ஆச்சி, பொம்பள சிவாஜி, ஆயிரம் படம் நடித்த அபூர்வ நடிகை என்றெல்லாம் பாராட்டப்படும் மனோரமா தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மட்டும் அல்ல….. உலக சினிமாவோடு ஒப்பிட்டாலே ஒரு அதிசயம்தான் . கொஞ்சம் ஆழமாக அழுத்தமாக ஆராய்ந்து பார்த்தால் எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைஞர்களை எல்லாம் நாம் பெற்று இருக்கிறோம் என்று எண்ணி பெருமைப் படுவதற்கு சரியான உதாரணம் மனோரமா .
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாந்தி , அமரர் எம்ஜிஆர் , முதல்வர் ஜெயலலிதா , ஆந்திர எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்ட என் டி ராமராவ் ஆகிய ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை கொண்ட ஒரே நடிகை மனோரமா
1958ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை என்ற படத்தில் நகைசுவை நடிகையாக அறிமுகம் ஆகி , 1963 ஆம் ஆண்டு கொஞ்சும் குமரி என்ற படத்தில் கதாநாயகியாக ஆகி, அலங்காரி , பெரிய மனிதன் ஆகிய மேலும் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து மீண்டும் காமெடிக்கு அவர்…….
இறங்கி வந்தார் என்று சொல்ல முடியாது . ஏறி வந்தார் என்றுதான் சொல்லவேண்டும் . 1985 ஆம் ஆண்டிலேயே 1000 படங்களை முடித்த மனோரமாவின் படப் பட்டியலில் 1200 க்கு மேல் வரிசை எண்கள் வந்து விட்டன.
மார்க்கெட்டின் உச்சியில் இவர் இருந்த 60, 70 80களில் இவர் இல்லாத படமே இல்லை . இவர் ஜோடியாக நடிக்காத காமெடி நடிகர்களே இல்லை. இவருக்கு ஜோடியாக நடிக்காத காமெடி நடிகர்கள் யாருக்கும் பெரிய நடிகர் என்ற அந்தஸ்து தமிழ் ரசிகனின் மனதில் இல்லை.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்த மனோரமாவின் பற்றி இந்தக் கட்டுரையில் வரப் போகிற செய்திகள் உங்களை கண்டிப்பாக ஆச்சர்யப்படுத்தும் .
மனோரமா தன நடிப்புலக வாழ்க்கையை பற்றி சொன்னது இதுதான் . கேமரா விளக்கு வெளிச்சம் பழகிப் போச்சு படங்களில் நடிக்காத ஒரு வாழ்க்கையை என்னால் யோசித்துப் பார்க்கக் கூட . முடியவில்லை நடிக்கும்போதே என் உயிர் பிரிய வேண்டும் ”
யார் இந்த மனோரமா? எப்படி வளர்ந்தது இந்தக் கலை ஆல மரம்.? எப்படி எங்கே வளர்ந்து விரிந்தது இது ?
பார்ப்போம்.
பலபேர் நினைப்பதுபோல் மனோரமாவின் சொந்த ஓர் காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் அல்ல. மனோரமா பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு நீங்கள் கோபிசாந்தா பற்றித் தெரிந்து கொள்வது . முக்கியம்
கோபி சாந்தா …..
அப்போதய வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மன்னார்குடியில் ரோடு காண்ட்ராக்டராக இருந்து பெரும் பணம் குவித்தார் ஒருவர் . அந்த கான்ட்ராக்டர் கொண்டு வரும் வெள்ளி நாணயங்களை எண்ண முடியாமல், ‘அரிக்கன்சட்டி’யில் கொட்டி துணியால் ‘வேடு’ கட்டி வைப்பாராம் அவரது மனைவி.
பாசத்தால் அந்த மனைவி செய்த ஒரு காரியம் அவருக்கே வினையானது . தன் கூடப் பிறந்த தங்கையையே கணவருக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்தார் அந்த அப்பாவி
விளைவு ? வீட்டு நிர்வாகம் கைமாறியது. தங்கையின் ஆதிக்கம் வலுத்தது .பல வழிகளிலும் அந்த அப்பாவிப் பெண்மணியை கணவரும் புது மனைவியான தங்கையும் அவமானம் மற்றும் கொடுமைகளுக்கு ஆளாக்க, பொறுக்கமுடியாத அந்தப் பெண்மணி தூக்குப் போட்டுக்கொள்ள முயல, பிறந்து ஒரு வயது கூட ஆகாத நிலையில் கத்தி ஊரைக் கூட்டி அம்மாவைக் காப்பாற்றிய பெண் குழந்தைதான் கோபிசாந்தா .
