Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்க, ஹமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா சந்தீப், , சாய் ஸ்ரீ பிரபாகரன், , அக்ஷயா, அமித் பார்கவ் நடிப்பில் வாலி மோகன்தாஸ் எழுதி இயக்கி இருக்கும் படம் .
நன்றாகப் படித்தாலும் அடிக்கடி அடிதடி சண்டையில் சிக்குவதால் தன் மகனை (ஹமரேஷ்) அரசுப் பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு மாற்றுகிறார், ஒரு சலவைத் தொழிலாளி . காரணம் மனைவியின் (சாய் ஸ்ரீ) ஆசை .
தனியார் பள்ளியில் அதிக பீஸ் மற்றும் செலவு காரணமாக அவர், மனைவி, அவரோடு சலவைப் பணி செய்யும்- படிக்காத மகள் ( அக்ஷயா) , ஆகியோர் அதிகம் கஷ்டப்படுகின்றனர்.
ஆனால் அந்தத் தனியார் பள்ளியில் பையன் லோக்கல் என்ற இளக்காரம், அதனால் அங்கும் சண்டை. இவற்றோடு சக மாணவி ( பிரார்த்தனா ) விசயத்தில் கெட்ட பெயர் என்று நிலைமை சிக்கலாக, என்ன நடந்தது என்பதே படம்.
காட்சிகளின் பின் புலத்தை உருவாக்குவதிலும் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிக நடிகையரை தேர்வு செய்வதிலும் அவர்களிடம் வேலை வாங்கியதிலும் அசத்தி இருக்கிறார் வாலி மோகன்தாஸ் .
பிள்ளைக்கு சூடு போடுவது, டிசி கொடுப்பதாக மிரட்டுவது போன்றவை மறுமுறை திரைக்கதையில் வரும்போது அவற்றை அமைத்து இருக்கும் விதமும் அருமை. ஈவு இரக்கமுள்ள – வட்டிக்கு விடும் நபர் , நவநாகரீக இளைஞராக தமிழ் வாத்தியார் போன்றவை, அடடே வித்தியாசம் . தமிழ் ஆசிரியருக்கு ராவணன் என்ற பெயர் … அருமை. அருமை.
பின்னணியில் ஒலிக்கும் கும்பல் பேச்சு ஒலிகளை அர்த்தத்தோடு பயன்படுத்தி இருக்கிறார்கள்.
கடற்கரை சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்தபடி பேசும் காட்சிகளை ஒரு முக்கிய நிகழ்வாக ஆக்கி இருப்பதும் அருமை .
அதுவும் ஒரு காட்சியில் . இரு சக்கர வாகனத்தில் அப்பாவும் மகனும் வர, ஆட்டோவில் வந்து ஒரே வேகத்தில் பயணித்தபடி அம்மாவும் மகளும் பேசி விட்டுப் போகும் காட்சி இயக்குனர் வாலி மோகன் தாஸ் ஒளிப்பதிவாளர் மருதநாயகம் இருவருக்கும் பாராட்டு சேர்க்கிறது . பொதுவாக பின் புலங்களை கேமராவுக்குள் அடக்கிய விதத்திலும் ஓட்டக் காட்சிகளைப் படம் பிடித்த வகையிலும் பாராட்டுப் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் . (போக்குவரத்து விதிப்படி ரெண்டுமே தப்பு எனபது ஒரு பக்கம் இருக்கு)
ஆனந்த் மணியின் கலை இயக்கம், சுந்தர மூர்த்தியின் இசை இவையும் படத்துக்கு பக்க பலம் அல்லது பக்கா பலம்.
ஹம்ரேஷ் மிக சிறப்பாக நடித்துள்ளார் . உணர்ந்து முக பாவனைகள் காட்டுகிறார் . தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சரியான விடலை நாயகன் கிடைத்துள்ளார் . வாழ்த்துகள் .
அதீத குழந்தை முகம் சில இளமைக் காட்சிகளுக்கு பொருந்தவில்லை என்றாலும் பக்குவமான பதினொன்றாம் வகுப்பு சிறுமியாக மனதில் குட்டிக் கவிதையாகப் பதிகிறார் பிரார்த்தனா.
எவ்வளவு கஷ்டம் சிக்கலிலும் குடும்ப உறுப்பினர்கள் மேல் பாசம் குறையாத அப்பாவாக அசத்தி இருக்கிறார் ஆடுகளம் முருகதாஸ் .
அவரது மனைவியாக வரும் சாய் ஸ்ரீ நடிப்பு , உடல் மொழிகள், குரல் என்று எல்லா விசயத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதப் படுத்துகிறார் .
மகளாக வரும் அக்ஷயா நிதானமான இயல்பான நடிப்பில் ஈர்க்கிறார் .
அரசுப் பள்ளி நண்பன், தனியார் பள்ளியில் சண்டை போடும் நபர்கள், ஆதரவு காட்டும் நண்பன், நாயகியின் தோழி, அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி பிரின்சிபால் என்று அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
பள்ளி நண்பர்களை சும்மா பிரேமை நிரப்ப மட்டும் பயன்படுத்தாமல் , ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மையான காட்சி வைத்த வகையிலும் வாலி மோகன் தாஸ் பாராட்டப்பட வேண்டியவர்
இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தும் திரைக்கதைதான் பெரிதாக ஏமாற்றுகிறது .
படம் ஆரம்பித்த நோக்கத்தில் இருந்து விலகாமல் ஒன்று யதார்த்தமான பிரச்னைகளை வைத்து அசத்தி இருக்க வேண்டும் . அல்லது சுவாரஸ்யமான சினிமாவாவது எழுதி இருக்க வேண்டும்
இரண்டும் இல்லாமல் காதல் மோதல் , சுவர் கிறுக்கல், ஆண்டு விழா பாட்டு என்று மாறி மாறி சறுக்கிக் கொண்டும் வழுக்கிக் கொண்டும் பயணிக்கிறது படம்

நாயகனின் அக்காவை ஒருவன் டாவடிப்பது போல ஒரு காட்சி .படத்தில் வரும் பாணியில் அது எதற்கு என்று தெரியவில்லை. மேற்கொண்டு சில காட்சிகள் இருந்து தூக்கினார்களோ என்னவோ. எனில் இதையும் சேர்த்து தூக்கி இருக்கலாம்
அரசுப் பள்ளியில் ஆங்கிலத்திலும் நல்ல மார்க் வாங்கிய நிலையில் தனியார் பள்ளியில் சேரும்போது பிரின்சிபலின் ஆங்கிலத்தை அழகாக அப்பாவுக்கு மொழி பெயர்த்துச் சொல்லும் நாயகன், பிறகு வரும் ஒரு காட்சியில் ”வாட் ஈஸ் பயலாஜி” என்ற கேள்விக்கு ”எனக்கு தமிழில்தான் சொல்லத் தெரியும் . இங்கிலீஷில் தெரியாது “என்கிறார் . அவ்வளவு அலட்சியம்.
மொத்தத்தில் எடுக்கப்பட்ட விதத்தில் எடுப்பாக இருக்கும் படம் எழுதப்பட்ட விதத்தில் கழுத்தைக் கவ்வுகிறது