ரெபெல் என்னும் ரப்பிஷ் (rubbish) @ வி(மர்)சனம்

ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் கே. ஈ .ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி வி பிரகாஷ், மமிதா பைஜூ, கருணாஸ் , கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர் நடிப்பில் நிகேஷ் என்பவர் இயக்கி இருக்கும் படம் . 

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த செங்கோட்டை,  கன்னியாகுமரி ஆகிய தமிழ் நிலப் பகுதிகள் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டன (என்பதை சரியாகச் சொல்லும் இந்தப் படம் .. மேற்கொண்டு  ‘) ஆனால் தமிழ் மக்கள் கூலித் தொழிலாளிகளாக குடியேறிய மூணார் கேரளாவுடன் இணைக்கப் பட்டது ‘ (என்று ஒரு தவறான தகவலை படத்தின் துவக்கத்திலேயே சொல்கிறது.) 
 
அப்படி பிழைக்கப் போய் அங்கு வாழும் தமிழ் கூலித் தொழிலாளிகள் தங்கள் பிள்ளைகளாவது படித்து முன்னேறி வசதியாக வாழட்டும் என்று பாலக்காட்டுக்கு படிக்கப் போகிறார்கள் . அப்படி போனவர்களில் கதிர் என்ற இளைஞன் (ஜி வி பிரகாஷ் ராஜ் ) உட்பட பலரும் ஒழுங்காக படித்து முன்னேற முயல்கின்றனர் 
 
 அங்கு இருக்கும் மலையாள மாணவர்கள்  தமிழ் மாணவர்களைப் பார்த்து  “பிழைக்க வந்த பிச்சைக்காரர்கள் மற்றும் கக்கூஸ் கழுவிகளான  உங்களுக்கு படிப்பு முக்கியமா?” என்று அடித்து உதைத்து  தமிழ் மாணவர்களை அவமானப்படுத்துகின்றனர் .. தமிழ்ப் பெண்கள்  மேடையில் நடனம் ஆடும்போது மேடைக்கு அடியில் ஓட்டை போட்டு கையை விட்டு ஆடும் பெண்ணின் ஜட்டியை கழட்டி (அதாவது ஆடிக் கொண்டு இருக்கும்போதே)  அவமானப் படுத்துகின்றனர் ( இதன் பின்னால் உள்ள சாத்தியக் கூறுகள், டெக்னாலஜி பற்றி படக்குழுதான் விளக்க  வேண்டும் ) 
 
எனவே கதிர் தலைமையில் நமது மாணவர்கள் தமிழ் மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி தேர்தலில் … ஆமாம், கேரளா  பாலக்காட்டுக் கல்லூரியில்தான்…   போட்டி இடுகின்றனர். அவர்களை ஒடுக்க கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் மாணவ அமைப்புகள் பிரச்னையை கட்சிப் பிரமுகர்களிடம் கொண்டு போக, 
 
அந்த கட்சிப் பிரமுகர்கள் ,  அரசு , அதிகாரம், காவல் துறை , மூணாறு எஸ்டேட் ஓனர்கள் என்று எல்லோரும்  கை கோர்த்துக் களம் இறங்க , அந்த மாணவர்களின் பெற்றோர்களை வேலையை விட்டு நீக்கி , வீடுகளை விட்டு விரட்டி , தெருவில் நிறுத்த, அந்தப் பெற்றோர்கள் தங்கள் தமிழ்ப் பிள்ளைகளிடம் மாணவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகச் சொல்ல , அவர்களும் விலக முடிவு செய்ய , 
 
இந்த நிலையில் அங்குள்ள கேரள மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் கொளுத்தப்பட ,  ஒருவர் அலுவலகத்தை ஒருவர் கொளுத்தியதாக நம்பும் அந்தக் கட்சிகள் குழம்ப, 
 
தமிழ் மாணவர்கள் மீது கொளுத்திய பழியைப் போட முடிவு செய்யும் கேரள போலீஸ், தமிழ் மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்த , அங்கு கண்ணீரும் கம்பலையுமாக வரும் – வீடு வேலை இழந்த தமிழ்ப் பெற்றோர்கள் கதற , 
 
அதைப் பார்த்து மனம் இறங்கி, இரங்கி, கிறங்கி , மலையாள மாணவர்கள் மனம் மாறி தமிழ் மாணவர்களை ஆதரிக்க, இப்படித்தான் மூணாறு தமிழ் மாணவர்கள் அங்கே படிக்கும் உரிமையைப் பெற்றார்களாம் . 
 