ஆனாலும் பலன் இல்லை .
“தஞ்சை மாவட்டத்துக்குள்ளேயே நீயும் உன் குழந்தையும் இருக்கக் கூடாது” என்று மிரட்டப்பட்டு வீட்டை விட்டு, சொந்த ஊரைவிட்டு, மாவட்டத்தை விட்டு புறப்பட்டு அந்த அப்பாவிப் பெண்ணும் அவரது பெண் குழந்தையும் வந்து நின்ற ஊர்தான் பள்ளத்தூர்.
பலகாரம் சுட்டு விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் கோபி சாந்தாவைக் காப்பாற்றி இருக்கிறார் அவரது தாயார். தனது இரண்டாவது வயதில், திருநீலகண்டர் படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய “உன்னழகை காண இரு கண்கள் போதாதே” என்ற பாட்டை கோபிசாந்தா ஒரு பொம்மையை வைத்துகே கொண்டு பாட , அதைக் கேட்ட அம்மாவுக்கு எல்லையில்லாத பூரிப்பு!
அதன்பிறகு யார் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் சரி ..பள்ளிக்கூட விழாக்கள் என்றாலும் சரி அங்கே கோபிசாந்தாவின்வின் பாட்டுதான் .
பள்ளிக்கூடம் போய் வந்தபிறகு பலகாரம் விற்க சினிமா டெண்ட் கொட்டகைக்குப் போவாராம் கோபிசாந்தா . அங்கே பலகாரம் விற்பதுடன். எந்தக் காட்சியிலும் எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்க இலவச அனுமதியும் அவருக்கு உண்டு
ஒருமுறை பக்கத்தில் உள்ள கோட்டையூரில் ‘ஏகாதசி’ கொண்டாட்டம் நடந்து, அன்றைய தினம் இரவு அந்த ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை நடத்தினார்கள். அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்குப் பாட வராது.
அதனால் அவருக்காகப் பாடவும் நாடகத்தில் இடையிடையே நடனமாடவும் ஒரு பெண்ணைத் தேடியிருக்கிறார்கள் அப்போது யாரோ கோபிசாந்தாவைப் பற்றி சொல்ல , அவர்கள் வந்து அழைத்து போனார்கள்.
நாடகத்தில் கோபிசாந்தாவின் பாட்டையும் குரல் இனிமையையும் டான்சையும் பார்த்து எல்லோரும் வெகுவாகப் பாராட்டினார்கள்.இதில் பணியாற்றிய மறைந்த டைரக்டர் சுப்பராமனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராசனும் கோபி சாந்தவை பாராட்டி புதிதாக ஒரு பெயர் வைத்தார்கள் .அந்தப் பெயர்தான் மனோரமா.
கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீஷியனாக இருந்தவர் பால்ராஜ். மனோரமாவின் பாட்டையும் ஆட்டத்தையும் மிகவும் ரசித்த அவர், புதுக்கோட்டையில் நடந்த ‘வீதியின் விசித்திரம்’ என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மனோரமாவை சொல்லி வைத்து விட்டு , அப்புறம் வந்து தகவல் சொன்னார்.
முதலில் பயந்த மனோரமாவை தைரியம் சொல்லி வசனத்தைச் சொல்லிக் கொடுத்து சிறப்பாக நடிக்கவும் வைத்தார். வெறுமனே பாடியும் நடனமாடியும் வந்த மனோரமா நடிகையானது இப்படிதான்.
இதையடுத்து சித்தன்ன வாசல் என்ற ஊரில் யார் மகன்?’என்ற நாடகத்தில் கதாநாயகியாக மனோரமா நடிக்க, நாடகத்திற்கு தலைமை வகித்தவர் முதன் முதலில் கதை, வசனம், இசை, நடிப்பு, தயாரிப்பு, டைரக்ஷன் என்று பல துறைகளிலும் திரைஉலகில் சாதனை புரிந்த வீணை எஸ்.பாலசந்தர் .
நாடகத்தின் இடைவேளையில் அந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு வேண்டியவர்களால், இரண்டாவது கதாநாயகிக்கு ஒரு வெள்ளிக் குவளை பரிசளிக்கும்படி, டைரக்டர் எஸ். பாலசந்தரிடம் தரப்பட்டது.
அதை வாங்கிக்கொண்டு நாடகத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய எஸ். பாலசந்தர், “இந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்மணிக்கு பரிசு கொடுக்குமாறு என்னிடம் ஒரு வெள்ளிக் குவளையைத் தந்திருக்கிறார்கள். ஆனால் முறையாக இந்தப் பரிசைத் தரவேண்டுமானால் சிறந்த முறையில் கதாநாயகியாக நடித்த மனோரமாவுக்குதான் தரவேண்டும்.
ஆனால் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இதை இரண்டாவது கதாநாயகிக்குத் தருகிறேன்”என்று கூறி அதை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.அதன்பிறகு மனோரமாவின் நடிப்பைப் பாராட்டி தனியாக பரிசு வழங்கினார்.
இந்த நேரம்தான் கவிஞர் கண்ணதாசன் ‘மாலையிட்ட மங்கை’ படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். அதில் மனோரமாவுக்கு ஏதாவது வேடம் தரவேண்டும் என்பதற்காக ‘காமெடி’ நடிகையாக ஒப்பந்தம் செய்தார். நகைச்சுவை நடிகையாக அதுவரையில் மனோரமா நடித்ததே இல்லை.
பயந்து போன மனோரமா “இதற்கு முன் இப்படி வேஷத்தில் நடிச்சதில்லயே…” என்று கூற, அதற்கு கவிஞர் கண்ணதாசன், “பரவாயில்லை நடி எல்லாம் சரியாப்போகும் உன் திறமைக்கு இதில் நல்ல பேர் வரும்” என்று ஆறுதலும் தைரியமும் சொல்லி நடிக்க வைத்தார். அன்று அவர் சிரிப்பு நடிகையாக அறிமுகப்படுத்திய வாழ்க்கைதான் மனோரமாவுக்கு கடைசிவரை நிலைத்து நிற்கிறது.
நகைச்சுவை நடிகையாக வலம் வந்த மனோரமாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் டி.ஆர்.சுந்தரம். தனது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் அவரே இயக்கிய ‘கொஞ்சும் குமரி’ படத்தில் மனோரமாவை நாயகியாக்கினார். இதில் ஹீரோவாக நடித்தது ஆர்.எஸ்.மனோகர்.
மனோரமாவை ஹீரோயினாக மக்கள் ஏற்றனர். படமும் ஓடியது. ஆனாலும் ஒரு சில படங்களுக்கு பிறகு அவரால் கதாநாயகியாக நீடிக்க முடியவில்லை. மீண்டும் நகைச்சுவை வேடங்களுக்கே அழைத்தனர் .
மனோரமா கண்ணதாசனிடம் “எல்லாம் உங்களாலதான் . கதாநாயகியாக நடிக்கும் லட்சியத்தில் இருந்த என்னை நீங்கள் காமெடி நடிகையாக அறிமுகப்படுத்தியதால்தான் இப்ப எல்லோரும் காமெடிக்கு கூப்பிடறாங்க என்று செல்லமாகக் கோபித்துக் கொள்ள ,
அந்த மகா கவிஞன் தனக்கே உரிய கள்ளமில்லாச் சிரிப்போடு மனோரமாவிடம் ” அட பைத்தியமே… நீ கதாநாயகியாக மட்டும் நடித்தால் பத்து வருடம்தான் தாக்குப் பிடிப்பாய். அதே நகைச்சுவை நடிகையாகிவிட்டால் நீ விரும்பும் வரை நடித்துக் கொண்டே இருப்பாய்” . என்றார் .
செல்லக் கோபம் குறையாமல் “எனக்கு சாகும்வரை கூட நடிக்க ஆசைதான் ” என்றார் மனோரமா . கவியரசர் மறுபடியும் சிரித்துக் கொண்டே “சரி” என்றார் . அந்த சரி என்ற வார்த்தையின் ஆயுள் 55 ஆண்டுகள் நீடித்து இப்போது அமரத்துவம் அடைந்து இருக்கிறது .
* பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் படத்தில் அறிஞர் அண்ணா காசுப்பட்டராக நடிப்பார். சிதம்பரத்தில் நடந்த இந்த நாடகத்தில் கதாநாயகி இந்துமதியாக மனோரமா நடித்தார். அதே போல முரசொலி சொர்ணம் எழுதிய ‘விடை கொடு தாயே’ நாடகத்திலும் மனோரமா கதாநாயகி . அண்ணா பலமுறை பார்த்து ரசித்த நாடகம் இது .
ஒருசமயம் சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் நடந்த இந்த நாடகத்தில் மனோரமாவால் நடிக்க முடியாமல் போய் விட்டது. தொடர்ந்து தொடர்ந்து படப்பிடிப்பு இருந்து வந்ததால் “என்னால் இனி நடிக்க முடியாது” என்று கூறிவிட்டார்.
அதனால், அந்த நாடகத்திற்கு வேறு ஒரு நடிகையைக் கதாநாயகியாகப் போட்டு நாடகத்தை நடத்தினார்கள். நாடகத்திற்கு தலைமை வகுத்த அண்ணா சொர்ணத்திடம் “நாடகத்தினால்தான் நடிகர் – நடிகைகளுக்குப் பெருமை” என்று நினைத்தேன். ஆனால் நேற்று நாடகம் பார்த்த பிறகு நடிகர் – நடிகைகளினால் தான் நாடகத்திற்குப் பெருமை என்பது புரிந்தது!
இனிமேல் மனோரமா இந்த நாடகத்தில் நடிக்காவிட்டால் நாடகத்தை நிறுத்திவிடு. தொடர்ந்து போடாதே” என்று சொன்னார்.
* இன்னொரு முறை இந்த நாடகம் தென்மாவட்டத்தில் உள்ள கல்லல் என்ற ஊரில் நடந்தது. தலைமை வகித்தவர கலைஞர் கருணாநிதி
நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் “நம்ம மாவட்டத்துப்பொண்ணு ரொம்ப நல்லா நடிக்குது” என்று பெருமையாகப் பேசிக் கொள்ள ,கலைஞர காதில் இது விழுந்தது தனது பாராட்டுரையில் இதைக் குறிப்பிட்ட கலைஞர் “மனோரமாவின் முன்னோர்கள் எங்கள் (தஞ்சை) மாவட்டத்துக்காரர்கள். அதை நினைக்கும்போது எனக்கும் பெருமையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
* ‘பாலும் பழமும்’ படத்தில் பல நடிக நடிகையருடன் கூட்டாக மனோரமா நடிக்க வேண்டிய ஒரு முக்கியக் காட்சி முதல் நாள் இரவு படுக்கப் போகும்போது மனோரமாவுக்கு கடுமையாக காய்ச்சல் . காலையில் எழுந்தால் நெருப்பு போல் உடம்பு கொதிக்க முகம், கை தவிர உடம்பு முழுவதும் அம்மை கண்டிருந்தது.
இதற்குள் படப்பிடிப்புக்குக் கூட்டிப்போக கார் வந்துவிட்டது. உடனே மனோரமாவின் அம்மா “எதுவும் சொல்லிக் கொள்ள வேண்டாம். பேசாமல் புறப்படு. போவோம்” என்றார்.
ஸ்டுடியோவில் மேக்கப்மேன் ரங்கசாமி, மேக்கப் போட முகத்தில் கையை வைத்தவர் பட்டென்று கையை எடுத்துக் கொண்டு, “என்னம்மா இது, முகத்தில் கையை வைக்க முடியலை. தீ மாதிரி சுடுது எப்படி மேக்கப் போடுறது?” என்றார்.
நடிகை சுந்தரிபாய் வந்து மேக்கப்மேனை வெளியே போகச் சொல்லிவிட்டு. ஜாக்கெட்டைக் கழற்றிப் பார்த்தவர் பதறிப் போய் விட்டார்.. மனோரமாவின் உடம்பு முழுவதும் அம்மைக் கொப்புளங்கள்!. தயாரிப்பாளர் ஜி.என் வேலுமணிக்கு விஷயம் போக, அவர் வநது “ஏன்மா நீ முன்னயே சொல்லல? நாங்க என்ன ராட்சசர்களா/” என்று கண்டித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
* மனோரமாவை நல்லதொரு குணச்சித்திர நடிகையாக மக்களிடம் வெளிப்படுத்திய படம் படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ தான். சிவாஜி கணேசன் மட்டுமல்ல…அந்தப் படத்தில் நடித்த எல்லாருமே அன்றைக்கு மிகவும் பெரிய நட்சத்திரங்கள் .
இயக்குனர் ஏ பி என் நாகராஜன் முதல் நாள் படப்பிடிப்பின் போது, தனியாக மனோரமாவிடம் “‘மற்ற நடிகர் நடிகைகளைப்பத்தி ஒண்ணும் கவலைப்படாதே. அவர்கள் எல்லாம் வெறும் கதாபாத்திரங்கள்தான். அவர்கள் எல்லாரையும்விட நீதான் பெரிய ஆள் என்பது போல நெனைச்சுக்கிட்டு நடி, நல்ல பேர் வாங்கணும்” என்று உற்சாகப்படுத்த.. இன்றும் மனோரமாவின் பெயர் சொல்லும் படங்களில் அதுவும் ஒன்று .
* 1976 தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்ட நேரம்.. ஒரு நாள் மத்திய அரசு வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மனோரமா வீட்டில் சோதனை போட்டார்கள். ஒரு நாள் முழுவதும் ஒரு அடி இடம் கூட விடாமல் சோதனை.
எவ்வளவோ துருவித் துருவிப் பார்த்தும் ஒன்றும் கிடைக்காத அதிகாரிகள் சலித்துப் போய் ,கிளம்பும் போது மனோரமாவின் மகன் பூபதியிடம் சொன்னது “தம்பி! உங்க அம்மாவை இனிமேலாவது, எங்களுக்காகவாவது அதிகமா சம்பளம் வாங்கச் சொல்லப்பா!” என்று கூறிவிட்டுப் போனார்கள்!
* பிரபல இந்தி நகைசுவை நடிகர் மெகமூத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் .அவர் தன்னுடைய இந்திப் படம் ஒன்றில் மனோரமாவை நடிக்க வைக்க விரும்பினர் மனோரமாவை தேடிவந்து சந்தித்து தன படத்தில் நடிக்குமாறு கேட்டார் “எனக்கு இந்தி தெரியாதே என்று மனோரமா மறுத்தும் “நீங்கள் நடிப்பதாக இருந்தால் அந்தப் படத்தை எடுப்பேன். இல்லாவிட்டால் கைவிட்டு விடுவேன்” என்றார்.
தவிர படத்தில் நீங்கள் தமிழ்நாட்டு பெண்ணைப் போலவே சேலை கட்டி நடிக்க வேண்டும் என்றும் மனோரமாவிடம் சொன்னார் அந்தப் படத்துக்காக தனியாக ஒரு இந்தி ஆசிரியரை வைத்து இந்தி படித்தார் மனோரமா. .ஷூட்டிங் முடிந்ததும் மனோரமாவே டப்பிங் பேச வேண்டும் என்றார் மெகமூத்.
ஒரே நாளில் பேசி முடித்துக் கொடுத்து விட்டு வந்தார் மனோரமா அதுதான் ‘குன்வாரா பாப்’ என்ற படம். (பிரம்மச்சாரித் தந்தை என்று பொருள்). மனோரமா நடித்த முதல் இந்திப் படம் அது.
* சென்னை ஓட்டல் அட்லாண்டிக்கில் ‘கமல் இருவேடத்தில் நடித்த கல்யாணராமன்’திரைப் படத்தின் 100வது நாள் விழா நடந்து கொண்டிருந்தது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய கவியரசு கண்ணதாசன்தன பேச்சில் “டைரக்டர் கே. பாலசந்தர் எத்தனையோ நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி பெருமை பெற்றிருக்கிறார். ஆனால் என்னால் அப்படி அறிமுகப்படுத்த முடியவில்லை. என்னால் மனோரமாவை மட்டும்தான் அறிமுகப்படுத்த முடிந்தது” என்று கூற ,
அடுத்துப் பேசிய டைரக்டர் கே. பாலசந்தர், “கவிஞர் கண்ணதாசன் நான் நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும்,அவர் மனோரமாவை மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது என்றும் கூறினார். நான் நூறு பேர்களை அறிமுகப்படுத்தியதும்,அவர் மனோரமாவை அறிமுகப்படுத்தியதும் சமம். அந்த நூறு பேருக்கு சமமான திறமைசாலி மனோரமா” என்றார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுகவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவிற்குப போகும்போது மனோரமாவிடம்,”யார் யாருக்கோ பாராட்டு விழா நடத்துகிறார்கள்.உன்னைப் போன்ற நல்ல கலைஞர்களை தேடிப் பிடித்து விழாக்கள் நடத்துகிறார்களாஎன்றால் இல்லை. நான்அமெரிக்காவில் இருந்து வந்ததும் உனக்கு பெரிய அளவில் ஒரு பாராட்டு விழா நடத்தப் போகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால் உயிரும் உடலுமாகச் சென்ற கண்ணதாசன் குடைசாய்ந்த தங்கத் தேர்போல பிணமாகத்தான் இந்தியா வந்தார். இதன் பிறகு எத்தனையோ பேர் பாராட்டுவிழா நடத்த அனுமதி கேட்டும் மனோரமா மறுத்து விட்டார்
.* ஒரு படத்தில் சொன்ன கதைக்கு மாறாக மகளையே விபச்சாரத்தில் ஈடுபடுத்த்தும் தாய் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னபோது “நான் விபச்சார விடுதியின் தலைவியாகக்கூடநடித்திருக்கிறேன். விபச்சாரியாகவும் நடித்திருக்கிறேன்.
ஆனால் தம் மகளை வைத்து விபச்சாரம் செய்யும் குடும்பத் தலைவியாக நடித்ததில்லை. குடும்பத் தலைவி மானத்தைக் காக்க வேண்டியவள் அவள் தன மகளை வைத்து விபச்சாரம் செய்வது போல் நடிக்கமாட்டேன். தப்பா நினைக்காதீங்க!” என்று சொல்லிவிட்டு, உடனடியாக முன்பணத்தையும், கம்பெனி உடைகளையும் திருப்பிக் கொடுத்தவர் மனோரமா.
* மனோரமாவின் தாயாரின் மணவாழ்க்கையைப் போலவே மனோரமாவின் மணவாழ்க்கையும் பரிதாபகரமானது . நாடகங்களில் உடன் நடித்தவரும் ஒரு நாடகக் கம்பெனி உரிமையாளருமான ராமநாதன் என்பவரைக் காதலித்து மணந்தார் மனோரமா. ஆனால் ராமநாதனிடம் மனோரமாவின் நடிப்பை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கமே அதிகம் இருந்தது .
ஆண் குழந்தை வேண்டும் என்று எல்லோரும் தவமிருந்த காலத்தில் ஆண் குழந்தை பிறந்தும் “அந்தக் குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து ” என்று ஜோசியக்காரன் சொன்னதை நம்பி பிறந்து குழந்தையையே சித்திரவதை செய்தாராம் .ராமநாதன் .
போராடி மனோரமா குழந்தையை காப்பாற்ற , பச்சை உடம்பு என்றும் பாராமல் உடனடியாக நாடகத்தில் நடிக்க வரவேண்டும் என்று மனோரமாவுக்கும் சித்திரவதைகள் . ! வெறுத்துப் பொய் மகனைக் காப்பாற்ற மண வாழ்க்கையை தூக்கி எறிந்தார் மனோரமா.
* கே. பாலசந்தர் இயக்கிய‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் கமல் ஒரு ஆங்கிலப் புத்தகம் ஒன்றைக் கொண்டு வந்து மனோரமாவிடம் காட்டினார். 85-ம் ஆண்டுக்கான ‘கின்னஸ் புக் ஆஃப் மூவி ரெக்கார்ட்’ என்ற அந்தப் புத்தகத்தில்,
மனோரமாவின் புகைப் படத்தைப் போட்டு, “ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து முடித்து விட்ட இவர் இப்போதும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்” என்று எழுதப்பட்டிருந்தது.
அப்போதுதான் அது எவ்வளவு முக்கிய விஷயம் என்பது மனோரமாவுக்கே புரிந்தது
* மாநில அரசின் அண்ணா விருது, எம்.ஜி.ஆர். விருது, ஜெயலலிதா விருது. என்.எஸ்.கிருஷ்ணன் விருது, கலைமாமணி விருது, மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ விருது, சத்தியபாமா பல்கலைக் கழகம் கொடுத்த டாக்டர் பட்டம்,
‘புதிய பாதை’ படத்திற்காக சிறந்த குணசித்தர நடிகையாக தேர்வு செய்து90-ம் ஆண்டு மத்திய அரசு வழ்ங்கிய தேசிய விருது இவை எல்லாம் மனோரமாவின் .கலைக் கவுரவங்கள்
* நடிகர் சூர்யா பங்கு பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் “ஐந்து முதல்வர்களுடன் நடித்த நடிகை யாரு?” என்ற கேள்வி கேட்கப் பட, பதிலை சொன்ன சூர்யா, நேரடியாக பெயர் சொல்லாமல் “டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே…” என்று மனோரமா பாடிய பாடலையும் சேர்த்துப் பாடியதைப் பார்த்த மனோரமா கண்ணில் இருந்து கரகரவென சந்தோஷக் கண்ணீர்.
* குளியல் அறையில் விழுந்து அடிபட்டது …காளஹஸ்திக்குச் சென்றிருந்த போது எதிர்பாராமல் தவறி விழுந்து தலையில் அடிபட்டது ….
–என்று மனோரமா சந்தித்த விபத்துகள் பல. தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்து நினவு தப்பியது . நாகேஷ் மீது மிகப் பெரும் மரியாதை கொண்ட மனோரமாவிடம் அவரைப் பற்றிப் பேசினால் உற்சாகமாக உணர்வார் என்று எண்ணி அவர் உதவியாளர்கள் நாகேஷ் பற்றி பேச்சைஎடுக்க
“நாகேஷ்னா யார” என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக , அதிர்ந்து போனார்கள் எல்லோரும் . ஆனாலும் அதில் இருந்து மீண்ட மனோரமா குணமடைந்து சிங்கம்’இரண்டாம் பாகத்தில் நடித்தார்.
அது மட்டுமல்ல.. அடுத்து வெளியான காதலே என்னைக் காதலி படத்தில், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்று அவரை அறிமுகப் படுத்திய கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளுக்கு ஏற்ப,
கால்களைத் தாங்கித் தாங்கி நடக்கும் உடல் நிலையிலும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் பழைய பாடல்களை எல்லாம் பாடும் ஒரு பாத்திரத்தில் நடுத்தர வயது இளம் வயது நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்தார் மனோரமா.
இது மட்டுமா.. இந்தித் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த — ஷாருக்கான் தீபிகா படுகோனே நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில், மனோரமாவுக்கு முக்கியமான ரோல். ஆரம்பத்தில் பாதிப் படத்தில் நடித்தவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்து ஷாருக்கானுடன் பல முக்கியக் காட்சிகளில் நடித்து அசத்தி இருக்கிறார்.
* “இளைஞர்கள் முதலில் பெற்றோர், படிப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை காதலிக்க வேண்டும். ஒரு அந்தஸ்துக்கு வந்த பின்னர் பெண்களை காதலியுங்கள். 20 வயதில் காதலித்து உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
மணமகன், மணமகள் இருவருமே எய்ட்ஸ் சோதனைக்கு பின் திருமணம் செய்து கொள்வதை அரசு கட்டாயப்படுத்த வேண்டும். இனி நான் நடிக்கும் திரைப்படங்களில் எனது பெயர் வீர மறத்தி மனோரமா என வெளிவரும்” என்றார் மனோரமா.
* 1200 படங்களுக்கு மேல் நடித்த பின்னரும் தான் விரும்பும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியவிலையே என்ற கவலை மனோரமாவிற்கு இருந்தது . அரவாணியாக நடிக்கும் ஆசைதான் அது.
பொதுவாக ஒரு ஆண் அரவாணியாக நடிப்பது சுலபம் . ஆனால் பெண்களுக்கு அது கஷ்டம். உடைகள் உடல் மொழிகள் இவற்றில் அது ஒரு மைல் கல் சாதனையாக இருக்கும் . பெரும் புகழ் .கிடைக்கும் அந்த சூட்சுமம் தெரிந்துதான் மனோரமா அதற்குக் குறி வைத்தார் …
ஆனால் காலன் சக்கரத்தை அதற்குள் வேகமாக சுழற்றி விட்டான் .