பணம் கொடுத்தால்தான் ஒருவன் நல்லவன்….! இல்லை என்றால் கெட்டவன் என்று அர்த்தமில்லைதான். என்றாலும், இந்த மாதிரி சமயங்களில்தானே ஒருவன், தன்னை உயர்த்திய மக்கள் மீது எவ்வளவு நிஜமான அன்போடு இருக்கிறான் என்பது புரிய வரும்
தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்கு பல்துறையினரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர் . இதில் திரைப்படக் கலைஞர்களும் அடக்கம்.
சித்தார்த், பாலாஜி, கார்த்தி, விஷால், உள்ளிட்ட நடிகர் சங்க அணி, பார்த்திபன் , கோவை சரளா உள்ளிட்ட பலர் ஆற்றிய களப்பணி விலை மதிப்பிலாதது. அது தவிர பல்வேறு திரையுலகக் கலைஞர்களும் நிவாரண நிதி கொடுத்துள்ளனர்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் எல்லோரையும் விட மிக அதிகமாக இரண்டு கோடி ரூபாய் கொடுத்து நெகிழ்ச்சியுடன் பிரம்மிக்க வைத்தார் . ” நான் இன்று ஹைதராபாத்தில் இப்படி புகழோடும் செல்வத்தோடும் இருக்கிறேன் என்றால் அப்படி என்னை உருவாக்கியதே சென்னைதான்” என்று கண்ணீர் விட்ட அல்லு அர்ஜுன் இருபது லட்சம் கொடுத்தார் . இது தவிர பல லட்ச ரூபாய் நிதி திரட்டியும் கொடுத்தார்
இந்தி நடிகர் ஷாரூக் கான் ஒரு கோடி கொடுத்தார்
ஆனால் ரஜினிகாந்த் நிவாரண நிதியாக பத்து லட்சம் கொடுத்தார். நடிகை ஸ்ரீதிவ்யா கொடுத்து இருப்பதும் அதே அளவு தொகைதான் என்பதுதான் இங்கே விசேஷம் அல்லது சோகம் !
ராம் கோபால் வர்மா இந்த விசயத்தில் ரஜினியை போட்டு டுவிட்டரில் புரட்டி எடுத்து விட்டார் . ” பவன் கல்யாண் தமிழ் ரசிகர்களால் வளர்ந்தவரில்லை. அவர் படத்தை சென்னை மக்கள் பார்க்கவில்லை. ஆனால் அவரே இரண்டு கோடி ரூபாய் கொடுத்து உள்ளார். ஆனால் தமிழ் சினிமாவின் மூலம் உச்சம் தொட்ட ரஜினி பத்து லட்சம்தான் கொடுத்துள்ளார். இதுதான் இருவருக்குமான வித்தியாசம் ” என்று நேரடியாக ரஜினியை விமர்சித்து இருக்கிறார் .
இன்னொரு பக்கம் ரஜினி ரசிகர்களும் இந்த விசயத்தில் மனக் காயங்களோடு சமூக வலைதளங்களில் தங்கள் மனக் குமுறலைப் பதிவு செய்கிறார்கள்.
”ரஜினி விரைவில் பெருசா ஏதாவது திட்டம் அறிவிக்கும் வாய்ப்பு இருக்கிறதே ?” என்று நாம் சொன்னால் ” எப்போ? எல்லாரும் செத்த பிறகா? இல்ல செத்த பிணம் எல்லாம் அழுகி மட்கிய பிறகா?” என்று நம்மிடமே கொந்தளிக்கிறார்கள் .
ஹும்ம்ம்ம்…..! என்னத்தச் சொல்ல …..!