அது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு (மே 26) சிங்காரவேலன் கொடுத்த தகவல்கள் பற்றியும் அதில் அவர் திருப்பூர் சுப்பிரமணியம் மீது கடுமையான குற்றச் சாட்டுகள் சொல்லியும் அது தொடர்பான சில காட்சிப் பதிவுகளைக் காட்டியும் பேசியதை பற்றியும் ‘ தொடரும் லிங்கா பிரச்னை : ஒரு பவர் பிளே ‘என்ற தலைப்பில் எழுதி இருந்தோம் (https://wh1026973.ispot.cc/super-star-rajnis-linga-dispute-continues/)
அதை தொடர்ந்து நேற்று (ஜூன் 2) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் திருப்பூர் சுப்பிரமணியம்.
லிங்கா பிரச்னையில் இதுவரை ஆதியோடு அந்தமாக நாம் அனைவரும் அறிந்த அனைத்து விவரங்களையும் சொல்லி முடித்த சுப்பிரமணியம் “படத்தின் தயாரிப்பளர் ராக் லைன் வெங்கடேஷ், தான் தருவதாக ஒத்துக் கொண்ட 12.5 கோடியில் ஆறு கோடிதான் கொடுத்துள்ளார். மீதி இன்னும் தரவில்லை.
விநியோகஸ்தர்கள் பலருக்கும் பணம் கொடுத்தாகிவிட்டது. கோவை விநியோகஸ்தர், என் எஸ் சி ஏரியா விநியோகஸ்தர் , வேந்தர் மூவீஸ் இவர்களுக்கு மட்டுமே பாக்கி இருக்கிறது . அவர்களும் லெட்டர் கொடுத்தால் தயாரிப்பாளரிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்து விடுவோம் ” என்றார் ‘பிரெஷ்’ஷாக.
அது மட்டுமின்றி “சிங்காரவேலன் 35 லட்ச ரூபாயை எங்களிடம் இருந்து வாங்கிக் கொண்டார் . பணத்தை வாங்கிக் கொண்டு, இனி இந்த பிரச்னையில் தலையிட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்து விட்டுப் போனார் . (ஆதாரம் காட்டுகிறார் . கடவுளே ! அது என் கையெழுத்து இல்லை என்று யாரும் சொல்லாமல் இருக்க வேண்டும் இறைவா !) ஆனால் இப்போது மீண்டும் பிரச்னை செய்கிறார் .
சிங்காரவேலன் எங்களிடம் வாங்கிய தொகையில் தியேட்டர்காரர்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையும் இருக்கிறது எங்களிடம் வாங்கிய தொகையை வைத்துதான் கங்காரு படத்தின் விநியோக உரிமை பெற்று திருச்சி பகுதியில் விநியோகம் செய்தார் .. ” என்று சொல்ல ,
அங்கிருந்த கங்காரு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதை மறுத்தார் .” அவர் உங்களிடம் வாங்கிய பணத்தில் இருந்து தியேட்டர்காரர்களுக்கு எதுவும் தரவில்லை. என்னிடம் படத்தின் விநியோக உரிமையை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் பெற்ற அவர் , லிங்கா நஷ்ட ஈடு டெபாசிட் தொகையை தியேட்டர்காரர்களுக்கு தராமல் ஏமாற்றியதால் , என் கங்காரு படம் ரிலீஸ் ஆகவில்லை .சிங்காரவேலநாள் ரிலீஸ் செய்ய முடியவில்லை .
அதனால் நான் மிகுந்த நஷ்டப்பட்டேன் . லிங்கா விவகாரத்தில் சிங்கரவேலனின் சுயநலத்துக்காக, காரணமே இல்லாமல் நான் நஷ்டப்பட்டேன் . எம் ஜி வியாபாரம் என்பது விற்பனை ஆகும்போதே முடிந்து போன வியாபாரம் . டிஸ்ட்ரிபியூஷன் என்பது தயாரிப்பாளர் , விநியோகஸ்தர் இரண்டு தரப்புக்கும் தொடர்ந்து நிகழ்வில் இருக்கும் வியாபாரம் .
எம் ஜி முறையில் விற்கப்பட்ட லிங்கா படத்தின் நஷ்டத்தையே திருப்பித் தரவேண்டும் என்று சிங்காரவேலன் அநியாயமாக கேட்கும்போது, டிஸ்ட்ரிபியூஷன் முறையில் படத்தை கொடுத்து சிங்காரவேலனால் நஷ்டப்பட்ட நான், அதற்கான நஷ்டத்தை நியாயமாக கேட்கிறேன் . எனக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் “என்றார் .
இப்படியாக லிங்கா படப் பிரச்னை பற்றிய சந்திப்பில் கங்காரு படத்தின் காலை சிங்கார வேலன் ஒடித்த கதை வெளிவந்தது
இந்த நிலையில் சிங்காரவேலன் இன்று மதியம் மீண்டும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் .