ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் @ விமர்சனம்

2D என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜோதிகா & சூர்யா தயாரிக்க, மித்துன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேல் முருகன், லக்ஷ்மி அப்பத்தா நடிப்பில் அரசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகி அமேசான் பிரைம் தளத்தில் செப்டம்பர் 24 முதல் வெள்ளோடவிருக்கும் படம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் .

கிராமத்து ஏழை பாழைகளின் வாழ்க்கைப் பாட்டில் மாடுகள் என்பவை குடும்ப உறுப்பினர்கள் ஆகும் . மனிதர்களும் அவையும் சமம் . சில குடும்பங்களில் அவை மனிதனுக்கும் மேல் .

தமிழ் இனத்தில் மாடுகளுக்கும் மனிதர்களுக்குமான பந்தமும் பாசமும் ஒருவரை அண்டி ஒன்று பிழைக்கும் வாழ்வும் உயிர் வாழ்வின் உயர் நிலைகளில் ஒன்று .

அப்படி கிராமத்தில் புழுதிக்கு வாழ்க்கைப் பட்ட வாழ்க்கை , போகிற போக்கில் திருமண ஏற்பாடு, எளிய ஆனால் உயிர்ப்பான திருமணம் என்று அமையும் குன்னி முத்து – வீராயி தம்பதியின் வாழ்வில் ,

வீராயி சிறுவயதில் இருந்து வளர்த்து வரும் கருப்பன் வெள்ளையன் என்று இரண்டு காளைக் கன்றுகளும் கல்யாணச் சீராக வருகின்றன. அவர்களின் வாழ்க்கையையும் சீர் செய்கின்றன

குழந்தையாய் வந்த கன்றுகள் வளர்கின்றன . கொம்பு முளைத்துக் குதூகலிக்கின்றன

பிள்ளை இல்லாத அந்தத் தம்பதிக்குப் பிள்ளைகளாக வளர்கின்றன.

ஒரு நிலையில் அந்த ஜோடிக் காளைகள் காணாமல் போகின்றன . அது அந்தத் தம்பதியின் வாழ்நிலை சூழ்நிலை மனநிலை இவற்றை எப்படி பாதிக்கின்றன … காணமல் போனது எப்படி , அது எந்த அளவு மாநிலத்தின் கவனத்தை ஈர்க்கிறது .. அதனால் அந்த ஊருக்கு நடந்த நல்லது கெட்டது என்ன என்பதே இந்தப் படம் .

நாயைக் காணோம் என்று வந்த எம் எம் ஏ வீட்டுப் புகாருக்கு உடனடியாக வாலை ஆட்டும் காவல் துறை , ‘என் பிள்ளைகளைக் காணோம்’ என்று புகார் கொடுக்க வந்த கதை நாயகன் குன்னி முத்துவை விசாரிக்கும்போது, அவன் பிள்ளைகள் என்று சொல்வது காளை மாடுகளை என்று தெரிய வருகிறதே ..

அங்கே ஜல்லிக் கட்டுக் காளை போல துள்ளிப் ப் பாய்கிறது படம். வாழ்த்துகள் இயக்குனர் அரசில் மூர்த்தி . ஆரம்பக் காட்சிகளில் பாரதிராஜா நினைவுக்கு வருகிறார்

காய்ந்த பச்சைக் கிராமம், அதை காட்சிப் படுத்தும் சுகுமாரின் அற்புத ஒளிப்பதிவில் நாமும் அந்தக் கிராமத்தில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கி விடுகிறோம்.

கிரிஷின் இசையில் மண்வாசனை .

மித்துன் மாணிக்கம் , ரம்யா பாண்டியன் , வடிவேல் முருகன், வாணி போஜன் சிறப்பான நடிப்பு. ஆனால் அவ்வப்போது அசை போடும் மாடு போன்ற அசால்ட்டில் லக்ஷ்மி அப்பத்தா வெடிக்கும் சரவெடி வசனங்கள் ரகளை .