கடைசியில்  இரண்டு கேரள கட்சி அலுவலகங்களையும் கொளுத்தியது யார் என்றால் .. ‘அந்த குழந்தையே நீங்கதான் சார் என்ற கதையாக ..  டுவிஸ்ட் டாம். அதையும்   நம்பி ஒகே பண்ணி இருக்காங்க பாருங்க . அம்பூட்டு அறிவு .. அவ்வளவு அறிவையும் சொமக்க முடியாம சொமக்குற ஆளுங்க . கழுத்து எலும்பில் கவனமா இருங்க. 
 
படத்தின் நல்ல   விஷயங்களை முதலில் சொல்லி விடுவோம் . 
 
கேரள காங்கிரஸ் , கம்யூனிஸ்டு கட்சிகள் இரண்டும் எப்படி தமிழர்களை   எப்போதும் நம்ப வைத்து கழுத்தறுத்து முதுகில் குத்தி வளர்ந்தது என்பதையும் , காங்கிரசில் நாயனார் என்ற ஓர் அரசியல்வாதி எப்படி தமிழர்களை ஒடுக்கி அராஜகம் செய்தே வளர்ந்தார் என்பதை சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்
 
மிக சிறப்பாக நடித்திருக்கிறார் ஜி வி பிரகாஷ் குமார் . 
 
மற்ற எல்லாமே தேவை இல்லாத ஆணிதான். சாதாரண ஆணியாக இருந்தால் கூட ஒகே . ஆனால் விஷத்தில் நனைக்கப்பட்ட துருப்பிடித்த ஆணிகள் 
 
கற்பனைக் கதை என்று  சொல்லி இருந்தால் கூட , ”போய்த் தொலைங்க…” என்று மன்னித்து இருக்கலாம் . ஆனால் உண்மைக் கதை என்றும் ”எங்க டைரக்டரே அங்கதான்ங்க  பிறந்தாரு…. ” என்றும் சொன்னார்கள் பாருங்கள் .  தலையில் அடித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. 
 
உண்மையில் மூணார் காலகாலமாக தமிழர்களின் நிலம்தான் . எப்போதும் அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் .அந்த வரலாற்றை முடிந்தவரை சுருக்கமாகப்  பார்ப்போம் . (ஆனா அதுவே கொஞ்சம் பெருசாதான் இருக்கும்)
 
இந்தியாவில் மொழிவாரி மாநிலப் பிரிவினை நடந்தபோது, திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர் பகுதிகளை (இதற்குள்தான் மூணாறு இருக்கிறது) தங்களுடன் இணைக்க கேரளத் தலைவர்கள் அநியாயமாக  முயல, அதை எதிர்த்து அந்தப் பகுதிகள் நியாயப்படி தமிழ்நாட்டோடுதான் இணைய வேண்டும் என்று போராடுவதற்காக மார்ஷல் நேசமணியால் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் என்ற அமைப்பு 1945-ஆம் ஆண்டு இறுதியில் துவக்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டு ஜீன் 30-ஆம் நாள் என்று அதன் பெயர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்று மாற்றப்பட்டது.
 
1946-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ந் நாள் அன்று தமிழகத்தில் இல்லாதிருந்த நாகர்கோவில், குமரிமுனைப் பகுதி முழுக்க பல கூட்டங்கள் நடந்தன. அவற்றில் சிலம்புச் செல்வர்  மபொசி முக்கியத்துவம் வகித்துப் பேசினார்
 
1948-ஆம் ஆண்டு மே மாதம் 14-ஆம் நாள் நாகர்கோவிலில் நடந்த தமிழ் எழுத்தாளர் மூன்றாவது மாநாட்டில் விருந்தினராக கலந்துகொண்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,  ம.பொ.சி. நடத்திய  தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்துக்கு தன் ஆதரவை தெரித்ததோடு நன்கொடையாக 1000 ரூபாய் (1948-இல் 1000 ரூபாய்) தந்திருக்கிறார்.
 
காரணம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நாடகக்கலை மேதை அவ்வை டி.கே.சண்முகம் போன்றவர்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர் நிலப்பகுதிகளில் பிறந்தவர்கள்.
 
 தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள தமிழர்களிடையே செல்வாக்கு பெற்று விளங்கினார் தலைவர் மார்ஷல் நேசமணி. அதேபோல் இன்னொரு தலைவர் தாணுலிங்கம்.
 
நேசமணி, தாணுலிங்கம் இவர்களுக்கு இடையேயும் ம.பொ.சி.யோடு நேசமணிக்கும் ஒரு சில கருத்து வோறுபாடுகள் இருந்ததுண்டு. ஆனால் அதையும் மீறி தமிழ் நிலப் பகுதிகளை கேரளா அபகரிக்காமல்  மீட்கும் போராட்டத்தை எல்லோரும் சேர்ந்து வலுப்படுத்தினர்.
 
போராட்டத்தில் ஊர்வலம் சென்ற தமிழர்கள் மீது அப்போது அங்கிருந்த  ஆட்சி துப்பாக்கிச் சூடு நடத்தியது.  சேர்ந்த தேவசகாயம், செல்லையா போன்ற தமிழ்  இளைஞர்கள் அப்போது கேரள போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
தெற்கு எல்லை மீட்புப் போராட்டத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேராதரவு தந்தார்.
 
1954-ஆம் ஆண்டு நாகரகோவிலில் தமிழரசுக் கழக மாநாட்டை நடத்திய ம.பொ.சி. அதன் மூலம் தெற்கு எல்லைப் போராட்டத்தை மேலும் வலுவுள்ளதாக்கினார். பெருகும் தமிழ் இனஉணர்வு கண்டு கேரள போலீசார் பயந்தனர். நூற்றுக்கு எண்பது பேர் தமிழர்களாக வாழ்கிற (இன்றும்?) தேவிகுளம் தாலுகா, அதில் உள்ள மூணாறு மற்றும்  பீர்மேடு தாலுக்காக்களில்  போலீசார் தமிழர்களை -குறிப்பாக தோட்டத் தொழிலாளத் தமிழர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர்.
 
தோட்டத் தொழிலாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசுவதற்குச் சென்ற நேசமணி கைது செய்யப்பட்டார். நேசமணியின் ஆலோசனையின் பேரில் ம.பொ.சி. அங்கு சென்று போராட்டத்தைத் தொடர்ந்தார். 
 
1954-ஆம் ஆண்டு ஆகஸ்டு 11-ஆம் நாள் தமிழர் விடுதலை நாள் என்ற போராட்டத்தை திவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நடத்தியபோது பொங்கிச் சென்ற தமிழர்களின் ஊர்வலத்தின் மீது மலையாள போலீசார் சுட்டதில் 11 தமிழர்கள் உயிர் நீத்தனர். ஆனால் அதேநேரம் நேசமணி ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 
 
1954-ஆம் ஆண்டில்  மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர ஸையத் பசல் அலி தலைமையில் ஒரு கமிஷன் மத்திய அரசால் நியமிக்கப்ட்டது. அப்போது பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு.
 
பசல் அலி கமிஷனிடம் கேரளத்தவரின் சர்பாக ஒரு கோரிக்கை மனு தரப்பட்டது. அந்த மனுவில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர் வாழும் தமிழ் நிலப் பகுதிகள், அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின் தெற்குப் பாகம், நெடுமங்காடு கிழக்குப் பாகம், செங்கோட்டை, நாகர்கோவில், தேவிகுளம், மூணாறு, பீர்மேடு,  கன்னியாகுமாரி மாவட்டப் பகுதிகள்,  இவை மட்டுமல்ல…
 கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேரள மாநிலத்துக்கு என்று  கேட்டனர் அவர்கள்.
 
அதாவது, மலையாள மொழி பேசுவோர் அதிகம் உள்ள பகுதிகள் முழுக்க முழுக்க கேரளாவுக்கே தவிர, கேரள எல்லையில் மலையாளமும் தமிழும் பேசுவோர் உள்ள பகுதிகள், அதை அடுத்து முழுக்க முழுக்கத் தமிழர்கள் மட்டுமே உள்ள தமிழ் நிலப் பகுதிகள், ( இங்குதான் மூணாறு  இருந்தது)  அனைத்தும் அவர்களுக்கே.

மலையாளிகள் இப்படித் தைரியமாகக் கேட்டதற்குக் காரணம் உண்டு.
 
அன்று நேருவின் அமைச்சரவையில் நேருவிடம் செல்வாக்குப் பெற்றிருந்த பலரும் மலையாளிகளே! சர்வதேச பிரச்னைகளுக்குப் பரிகாரம் காணும் பதவி, நேருவின் வெளிநாட்டுக் கொள்கைகளை அமுல் செய்யும் பதவி , பல அயல்நாட்டு தூதரகப் பதவிகள், ஜனாதிபதியின் மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி ஒன்று, இந்தியப் பாராளுமன்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று…. இந்த பதவிகளில் இருந்த அனைவரும் மலையாளிகளே.
 
மேலும் இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக நேருவின் நம்பிக்கைக்குரியவரான கே.எம்.பணிக்கர் என்ற மலையாளி, பஸல் கமிஷனிலேயே முக்கிய அங்கம் வகித்தார். இவர்களோடு ஹெச் என் குன்ஸ்ரூ என்பவரும் இருந்தார்.
 
இங்கே பசல் அலி பற்றி ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் .

அலியின் மாநிலமான பீகாருக்கு மேற்கு வங்கம், ஒரிசா ஆகியவற்றோடு எல்லைப் பிரச்னை இருந்தபோது, ‘’பீகாரின் எல்லைப் பிரச்னை சம்மந்தப்ட்ட- அதற்கான தீர்வு செய்யும் கமிஷனில்- பீகார்க்கரனாகிய நான் இருப்பது சரி அல்ல. அநாகரீகம்” என்று விலகினார் அலி. 

ஆனால் தமிழ்நாடு கேரளா எல்லைப் பிரச்னையைத் தீர்க்கும் குழுவில் நேருவை சரிகட்டி தானும் வலிய வந்து  சேர்ந்தார் மலையாளியான கே எம் பணிக்கர். 

இரண்டு தரப்புக்கு உள்ள பிரச்னையைத் தீர்க்க அமைக்கப்படும் குழுவில்  ஒரு தரப்பைச் சேர்ந்த ஒருவரையே நியமிப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அதைச் செய்தவர் ஜவஹர்லால் நேரு.

ஆனால் அந்த கமிஷனுக்குள் தமிழர் யாரும் இல்லை. தமிழர் ஒருவரை நியமிக்க யாரும், எந்த கட்சியும் எந்த இயக்கமும் எந்த முயற்சியும் செய்யவில்லை
 
பணிக்கர், தன் பதவியின் நேர்மையைப் பற்றிக் கவலைப் படாமல் தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களை தமிழகத்துக்கு தரமுடியாது என்று எடுத்த எடுப்பிலேயே ஒருதலைப் பட்சமாக அறிவித்தார். காரணம், அவரது மலையாள மொழி உணர்ச்சி மட்டுமல்ல!
 
தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் யாருக்கு என்பது பற்றி ஒருமுறை பணிக்கருக்கும் ம.பொ.சி.க்கும் நேரடியாக ஒரு பெரிய வாய்ச்சண்டையே ஏற்பட்டது.

சண்டையில் பணிக்கர் தன்னை மறந்து ‘’தேவிகுளம், மூணாறு, பீர்மேடு,  பகுதிகளில் தமக்குச் சொந்தமான பல தோட்டங்கள் இருப்பதாகவும்  அவற்றை எப்படி தமிழ்நாட்டிடம் விடமுடியும்?’’  என்றும் வாய்விட்டே கேட்டுவிட்டார்.

 
சரி பணிக்கருக்கு அங்கே நிறைய  எஸ்டேட்கள் இருந்தது என்றால் அப்புறம் அது மலையாளிகளுக்கு உரிய நிலங்கள்தானே? தமிழரகள் அங்கே பிழைப்பு தேடிப் போனதாகத்தானே அர்த்தம்? அப்புறம் எப்படி அந்த பகுதிகளை தமிழ்நாட்டுக்கு கேட்க முடியுமென்று  தோன்றலாம். நியாயமான சந்தேகம்தான் . ஆனால் உண்மை வேறு .
 
