இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, தனஞ்செயன், பிரதீப் மற்றும் பங்கஜ் போரா தயாரிக்க, விஜய் ஆண்டனி , ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, நடிப்பில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் கண்ணன் நாராயணன் இசையில் டி எஸ் சுரேஷ் படத் தொகுப்பில் சி எஸ் அமுதன் இயக்கும் படம் ரத்தம் .
கொலைகள், பத்திரிகை ஆசிரியர் மீடியா உலகம் இவற்றின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் இது .
வரும் அக்டோபர் ஆறாம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் விஜய் ஆண்டனியும் சி எஸ் அமுதனும்.
படத்தின் முன்னோட்டமும் தெருக்குரல் அறிவு பாடி விஜய் ஆண்டனியோடு நடித்தும் இருக்கும் விளம்பரப் பாடலும் திரையிடப்பட்டது .
முன்னோட்டத்தில் கையில் மருத்துவக் கட்டோடு நம்பும் படி வரும் விஜய் ஆண்டனி , அந்த (போலி?)க் கட்டை அவிழ்க்கும் இடம் அருமை.
பாடலில் அறிவு பாடி ஆடிக் கொண்டிருக்க, விஜய் ஆண்டனிஅமைதியாக இருக்கிறார் .
படம் பற்றிப் பேசிய அமுதன், ” நானும் விஜய் ஆண்டனியும் கல்லூரி நண்பர்கள். நான் படத்தில் விஜய் ஆண்டனி நடித்த நிலையிலேயே நான் அவரை வைத்து படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது. அது நடக்காமல் போனது . ஒரு நிலையில் நான் அவருக்குப் போன் செய்து எப்பதான் எனக்கு படம் தருவீர்கள் என்றேன்.
வாங்க பண்ணலாம் ‘ என்று கதை கூட கேட்காமல் படம் பண்ண முடிவு செய்தார் . ஆரம்பத்தில் அவருக்கு நான் ஒரு காமெடி கதைதான் சொன்னேன். பின்னர் இதை சொன்னேன். இதையே செய்ய முடிவானது.
படத்தின் கதையில் வன்முறை இருக்கும் . ஆனால் ரத்தம் தெறிக்காது. அதன் பிறகும் ரத்தம் என்று பெயர் வைத்ததற்குக் கதையில் காரணம் இருக்கிறது. டைட்டிலை நான் சொன்ன உடன் விஜய் ஆண்டனி, ‘ நான் கூட ஒரு படத்துக்கு இந்த டைட்டிலை வைக்க நினைத்தேன் . நீங்கள் இந்தப் படத்துக்கு வைப்பது சந்தோசம் ‘ என்றார்.
படத்தில் அரசியல் இருக்கிறது . சாதி இருக்கிறது. ஒரு முக்கியமான சமூகப் பிரச்னையை பேசி இருக்கிறோம். . அது என்ன என்பது படம் வரும்வரை சஸ்பென்ஸ் ” என்றார் .
விஜய் ஆண்டனி பேசும்போது, ” பத்திரிக்கையாளர்கள் எழுத சுவாரஸ்யமாக ஒன்றும் சொல்லாமல் இப்படி பேசினால் எப்படி?’ என்று அமுதனிடம் கேட்டு விட்டு தொடர்ந்தார் .
” படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தும் எனக்கு ஒருவருடனும் ரொமான்ஸ் இல்லை. ஒரு சின்ன காட்சி மட்டும் இருந்தது. அதையும் தூக்கி விட்டார்கள்.
திடீரென்று தெருக்குரல் அறிவோடு எனக்கு பாடல் என்றார்கள். அங்கு போனால் என்னை உட்கார வைத்து விட்டு அவரை மட்டும் பாட வைத்தார்கள் . கடைசியில் கொஞ்சம் எனக்கும் கொடுத்தார்கள். திடீரென்று அறிவு என் கன்னத்தில் எல்லாம் கை வைத்து தடவினார் . அது எதற்கு என்று எனக்கு சொல்லவே இல்லை. நீங்களாவது கேட்டுச் சொல்லுங்கள்.
நான் அமுதனோடு காமெடி படம் பண்ணதான் விரும்பினேன். ஆனால் இந்த கதை முடிவானது. படத்தை பார்த்து விட்டு நீங்கள் சொல்லுங்கள்.
அப்புறம் முக்கிய விஷயம் . ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு நான் தான் காரணம் என்று ஒரு யூ டியூப் சேனலில் அநியாயமாக சொல்லி இருந்தார்கள் . அதில் துளி கூட உண்மை இல்லை. எனவே சம்மந்தப்பட்ட யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்குத் தொடர இருக்கிறேன். ” என்றார் .