.
“படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளரை மட்டுமே அணுகி நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ளவேண்டும் என்பது உண்மைதான் . ஆனால் தயாரிப்பாளர் ஒரு படத்துக்கு இயக்குனரையும் நடிகரையும் முடிவு செய்தபோதுதான் அந்த நியாயம் செல்லுபடியாகும் . ஆனால் லிங்கா விவகாரம் அப்படி அல்ல . இந்தப் படத்தின் தயாரிப்பாளராக ராக் லைன் வெங்கடேஷை முடிவு செய்ததே அவர்தான் . அதுவும் இந்த ராக் லைன் வெங்கடேஷ் மஜா என்ற படத்தை தயாரித்து அதிக விலைக்கு விற்று நமது விநியோகஸ்தர்களை ஏமாற்றி விடு கர்நாடகாவுக்கு ஓடிப் போய் விட்டவர் .
கன்னட மண் பாசத்தோடு அவரை லிங்கா படத்துக்கு தயாரிப்பாளராக கொண்டு வந்ததே ரஜினிதான். ராக்லைன் வெங்கடேஷுக்கு சென்னையில் அலுவலகமே இல்லாத போது நாங்கள் எங்கே சென்று கேட்பது ? இதற்கெல்லாம் காரணமான ரஜினியிடம்தானே கேட்க முடியும்
ரஜினியை உருவாக்கி கட்டிக் காத்த எததனையோ பெரிய நிறுவனங்கள் தமிழ் நாட்டில் இருந்தும் கர்நாடகாவில் இருந்து தயாரிப்பாளரை
ரஜினி கொண்டு வந்ததன் காரணம் என்ன? தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவே இல்லாத ஒருவரை படம் தயாரிக்க அனுமதிதத்து ஏன் ” என்று கேட்கிறார்கள் .
ஆனால் மஜா படத்தை தயாரித்து விட்டு ஏமாற்றி விட்டு ஓடிப் போன ஒருவர் தயாரிக்கும் படத்தை ஏன் வாங்கினீர்கள் என்று கேட்டால் ” ரஜினி பிரச்னை வராமல் பார்த்துக் கொள்வார் என்று நம்பினோம் ” என்கிறார்கள்.
உண்ணாவிரதத்தில் பேசிய பலரும் இந்தப் பிரசனையில் ரஜினி தலையிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியே பேசினார்கள்.
சீமான் பேசும்போது ” ரஜினி இதில் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தருவதுதான் நியாயம் “என்றார் . அதையே தயாரிப்பாளர் கே. ராஜனும் சொன்னார் .
எனினும் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசிய தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனின் பேச்சில் படு சூடு “ரஜினிகாந்த் … என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்கள் என்று அடிக்கடி பசப்பு வார்த்தை சொல்வீர்கள் . இந்த விநியோகஸ்தர்களும் தமிழ் மக்கள்தான் . மக்களுக்கு என்னென்னவோ செய்வேன் என்றீர்கள் . ஒன்றும் செய்யவில்லை . மகளின் திருமணத்தின் போது ரசிகர்களுக்கு கறி விருந்து போடுவேன் என்றீர்கள் . அந்த ஒரு நேர சாப்பாட்டு விசயத்தில் கூட நீங்கள் உங்கள் ரசிகர்களுக்கு உண்மையாக இருக்கவில்லை .
நிம்மதி தேடி இமயமலை போவதால் பலன் இல்லை . உண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இப்போது நீங்கள் இங்கே வந்து இவர்களின் குரலுக்கு காத்து கொடுத்திருக்க வேண்டும் நீங்கள் வரவில்லை .
நியாயமான தீர்வுக்கு நீங்கள் இறங்கி வரவில்லை என்றால் நான் சும்மா விடமாட்டேன். அடுத்த முறை நான் மட்டும் வரமாட்டேன் . எங்களது பங்காளிகளான பாமக , நாம் தமிழர் இயக்கம் , மதி முக எல்லோரும் ஒன்றாக வருவோம் . எங்கள் முந்திரிக் காட்டில் உங்கள் பாபா படப் பெட்டிகளுக்கு நேர்ந்த கதியை மறந்து விடாதீர்கள் ” என்றார் .
“பிரச்னை தீராவிட்டால் அடுத்து குடும்பத்தோடு உண்ணாவிரதம் , சாகும் வரை உண்ணா விரதம் என்று பல போராட்ட திட்டங்களை வைத்துள்ளோம் ” என்கிறார்கள் இந்த விநியோகஸ்தர்கள்.
இந்த உண்ணாவிரதம் முடியும் நேரத்தில் ராக்லைன் வெங்கடேஷ் பத்திர்க்கையாளர்களை சந்திக்கிறார் என்று ஒரு தகவல் .
ஆனால் ஆரம்பம் முதலே லிங்கா பிரச்னையில் விருப்பு வெறுப்பின்றி பொது நியாயப்படி எழுதி வந்த காரணத்தால் , நமக்கு ராக்லைன் வெங்கடேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு இல்லை .
அந்த நிகழ்ச்சியில் பேசிய ராக்லைன் வெங்கடேஷ் ” நான் நஷ்ட ஈடு கொடுக்கதான் எண்ணி இருந்தேன். ஆனால் சில தமிழ்த் திரை உலக தயாரிப்பாளர்கள்தான் ‘ நீங்கள் இப்படி கொடுத்து பழக்கப்படுத்தினால் அப்புறம் எங்களிடமும் கேட்பார்கள் . எனவே கொடுக்காதீர்கள்’ என்று கூறி விட்டார்கள் ” என்று சொன்னதாக தகவல் .
“இது தமிழ்நாட்டு தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்னையை உண்டு பண்ணி விஷயத்தை திசை திருப்ப ராக்லைன் வெங்கடேஷ் செய்யும் சதி ” என்று குறிப்பிடுகிறார் ஒரு சீனியர் மீடியேட்டர் .
நிகழ்ச்சியில் பேசிய வேந்தர் மூவீஸ் செயல் அதிகாரி சிவா , “லிங்கா படம் செங்கல்பட்டு மற்றும் கன்யாகுமரி பகுதியில் நஷ்டத்தை சந்தித்தது உண்மைதான் . அதற்கான நஷ்ட ஈடை ராக் லைன் வெங்கடேஷ் சார் தரவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டாராம் .
அதற்கு பதில் சொன்ன ராக்லைன் வெங்கடேஷ் ” நான் இந்த படத்தின் மூலம் 230 கோடியை சம்பாதித்து விட்டதாக ஒரு விநியோகஸ்தர் கூறுகிறார் . அதை அவர் நிரூபித்தால் நான் தருகிறேன் ” என்றாராம்
“சரிங்க … 230 கோடி இல்லைதான் . அந்த ஒரு விநியோகஸ்தர் சொன்னதை விட்டுவிடுவோம்
ஆனால் லிங்கா படம் மொத்தம் 160 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது . படத்தின் பட்ஜெட் 65 கோடிதான். அதில் 30 கோடி கர்நாடகாகாவுக்கு போய் இருக்கிறது . அது இரண்டு பதினைந்து கோடிகளாக பிரிந்து கர்நாடகாவைச் சேர்ந்த இருவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது . மீதி 105 கோடி சென்னையில்தான் இருக்கிறது . அதில் இருந்து பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு கொடுத்து உதவக் கூடாதா ?”என்கிறார், பெயர் சொல்ல விரும்பாத ஒரு தயாரிப்பாளர் .
பாவம் …. நியாயம் !
Comments are closed.