“ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனிநீதியா?” ‘இராமானுஜர்’ படத் தயாரிப்பாளர் கேள்வி

HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் இளையராஜா இசையில் T.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம்  ஸ்ரீ இராமானுஜர். 
 
ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூகப் புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப் படத்தில் தயாரிப்பாளர் T.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில்  ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. 
 
இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 
 
நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியபோது, ”இது புராணப் படம் இல்லை. சரித்திரப் படம். 1000 வருடங்களுக்கு முன் வாழ்ந்து சாதனை புரிந்த மகானைப் பற்றிய படம். எல்லோரும் கடவுள் முன் சமம் என்று 1000 வருடங்களுக்கு முன்பே புரட்சி செய்தவர் ராமானுஜர். இந்தக் கால இளைஞர்களுக்கு இந்தப் படத்தைக் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக அரசும் உதவி செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் முதல்வர் அவர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். இதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இன்றைக்கும் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் பூத உடல் இருக்கிறது. குங்குமப்பூ அர்ச்சனை நடக்கிறது. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் தயாரிப்பாளர் T.கிருஷ்ணன். இராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்தவர் . ஆனால் மதம் என்று அவரைக் கட்டுப்படுத்த முடியாது. எல்லோருக்கும் எல்லாமும் கற்றுக் கொடுத்தவர். அந்த மகானைப் பற்றிய இந்த படம் பெரிய வெற்றியை பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார் 
 
நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளராக  வந்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் 24ஆம் பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபர் இராமானுஜர்  பேசியபோது, “இன்றைய தினம் நாம் எல்லோரும் ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும். நாம் இராமானுஜர் காலத்தில் இல்லையென்றாலும் இந்தப் படம் மூலம் நம்மை ராமானுஜர் காலத்துக்கு கொண்டு போயிருக்கார் தயாரிப்பாளர் கிருஷ்ணன். இராமானுஜர் 18 முறை நடந்து சென்று  திருக்கோட்டியூர்  நம்பியிடம் திருமந்திரம் கற்றுக்கொண்டார். அந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது. அப்படி சொல்லிக் கொடுத்தால் நீ நரகத்திற்கு போவாய் என்று  நம்பி  எச்சரித்தார். ஆனாலும் இராமானுஜர் திருக்கோட்டியூர்  கோயில் கோபுரத்தில் ஏறி அனைவரையும் அழைத்து அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார். அப்படிப்பட்ட இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கிறார் தி.கிருஷ்ணன். இந்தப் படம் வெற்றிப்படமாக அமையும்” என்றார்.
 
நடிகர் ராதாரவி பேசியபோது, “இராமானுஜர் 1027 ஆம் ஆண்டு பிறந்தவர். இங்கு ஆத்திகம், நாத்திகம் என்று வெவ்வேறு கருத்துகள் பேசப்படுகிறது. அப்படி எல்லாம் பேசக்கூடாது. ஏனென்றால் ஆத்திகம் இல்லாமல் நாத்திகம் கிடையாது; நாத்திகம் இல்லாமல் ஆத்திகம் கிடையாது. அந்த காலத்திலேயே சீர்திருத்தக் கருத்துக்களைப் பேசி எல்லோரையும் சமமாக நினைத்தவர்தான் இராமானுஜர்.
 
இந்தப் படத்தில் இராமனுஜராகவே வாழ்ந்திருக்கும் கிருஷ்ணனுக்கு நிச்சயம் விருது கிடைக்கும். இந்தப் படத்தை பார்த்தபோது கிருஷ்ணனை நான் இராமனுஜராகவே பார்த்தேன். நடிப்பு மட்டும் யார் சொல்லியும் வராது. கிருஷ்ணனுக்குள் இரமானுஜர் இருந்ததால்தான் அவரால் நடிக்க முடிந்தது. சீர்திருத்தவாதியாக நடிப்பது மிகவும் கஷ்டமானது. 
ஒருமுறை எனது தயாரிப்பில் கமல்ஹாசனை நடிக்கவப்பதற்காக அவரது கால்ஷீட் கேட்டு அவரைச் சந்திக்க சென்றேன். நானும் கமலும் அப்போது நல்ல நண்பர்கள். “உன்னை வச்சு ஒரு படம் எடுக்கணும்” என்று அவரிடம் கேட்டபோது, “இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் படம் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்” என்றவர்,
 