அந்தந்த நிலங்கள் காலகாலமாக தமிழ் மண்ணாக இருந்து தமிழர் வாழ்ந்த நிலங்களாகவே இருந்தவை .
 
சுதந்திரப் போராட்ட காலத்தில் அங்கே எல்லாம் தமிழ் மக்கள் வெள்ளையர்களை எதிர்த்து போராடினார்கள். அடர்ந்த காடுகளுக்குள் புகுந்து அவர்களைப் பிடிப்பது வெள்ளையர்களுக்குக் கஷ்டமாக இருந்தது .
 
எனவே வெள்ளையர்கள் மலையாள நம்பூதிரிகள்,  நாயர்கள் ஆகியோரின்  உதவியை நாடினர். போராடும் தமிழர்களைக் காட்டிக் கொடுத்தால் ‘’அவர்கள் கொல்லப்படுவர். அவர்களின்  நிலங்கள் ஊர்கள் யாவும் உங்களுக்கே வழங்கப்படும்’ என்று  வெள்ளையர்கள் ஆசை காட்டினர்.
 
தமிழர்களின் பெரும்பான்மையை ஒழிக்க வேண்டும் என்ற  எண்ணத்தில்  இருந்த மலையாளிகளும் அப்படி சுதந்திரத்திரத்துக்குப் போராடும் தமிழர்களை வெள்ளைக்காரர்களுக்குக் காட்டிக் கொடுப்பார்கள்.

தமிழர்கள் கொல்லப்படுவார்கள். நிலம் மலையாளிகளுக்குப் போகும். இப்படித்தான் அந்தப் பகுதிகளின் நிலம் எல்லாம் மலையாளிகளுக்குப் போனது. (பாபி சிம்ஹா நடிப்பில் சக்திவேல் பெருமாள் சாமி இயக்கிய உறுமீன் என்ற திரைப்படத்தில் இந்த விசயம் மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கும்)
 
இது மட்டுமல்ல…
 
திருவாங்கூரின் வரலாறையே எடுத்துக் கொள்வோம்
 
திருஅதன்கோடு என்ற தமிழ்ச் சொல்லே திருவிதான்கோடு என்று ஆகி,  பின்னர் திருவாங்கூர் ஆகியது.
 
தமிழின் மிகப் பழைமையான  இலக்கண நூலாகிய,  தொல்காப்பியத்தின் அரங்கேற்றத்திற்கு தலைமையேற்றவர், இவ்வுரைச் சேர்ந்த அன்றைய தலைவரும் தமிழருமான் அதங்கோட்டாசான் என்பவர்தான் . அதன்கோடு என்ற பெயர்தான் அதங்கோடு ஆகி , திரு அதங்கோடு ஆகி திருவாங்கூர் ஆகியது . 
 

 திருவாங்கூர் மன்னர் பரம்பரையைத் துவங்கியவர்களும் தமிழர்களே.  பின்னர் நம்பூதிரி பிராமணர்களால்  அது மலையாள ஆட்சியாக  மாற்றப்பட்டது.  எனினும் அங்கு காலகாலமாக வாழ்ந்த மக்கள் அனைவரும் தமிழர்கள் என்பதால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது அவர்கள் தமிழ்நாட்டோடு இணையத்தான் விரும்பினர்.
 
  ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ், திராவிட இயக்கங்கள் இரண்டும் எதிரெதிர் திசையில் ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்டிருந்தால் அவர்களின் ஆதரவை தமிழ் மாநிலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள  வாய்ப்பு  இல்லாமல் போனது
 
 அதேநேரம் கேரளக் கட்சிகளின் அரசியல் வேறு மாதிரி இருந்தது. பீர்மேடு பகுதிகளைக் கேரளாவோடு இணைக்க வேண்டும் என்ற கேரள காங்கிரஸ் போராடினால்,

அங்கு காங்கிரசை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள்  “ஏன் பீர்மேடு மட்டும்தான் கேட்டுப் போராடுவாயா? மூணாறைக் கேட்க மாட்டாயா? தேவிகுளத்தைக் கேட்க மாட்டாயா? “ என்று மலையாள – கேரள உணர்வோடு போட்டி போட்டுக் கொண்டு போராடின.  இப்படியாக  கேரள மண்ணுக்கு சாதமான வகையிலேயே காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் கேரளாவில் மோதிக் கொண்டன.  

