தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை படமாக்கிய பிறகு, பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களை இயக்கும் பாணிக்கு மாறிய இயக்குனர் ஞானராஜசேகரன் ஐ ஏ எஸ் , அந்த வரிசையில் பாரதி, பெரியார் படங்களுக்கு பிறகு இப்போது, கேம்பர் சினிமா சார்பில் தனது மகள் சிந்து ராஜசேகர் மருமகன் சுஷாந்த் தேசாய் , மற்றும் ஸ்ரீவத்சன் நடாதூர், ஷரண்யன் நடாதூர் ஆகியோரின் தயாரிப்பில் எழுதி இயக்கி இருக்கும் படம் ராமானுஜன் .
கணிதத்தை கவுரவப்படுத்துவதற்கு என்றே உருவான மூளையோடு தமிழகத்தில் பிறந்து, இந்தியர்கள் அனைவரையும் வெள்ளைக்காரன் கேவலமாகப் பார்த்த காலத்திலேயே அவனை தனது கணிதத் திறமையால் வியக்க வைத்து…. அதே நேரம் சிறப்பான திறமைகள் கொண்ட யாரையும் சராசரி மனிதனாக்கி பத்தோடு பதினொன்றாக ஆக்கி மந்தையில் சேர்ப்பதிலேயே இன்றும் அன்றும் கவனமாக இருந்த நமது ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் பொதுப் புத்தியால் புறக்கணிக்கப்பட்டு…. மனைவியுடனான காதல் வாழ்க்கையையும் இழந்து…. 32 வயதில் டிபி நோய் வந்து செத்துப் போன ராமானுஜன் என்ற அந்த மாபெரும் ‘மனிதக் கணிதக் கணிணி’யின் வரலாறுதான் இந்தப் படம்
”நான்கை நாங்கள் வகுத்தால் ஒன்று .. அதாவது நான்கு மாம்பழத்தை நான்கு பேருக்கு சமமாகக் கொடுத்தால் ஆளுக்கு ஒன்று வரும்” என்று சொல்லிவிட்டு அடுத்து “பூஜ்யத்தை பூஜ்யத்தால் வகுத்தாலும் ஒன்றுதான் வரும்” என்று கூறும் ஆசிரியரிடம் “அப்படி என்றால் பூஜ்யம் மாம்பழத்தை பூஜ்யம் பேருக்கு கொடுத்தால் ஆளுக்கு ஒரு பழம் கிடைக்குமா?” என்று கேட்கும் சிறுவனாக படத்தில் அறிமுகம் ஆவது முதற்கொண்டு…. கடைசியில் நோய் வாய்ப்பட்டிருக்கும்போதும் மேக் பீட்டா தியரியை சமன் செய்த செய்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் வரை கணிதமேதை ராமானுஜனின் வரலாற்றை இழை இழையாகப் பிரித்து வைக்கிறார் ஞானராஜசேகரன்.
ஒரு பாடத்தில் ஜீனியசாக உள்ள மாணவன் மற்ற பாடங்களில் தேர்ச்சி குறைவாகப் பெற்றாலும் அந்த குறைப்பாட்டை ஒதுக்கி விட்டு அவனது மேதைமையை தூக்கிப் பிடிப்பதே அறிவார்த்த சமூகங்களின் வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஒரு பாடத்தில் மேதைமையாக இருப்பதை விட எல்லா பாடத்திலும் பாஸ் செய்கிற சராசரி மாணவனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற நமது, மாறாத சமூக அறிவின்மையை ராமானுஜன் மூலம் சோகமாகப் படம் பிடிக்கிறது இந்தப் படம் .
பாரதியாருக்கு நேர்மாறாக இருந்திருக்கிறார் ராமானுஜன். பாரதியாருக்கு பிடிக்காத ஒரே பாடம் கணக்கு . ராமானுஜனுக்கு பிடித்த ஒரே பாடம் கணக்கு . கணக்கு என்று சொன்னாலே கணக்கு , பிணக்கு ஆமணக்கு என்று வார்த்தைளை விரிப்பது பாரதியின் கவிதை மணம். கணக்கை மட்டுமே சொல்லிக் கொண்டு விதம் விதமாய் சூத்திரங்களை உருவாக்குவது ராமானுஜனின் கணித குணம்.
கணிதத்தில் மேதையாக இருந்தும் ராமானுஜன் சிறு வயது முதலே படும் அவமானங்கள் , கல்யாணம் செய்து வைத்து அவனது தனித்தன்மையை திருகி எறிந்து விட்டு, அவனை மற்றவர்கள் போல ‘படித்த ஆடாக’ மாற்ற அவனது தாய் செய்யும் முயற்சிகள் , கல்யாணத்துக்குப் பின்னும் மனைவியோடு சேர்ந்து வாழ்வதை விரும்பாமல் அதே தாய் தடுப்பது, உலக அளவில் தன்னை நிரூபிக்க வறுமையிலும் ராமானுஜன் போராடும் விதம், அடிமை இந்தியாவின் அறிவாளி ஒருவனை வெள்ளையரான கேம்ப்ரிட்ஜ் பல் கலைக் கழக கணித ஆசிரியர் ஹார்டி இனம் காணுவது… என்பதுவரை பயணிக்கும் திரைக்கதை, இரண்டாம் பாகத்தில் முற்றிலும் வேறு உருவம் எடுக்கிறது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணித ஆராய்ச்சிக்கு சேரும் ராமனுஜன் தனது கணித அறிவால் வெள்ளையர்களை வியக்க வைப்பது… மனைவியை அனுப்பி வைக்கும்படி கடிதம் எழுதியும் ராமானுஜனின் அம்மா அதனை விரும்பாததால் அவன் அங்கே சைவ சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டது….. அவனது பக்தி உணர்வையும் மனைவி மீதான காதல் உணர்வையும் மன நோய் என்று கிண்டல் செய்தபோது அவனது வேதனை …. டிபி நோய்க்கு ஆளானபோதும் சிகிச்சைக்கு தரப்படும் மருந்தில் அசைவம் கலந்து இருப்பதால் மருந்தை எடுத்துக் கொள்ளாமல் சுத்த சைவனாக கஷ்டப்பட்டது,… மனம் நொந்து தற்கொலைக்கு முயன்று கைது செய்யப்பட்டது…. சரியான இடம் கிடைக்காமல் கழிவறைக்குள் உட்கார்ந்து கொண்டு பல புதிய கணக்கு சமன்பாடுகளை வெறியோடு கண்டு பிடித்தது….
கடைசியில் நோய் முற்றிய நிலையில் ஃபெல்லோஷிப் ஆப் ராயல் சொசைட்டி பட்டமும் டிரினிட்டி கல்லூரியின் பட்டமும் பெற்று அந்தக் காலத்திலேயே வருடம் சுமார் ஒன்பதாயிரம் சம்பளம் மற்றும் உதவித் தொகை கிடைக்கும் என்ற நிலையில் நாடு திரும்பியது …. அந்த பணத்தில் பாதியை தன்னைப் போன்ற மாணவர்களின் நலனுக்கு கொடுத்தது… கணிதத்தோடு வாழ்ந்தே மறைந்து போனது என்று இரண்டாம் பாகம் அணு அணுவாய் கனம் ஏற்றி முடிவில் நம்மை உணர்ச்சிப் பெருக்குக்கு ஆளாக்குகிறது .
“இந்தியாவில் இரண்டு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கணித மேதைக்கு ஓரளவு நல்லதொரு வளமான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன் என்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது ” என்று பேராசிரியர் ஹார்டி நெகிழும் இடம் அற்புதம்.
ராமனுஜன் இறந்த நிலையில் அவன் கடல் கடந்து போனதுதான் அவனுக்கு நோய் வரக் காரணம் என்று முடிவு செய்து சடங்கு செய்ய வேண்டிய புரோகிதர் முதற்கொண்டு எல்லா பிராமணர்களும் அம்போ என்று விட்டுப் விட்டுப் போய்விட, ஒரு செட்டியாரும் , ஒரு முதலியாரும் , ஒரு ராவும் ஒன்று சேர்ந்து அதை செய்ய முடிவு செய்யும்போது வரும் அந்த வசனம் …. ” நாம இப்போ நம்பர்ல கம்மியாதான் இருக்கோம் . பரவால்ல. ராமனுஜனுக்கு எல்லா நம்பரும் பிடிக்கும். அவன் எல்லா எண்களையும் நேசிச்சவன்”…. நம்மை அறியாமல் நம் கண்களைக் குளமாக்குகிறது..இல்லையில்லை கடலாக்குகிறது
சாகும் தறுவாயில் ராமானுஜன் போட்ட மேக் பீட்டா சூத்திரத்துக்கு விடை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது என்பதுவும் ராமனுஜன் போட்ட ஒரு கணக்கு சூத்திரத்தின் அடிப்படையில்தான் ஏ டி எம் கார்டு மூலம் பணம் எடுக்கும் முறையே உருவாக்கப்பட்டது என்ற விசயமும் திரையில் எழுத்துக்களாய் விரியும்போது நம்மை அறியாமல் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
ராமானுஜனாக நடித்திருக்கும் அபிநய் (ஜெமினி சாவித்ரி ஜோடியின் பேரன் ) ராமானுஜனாகவே கூடு விட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் . உணர்வுகளை உள்வாங்கி நடித்து இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
அடுத்து நம்மை நடிப்பால் அசத்துபவர் ஹார்டியாக நடித்து இருக்கும் கெவின் மேக்கோவன்! அசத்தலான நடிப்பை அசால்ட்டாக தருகிறார் மனிதர்.
பாமாவாக நடித்து இருக்கும் ஜானகி ஆளும் நடிப்பும் அழகு . தவிர ஓய.ஜி.மகேந்திறன், சுகாசினி , அப்பாஸ், சரத்பாபு, ராதாரவி , நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், மனோபாலா, டெல்லி கணேஷ், ராஜா கிருஷ்ண மூர்த்தி, டி.பி.கஜேந்திரன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை சிறப்பாக செய்து இருக்கிறார்கள் .
படத்தின் கால கட்டத்தை மறு ஆக்கம் செய்திருப்பதில் சகுந்தலா ராஜ சேகரனின் உடைகள் , கலை இயக்கம் , மேக்கப் , பின்னணி இசை ஆகியவை கடும் உழைப்பை கொடுத்து காவியம் படைத்திருக்கின்றன. அதுவும் ரமேஷ் விநாயகத்தின் பின்னனி இசை படத்துக்கு பெரும்பலம். சன்னி ஜோசப்பின் ஒளிப்பதிவும் அப்படியே
ஆனால் யதார்த்தம் என்ற பெயரில் படம் முழுக்க பிராமண சமூகத்தினரையும் அவர்களது வழக்காடலையும் மட்டுமே காட்டிக் கொண்டிருப்பதில் ஒரு ‘நோக்கம்’ இருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது
ராமனுஜன் சாமி கும்பிடும் காட்சியில் பாடும் பாடலில் கூட ஒன்று இரண்டு மூன்று நான்கு என எண்கள் இருப்பது போல ஒரு பொருத்தமான பக்தி இலக்கிய பாடலை பயன்படுத்தி இருப்பது சிறப்பு. நம்ம ஊரு சாதி, சமயம், உறவுகள் , பழக்க வழக்கங்கள் எல்லாமே ஒரு மேதையை கடைசிவரை எப்படி சின்னாபின்னப் படுத்தியது என்ற ஓலத்தின் குரல் ஒரு பக்கம் நிற்காமல் ஒலிப்பது நெகிழ்ச்சி.
ராமானுஜனின் வாழ்க்கையிலேயே மேஜிக் இருப்பதை உள்வாங்கிக் கொண்டு எந்த சினிமாத்தனமும் பகட்டும் படாடோபமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பாக படத்தை நெறியாள்கை செய்து ஒரு அற்புதமான படத்தை வரலாற்றுப் பெட்டகமாக வழங்கி இருக்கும் ஞானராஜசேகரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ராமானுஜன் …. கணக்கு சூத்திரன் .
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————
ஞானராஜசேகரன் , அபிநய் வடி, கெவின் மேக்கோவன் , பாமா , ரமேஷ் விநாயகம் , சன்னி ஜோசப், சகுந்தலா ராஜ சேகரன்