கிராம நலத் திட்டங்கள் ஏட்டில் மட்டுமே எழுப்பப்படும் அயோக்கியத்தனம், திட்ட மதிப்பீடுகளும் உண்மை செலவினத்துக்கும் உள்ள வித்தியாசம் , சில சமயம் விழுங்கப்ப்படும் மொத்த தொகைகள், அரசின் இலவசத் திட்டங்களில் அரசியல்வாதிகளின் ஊழல் இப்படி பல தவறுகளைச் சொல்லும் படம்

இன்னொரு பக்கம் எளிய மனிதர்களின் உழைப்பு , தனி மனிதனாக நீர்நிலையை தூர்வாரும் முதியவர். படிக்கத் துடிக்கும் கிராமத்துச் சிறுமியின் மனப்பாங்கு , நகர் வாழ் மக்களின் ஊர்ப் பாசம் , இவற்றைப் பாராட்டுவதோடு கிராம மக்களின் கால கால மூட நம்பிக்கைகளையும் கனிவோடு கண்டிக்கிறது .

என்ஜினீயரிங் படித்த புரோட்டா மாஸ்டர் தேவை என்பதில் தொடங்கி படத்தில் தெரியும் குறும்புகள் மட்டுமின்றி படம் பேசும் சமூக அரசியல் மிக சிறப்பானது. படத்தின் பெயரில் உள்ள இலக்கணப் பிழை , NARMATHA பெரிய சாமி என்ற பெயரை பல இடங்களில் NARAMATHA ( யூ மீன் நரமாதா? வாணி போஜன் மேல் அப்படி என்னப்பா கோபம் ?) என்று பயன்படுத்துவது , நாயின் குணத்தை மாட்டின் குணமாக சொல்லும் அலட்சியம், காது குத்த கலாட்டா செய்யும் நாயகன் காயடித்த கதையை மட்டும் சர்வ சாதரணமாகச் சொல்லும் போங்கு,லாடம் கட்டுவதுதான் மாட்டுக்கு நல்லது என்று தெரியாத தற்குறித்தமான கதாபாத்திரப் படைப்பு , நாயகன் மாடுகளை மீட்டு வருவதில் உள்ள சினிமாத்தனம் , செல்ல வேண்டிய பாதையில் இருந்து விலகி ஓடும் திரைக்கதை என்று… குறைகள் இல்லாமல் இல்லை . நாய் வளர்த்த ஒருவர் அந்த அனுபவத்தை வைத்து மாடு வளர்ப்பது பற்றிய திரைக்கதை எழுதியது போலவே இருக்கிறது சில காட்சிகள்! பக்ரீத் திரைப்படம் நினைவுக்கு வருவதும் தவிர்க்க முடியாத ஒன்று

எல்லா அரசியல் தலைவர்களையும் மறைமுகமாக விமர்சிக்கும் படம் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை மட்டும் இப்படி நேரிடயாக வாரி இருக்கத் தேவை இல்லை (அந்த கதாபாத்திரம் பேசும் கடைசி வசனம் ஒரு சின்ன சமாதனம் என்றாலும் கூட !) அது ஒட்டு மொத்த அயோக்கிய அரசியலை சாடும் படத்தின் சமூக அக்கறைப் பார்வையை சற்றே கீழே இழுக்கிறது.

காணமல் போன மாடுகளுக்குப் பின்னால் இருப்பது லோக்கல் அரசியல் என்று பார்வையைக் குறுக்கிக் கொள்ளாமல் , இன்னும் ஆழமான பார்வையோடு கதை சொல்லி இருந்தால் BETAவை BATA வால் அடிக்கும் ஒரு வாய்ப்பாக அதை பயன்படுத்தியும் இருக்கலாம்

ஆனாலும் என்ன ..

கலை கலைக்காகவே.. அது பொழுது போக்கு , வியாபாரம், என்று முடிவு செய்து இன்னும் கோடி கோடிகளை சினிமா மூலம் சம்பாதிக்க முடியும் என்ற நிலையில் அப்படியே போகாமல்

மன சாட்சியோடு சமூக அக்கறையோடு கலை மக்களுக்காகவே என்ற முடிவோடு நல்ல படங்களைத் தரும்

2D என்டர்டெயின்மென்ட்ஸ் ஜோதிகா & சூர்யா மற்றும் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் ஆகியோருக்குப் பாராட்டுகள்

உங்கள் நற்பணி தொடர்க .

இன்னும் சிறப்பான – பொருத்தமான – தரமான படங்களைத் தருக !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *