சினிமாவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் 2006 ஆம் ஆண்டு ‘மைன்ட் ஸ்கிரீன்’ திரைப்படக் கல்லூரியை உருவாக்கினார்.
ஆரம்பத்தில் ஒளிப்பதிவுக்கென்று இருந்த இந்த கல்லூரியில் பின்னர் திரைக்கதை பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அவ்வப்போது நடிப்புப் பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்பட்டன .
இதன் வளர்ச்சியாக இப்போது நடிப்புப் பயிற்சிக்கென்று ஆறு மாத கால படிப்பை தனது மைன்ட் ஸ்கிரீன் திரைப்படக் கல்லூரியில் மே மாதம் முதல் துவங்குகிறார் ராஜீவ் மேனன். இதில் கூத்து , களரி உள்ளிட்ட சண்டைக் கலைகள் , யோகா உள்ளிட்ட கலைகள் ஆகியவற்றை கற்றுத் தரும் பல்வேறு ஆசிரியர்களும் நடிப்புப் பயிற்சி ஆசிரியர்களும் பயிற்சி தர இருக்கிறார்கள்.
இவர்களோடு நடிகர் தலைவாசல் விஜய், நடிகை அர்ச்சனா , பிரதாப் போத்தன் போன்ற பிரபலங்களும் ஆசிரியர்களாக பணியாற்ற இருக்கிறார்கள் .
இதற்கான அறிமுக விழாவில் பேசிய அர்ச்சனா ” நாசர், தலைவாசல் விஜய், மற்றும் என்னைப் போன்ற பலரை உருவாக்கிய அடையாறு திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி நிறுத்தப்படுகிறது என்ற செய்தி , எங்களுக்கு மிகுந்து வருத்தத்தை கொடுத்த வேளையில் இப்படி ஒரு அற்புதமான நடிப்புப் பயிற்சி வகுப்பை துவங்கி இருக்கிறார் ராஜீவ் மேனன். அது மிகுந்த சந்தோஷமான விஷயம் ” என்றார் .
“நாடகங்களில் நடிப்பதற்கும் சினிமாவில் நடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு . சினிமாவில் நடிப்பவர் கேமரா முன்பு நிற்கும்போது அதில் இருக்கும் லென்ஸ் என்ன? அதற்குள் எவ்வளவு ஏரியா அடங்கும் ? அதனுடைய பரிமாணம் என்ன? நம்முடைய உடல் அசைவுகள் எப்படி பதிவாகும் ?ஒலிப்பதிவுக்கருவி எங்குள்ளது ? போன்ற அடிப்படைத் தொழில்நுட்ப அறிவு அவசியம் .
அதையும் சொல்லிக் கொடுத்து நடிப்புத் திறனையும் வளர்க்கும் பயிற்சிகள் இங்கு கொடுக்கப்படும் . உண்மையில் இப்போது நமக்கு திறமை வாய்ந்த நடிகர்கள் தேவைப்படுகிறார்கள் . அவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் ” என்கிறார் ராஜீவ் மேனன் .
நிகழ்ச்சியின் துவக்கத்தில் ‘சினிமாவில் நடிப்பதற்கு அடிப்படைத் தொழில் நுட்ப அறிவு இல்லாத ஒருவர் நன்றாகவே நடிக்கத் தெரிந்தவர் என்றாலும் கூட என்னென்ன சிக்கல்கள் எழும் என்பதை, நகைச்சுவையாக விளக்கும் நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது.
ஒளிப்பதிவாளர் – இயக்குனர் லக்ஷ்மணன் , காக்காமுட்டை மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனர் மணிகண்டன் ஆகியோர் நடித்த அந்த நாடகம் நடிப்புப் பயிற்சியின் அவசியத்தை அழகாகச் சொன்னது .