“நான் குளத்தில் போட்ட ஆமை மாதிரி. வாயைத் திறந்து கொண்டே இருக்கணும். எப்போ குருவி விழுதோ அப்போ வாயை டக்குன்னு மூடிக் கொள்ளணும் “என்றார். கமல் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் பெரிய அறிவாளி. இன்றைக்கு சினிமாவில் நடிகர் திலகம் இல்லையென்றாலும் கமல்ஹாசன் இருக்கிறார் என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம். இந்தப் படத்தை எல்லோரும் தியேட்டரில் போய் பார்க்கவேண்டும்”என்றார்.
 
படத்தின் தயாரிப்பாளரும் இராமானுஜர் வேடத்தில் நடித்திருப்பவருமான தி.கிருஷ்ணன் பேசியபோது, ” இந்தப்படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறேன். இது ஒரு பீரியட் படம். படத்தின் டீசர் வெளியானபோது. ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர். இளையராஜா சார் என்னை அழைத்து அது  பற்றி விசாரித்தார். 2018 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்க வேண்டிய படம். பல்வேறு சூழல்களால் தாமதமாகிவிட்டது.
 
படத்தை எடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் இறந்துவிட்டார். கேமராமேன் இறந்துவிட்டார். இப்படி நிறைய கஷ்டங்களைக் கடந்து இந்தப் படம் உருவாவதற்கு திரு வினோத் அவர்கள் படத்தின் கோ-டைரக்டர் மிகவும் உதவியாக இருந்தார் . இது வெற்றி பெறாமல் நான் விடமாட்டேன். இராமானுஜர் மீதும் என் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்தப் படத்தைத் தயாரித்ததை நான் பாக்கியமாக நினைக்கிறேன். இளையராஜா சார் இந்தப் படத்தில் 5 பாடல்கள் தந்திருக்கிறார். விரைவில் அந்தப் பாடல்கள் நேரு ஸ்டேடியத்தில் ‘லைவ்’ ஆக  இசையமைக்கப்படும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.இப்படத்திற்கு இதில் நடித்த நடிகர்கள் தவிர வேறு யாருமே சப்போர்ட் பண்ணவில்லை. சில பிரச்சினைகள் வந்தபோது தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டுகொள்ளவே இல்லை. இந்தப் படத்தின் தலைப்பை போல வேறு சில படங்களுக்கு வைக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்த்திருந்தபோதும் மற்ற படங்களுக்கு இதே தலைப்பை வைக்க அனுமதி கொடுப்பது என்ன நியாயம்? இதுவே ரஜினி படம், விஜய் படத்தின் டைட்டிலை வேறு படத்திற்கும் வைக்க அனுமதிப்பீர்களா? பிரச்சனைகளை தீர்க்கத்தானே  தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கு?
 
இந்தப் படத்திற்கு திருவாடுதுறை ஆதினம் மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார். அதேபோல் நடிகர் ஸ்ரீமன், ஒய்.ஜி.மகேந்திரன், ராதாரவி ஆகியோரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். கலை இயக்குனர் மகி ரொம்பவே சிரமப்பட்டு செட் போட்டு கொடுத்தார். ஸ்ரீரங்கம் செட், திருப்பதி செட், சோழ மன்னன் அரண்மனை செட் என்று படத்திற்கு பிரமாண்டம் சேர்த்துள்ளார் கலை இயக்குனர் மகி. படத்தில் சோழ மன்னன் அரண்மனை காட்சி மட்டும் இருபது நிமிடங்கள் இடம்பெறுகிறது.
 
ஆயிரம் வருடங்களுக்கு முன் இராமானுஜர் சமூக நீதிக்காக என்னவெல்லாம் செய்தார் என்று இந்தப் படம் பார்க்கும்போது புரியும். இந்த படத்திற்கு மீடியா பெரிய அளவில் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *