இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம்.
“நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம்,
அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாகடர்.தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன்,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி,
மதிமுக-வின் துணை பொதுச் செயலாளர் மல்லை. சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திரைப்படத்தினை பார்த்து உணர்ச்சிவசப் பட்டவர்களாக மாறிப்போனார்கள்.
அவர்களில் “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருபடி முன்னே சென்று தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும்,
“பரியேறும் பெருமாள்” படத்தினைப் பற்றி தலைவர்கள் பேசியது..
திரு.டாக்டர்.தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி):-
“இந்த “பரியேறும் பெருமாள்” ஒரு உலகத்தரம் வாய்ந்த கிளாசிக்கல் சினிமா. ஒவ்வொரு வசனமும், காட்சியும் மிக இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.
அதீதமான கற்பனையோ, அதீதமான காட்சிப் பதிவுகளோ இல்லாமல் உண்மைத்தன்மையுடன் இருக்கிறது இந்தப் படம்.
சாதீய ஒடுக்குமுறைகள் என்பது ஆண்டாண்டு காலமாக நிலைத்திருக்கும் ஒன்று. இது எவ்வளவு கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்பதையும் நாமறிவோம்.
அந்த சிக்கலை மிக இலகுவாக, முதிர்ச்சியாக, பக்குவமாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். எவர் மனதும் புண்படாத வகையில்,
சாதியவாதிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் இத்திரைப்படத்தை எடுத்து தமிழ்ச் சமூகத்திற்கு கொடையாக அளித்திருக்கிறார்கள் நம்முடைய மாரி செல்வராஜ் அவர்களும், பா.இரஞ்சித் அவர்களும்.
கலைத்துறையின் வாயிலாக இவர்களால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். “பரியேறும் பெருமாள்” அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெற்றித் திரைப்படமாக மாறியிருக்கிறது”.
திரு.சீமான் (நாம் தமிழர் கட்சி):-
“நிறைய படம் பார்த்து விட்டு இது படமல்ல பாடம் என்று சொல்வோம். ஆனால், இந்த “பரியேறும் பெருமாள்” படம் பார்க்கும் போது,
அவையெல்லாம் எவ்வளவு பொய்யான வார்த்தைகள் என்பது புரிகிறது. உண்மையிலேயே அப்படி சொல்ல வேண்டுமெனில் இந்த படத்தை சொல்லலாம்.
இன்னும் சொல்லப்போனால் திரையில் ஒரு புரட்சியை இந்தப் படம் செய்திருக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய வயது,
அனுபவம் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு ஆகச்சிறந்த படைப்பை தமிழ்ச் சமூகத்திற்கு தந்திருக்கிறார்.
மிகப்பெரிய பெரிய தாக்கத்தையும், வலியையும் இந்தப் படம் கடத்தி இருக்கிறது. ஒரு படைப்பாளியாக மாரி செல்வராஜும்,
ஒரு தயாரிப்பாளராக பா.இரஞ்சித்தும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நம் தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை பிள்ளைகள் நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்”.
“உண்மையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு இது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை.
இப்படி ஒரு அபூர்வமான திரைப்படத்தை தயாரித்த தோழர் பா.இரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துகள்.
இந்தப் படத்தின் கடைசிக் காட்சியைத் தவிர, முதல் காட்சியிலிருந்து சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதிய வன்மங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.
சாதி மறுப்புத் திருமணங்கள் செய்தவர்களின் மரணங்களை ஒரு பாடலின் வழியே காட்டிவிட்டு,
இறுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் உண்மையில் பாராட்டிற்குரியது.
திரைப்படம் தயாரிப்பது என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குள் சென்றுவிட்ட இந்த காலத்தில்,
இதுபோன்ற நேர்த்தியான படைப்பைத் தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் ஆகியோரை பாராட்டுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்”.
திரு.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி):-
“தமிழ்ச் சமூகம் முற்போக்கு பேசக்கூடியதாக இருந்தாலும், அது எப்படிப்பட்ட சாதிய சமூகமாக இருக்கிறது என்பதை இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம் மிக எதார்த்தமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
திரைப்படங்கள் வாயிலாக எது எதையோ சமூகத்தில் திணித்துக் கொண்டிருக்கிற இந்த சூழலில், இந்தப் படம் மிக முக்கியமான கருத்தினைத் தாங்கி வந்துள்ளது.
இதனை துணிந்து தயாரித்த இயக்குநர் பா. இரஞ்சித் அவர்களுக்கும், தன் மண்ணில் நடந்த சாதிய கொடுமைகளை பதிவு செய்த,
அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தின் வாயிலாக மனிதம் காக்கப்பட வேண்டும், மனிதம் போற்றப்பட வேண்டும்”.
ஆக மொத்தத்தில் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை அனைத்து தளத்திலும் உலுக்கியிருக்கிறான், பரியேறும் பெருமாள்.