 
இப்படித் தமிழ்நிலப் பகுதிகளை பிடுங்கிக் கொள்ள மற்ற மொழி நிலப் பகுதியினர் போராடிய அதே காலக்கட்டத்தில், தென் மாநிலக் கம்யூனிஸ்டுகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற வேண்டிய சூழல் வருகிறது. முறைப்படி கோவையில் நடைபெற வேண்டிய அந்த மாநாட்டை,  மலையாளிகள் முயன்று மாற்றி திருச்சூரில் நடத்துகின்றனர். 
 
அப்போது கம்யூனிஸ்டு வலது இடது எனப் பிரியவில்லை.  அக் கூட்டத்தில் “தேவிகுளம், பீர்மேடு மூனாறு கேரளாவிலேயே விட்டு வைக்கப்பட வேண்டும்” என்ற தீர்மானத்தை மலையாளக் கம்யூனிஸ்டுகள் கொண்டு வருகின்றனர். இந்த தீர்மானத்துக்கு வலு சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில்  மாநாடு நடந்தால் இந்த தீர்மானம் போட முடியாமல் போகலாம் என்பதால்தான் மாநாட்டையே கோவையில் இருந்து திருச்சூருக்கு மாற்றினார்கள்.
 
அந்த மாநாட்டுக்குத் தமிழ்நாட்டில் இருந்து போன கம்யூனிஸ்டுகளும்  மலையாளக் கம்யூனிஸ்டுகளில் தீர்மானத்தை எதிர்த்துப் போராடாமல், அப்படியே ஏற்றனர். 
 
ஏனென்றால்  கட்சிக் கட்டுப்பாடு! மலையாள கம்யூனிஸ்டுகள்  சொல்லைக் கேட்டு அப்போது டெல்லி கம்யூனிஸ்டு தலைமை கட்டளை போட்டது. தமிழ் நாட்டு கம்யூனிஸ்டுகள் தங்கள்  அடிமைத் தலையை ஆட்டி அப்படியே ஏற்றார்கள்.

 என்றாலும்  நிலம் மலையாளிகளுக்குச் சொந்தமாகப் போய் விட்டது என்பதை வைத்து மட்டும், அந்த பகுதிகளை மலையாளிகளுக்கு  ஒதுக்க கேட்பதும் முறையல்ல.

காரணம்?
 
மாநிலங்களைப் பிரிக்கும் போது மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசு கொண்டு வந்த சட்டம். அதன் அடிப்படையில்தான் ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் உட்பட வட இந்தியாவையும் சேர்த்து இந்திய மாநிலங்கள் உருவாயின. அதன் அடிப்படையில்தான் நிலம் தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தாலும் வந்து குடியேறிய தெலுங்கு மக்களால் ராயல சீமா மற்றும் சித்தூரில் தெலுங்கர் எண்ணிக்கை அதிகம் ஆகி,  அது ஆந்திராவுக்குப் போனது 
 
அப்படியிருக்க, தேவிகுளம், பீர்மேடு மூணாறில் அந்த சமயத்தில்  அதிக நிலம் யாருடையதாக இருந்தால் என்ன? தமிழர்கள்தானே காலகாலமாக அங்கே  வாழ்கின்றனர்.  எனவே மொழி அடிப்படையில் அவற்றை தமிழ் நாட்டுக்கு தருவதுதான் நியாயம் . ஆனால் அது நடக்கவில்லை 

 
பஸல் கமிஷன் தனது அறிக்கையைத் தந்தது.  அதில் தேவிகுளம், மூணாறு, பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, கொச்சின் சித்தூர், பாலக்காடு போன்ற தமிழ் நிலப்பகுதிகளை தமிழ்நாட்டுக்குத் தரமுடியாது என்று கூறப்பட்டு இருந்தது.
 
தவிர ‘’புதிய மலையாள மாநிலத்துக்கு கேரளம் என்றோ மலையாளம் என்றோ தாங்கள் விரும்பும் பெயரை வைத்துக் கொள்ளலாம் . ஆனால் தமிழ் மாநிலத்துக்கு தமிழ் நாடு என்று  பெயர் வைக்கக்கூடாது சென்னை இராஜ்ஜியம் என்றே பெயர் வைக்க வேண்டும்’’ என்று சிபாரிசு  செய்திருந்தது பசல் கமிஷன்  
 
அதனால் அகஸ்தீஸ்வரம், தோவாளை, செங்கோட்டை போன்ற பகுதிகள் மட்டுமே தமிழ்நாட்டுக்குத் தரப்பட்டது. அதையே கேரளம் எதிர்த்து குரல் கொடுத்தது. கேட்டது முழுக்க கிடைக்கவில்லையே என்று கேரளத்தின் கோபம்.  ஆனால் உண்மையில் நியாயமாக தமிழ் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தேவிகுளம், மூணாறு, பீர்மேடு,   பகுதிகள் கூட நமக்கு கிடைக்கவில்லை .
 
சென்னை மாநிலத்தின் நிதி அமைச்சராக அன்று இருந்த சி.சுப்பிரமணியம் மட்டும் ‘‘தேவிகுளம், மூணாறு, பீர்மேடு,பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க இயன்றதெல்லாம் செய்வோம். தேவிக்குளத்தில் உள்ள பெரியாற்றின் தண்ணீரை நமக்குப் பயன்படும்படி செய்வோம்” என்றார். ஆனால் எதுவும்  நடக்கவில்லை 
 
இப்படி தமிழ் மண்ணுக்கு விரோதமாக எதிராக பஸல் கமிஷன் செய்து இருந்த  பரிந்துரையைக் கூட இந்திய அரசு அப்படியே செயல்படுத்தவில்லை.

 தமிழ் நாட்டில் செங்கோட்டை தாலுக்காவின் மேற்குப் பகுதியை –அதாவது 1950களிலேயே ஆண்டுக்குப் பல கோடி வருமானம் தரக்கூடிய வளமான குமுளி வனப்பகுதியை கேரளத்திடமே  தந்தார் நேரு.

 
 தேவிக்குளம், மூணாறு, பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, கொச்சின் சித்தூர், பாலக்காடு போன்ற தமிழ் நிலப்பகுதிகள், தமிழ் நாட்டோடு நியாயமாக இணைய வேண்டிய தமிழ் நிலமான திருவனந்தபுரம் மாநகரம் ஆகியவை அநியாயமாக கேரளாவோடு போனது .

1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் நாள் 600 சதுர மைல்கள் கொண்ட பகுதி மட்டும் மீட்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தாய்த் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டது. செங்கோட்டை மீண்டது.  கன்னியாகுமரியை  தமிழகத்தோடு இணைக்கும்  நியாய வேள்வியில் பெரும் பங்காற்றிய நேசமணி குமரியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

 
ஆனால் உண்மையில் தமிழ்நாட்டோடு இணைய வேண்டிய தமிழ் நிலப்பகுதிகள் சுமார் 2000 சதுர மைல்கள் . கிடைத்தது  600 . அநியாயமாக 1400 சதுர மைல்களை தமிழ்நாடு இழந்தது.
 
உண்மை இப்படி இருக்க,  மூணாறு வாழ் தமிழர்கள்  தமிழ்நாட்டில் இருந்து பிழைக்கப் போன குடும்பத்தின் தொடர்ச்சி என்று சொல்வதன் மூலம் மொத்தப் படமும் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறது . அங்கு தமிழர்கள்தான் வாழ்கிறார்கள் என்பதால் பின்னாளில் தமிழ் நாட்டில் இருந்து கொஞ்சபேர் மூணாறுக்குப் பிழைக்கப் போனார்கள்.
 
உண்மை அப்படி இருக்க, மூணாறு தமிழர்கள் எல்லோரும் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்குப் பிழைக்கப் போனவர்கள்  கேரளத்தவர் சொன்னாலே வலிமையாக மறுக்க வேண்டிய ,  நாமே நேர்மாறாக , ஆமாங்க . மூனாறு தமிழர்கள் எல்லோருமே பிழைக்கப் போன வந்தேறிகள்தான் .. ” என்று தவறாக சொல்லி ஒரு படத்தை எடுத்து விஷுவல் கன்டென்ட் ஆக உலகம் முழுக்க காட்டுவது எப்படிப்பட்ட ஒரு முட்டாள்தனம். பித்துக்குளித்தனம். 
 
இப்படி ஒரு இமாலயத் தவறை படத்தின் ஆரம்பத்திலேயே செய்து விட்டதால் இந்தப் படத்தில் ஹீரோ செய்யும் செயல்கள் எல்லாம் சாதரணமாகத் தெரிகிறது . கிளைமாக்சில் இந்த  தமிழன் ஹீரோதான் சார் அயோக்கியன் ” என்ற தோணி வருது . 
 
இப்போது இந்தப் படத்தில் இவர்கள் சொல்லி இருக்கும் கதையைப் பார்ப்போம் .
 
பிழைக்கப் போன இடத்தில் கஷ்டப்படும் ஒரு அந்நியக் கூட்டம் ஆற்றாமையோடு தங்கள் பிள்ளைகளை படிக்க மலையாளிகளின் படிக்கும் கல்விக் கூடத்துக்கு அனுப்ப, தங்களுக்குள் இருக்கும் தமிழர் விரோதப் போக்கால் அவர்கள் தமிழர்களைக் கேவலப்படுத்த , மலையாள மண்ணில் தமிழ் மாணவர் அமைப்பு என்ற ஒரு அமைப்பை தமிழ் மாணவர்கள் உருவாக்கி , 
 
அங்கே இரண்டு மலையாளக் கட்சிகளுக்குள் இருக்கும் பகையைப் பயன்படுத்தி , இரண்டு கட்சிகளின் அலுவலகத்தையும் கொளுத்தி, அதனால் எதிர்பார்த்தபடியே அடி வாங்கி, 
 
பரிதாப நாடகம் போட்டு  மலையாள மக்களின் இரக்கத்தை பிச்சையாகப் பெற்று படிக்கும் உரிமை பெற்றனர் . 
 
இதுதான் படத்தில் வந்திருக்கும் கதை. 
 
இப்போ சீவி பிரகாஷ்  இந்தப் படத்தில் ஹீரோவா? இல்லை  வில்லனா? இந்தப் படம் தமிழர்களை பெருமைப்படுத்துகிறதா? இல்லை கேவலப்படுத்துகிறதா?
 
இந்தப் படத்தைப் பார்க்கும் மலையாளிகள் என்ன சொல்வார்கள் ?
 
பொதுவாகவே மலையாளப் படங்களில் தமிழர்களைக் கேவலப்படுத்தும் காட்சிகளை உண்மைக்குப் புறம்பாக மன சாட்சி இன்றி வைக்கும் அவர்கள், இப்போ தமிழ்நாட்டில் மஞ்ஞுமெல் பாய்ஸ் , பிரேமலு படங்களின் வெற்றிக்குப் பிறகு , இனி தமிழர்களை கேவலமாக கட்டாமல் இருந்தால் தமிழ்நாட்டிலும் கல்லா கட்டலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். 
 
இப்போது இந்தப் படத்தை பார்த்தால், ” எடா பட்டிப் பாண்டிகளா ! நாங்க கூட எங்கள் படங்களில் உங்களை இப்படி கேவலப்படுத்தலியே டா.. நீங்க என்னடா எங்களை விட உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கறீங்க ? ” என்று நினைப்பார்களா இல்லையா? 
 
இப்படித்தான் ஈழம் என்பது தமிழர்களின் பூர்விக மண் என்பதை நாமே நம் தமிழ் நாட்டு மக்களுக்கு சரியாக சொல்லாமல் எல்லாருமே இங்கிருந்து பிழைக்கப் போனவர்கள்தான் என்ற கருத்துக்கு மறைமுகமாக வலு சேர்த்த   காரணத்தால், ஈழப் பிரச்னை வந்த போது, “பின்ன? நம்ம ஊர்ல இருந்து போனவன் தனி நாடு கேட்டா அடிக்கத்தான் செய்வான்” என்று தமிழ் நாட்டு மக்களே சொன்னார்கள். 
 
இப்போது மூணாறு விசயத்தில் நாமே நமக்கு எதிராக உண்மைக்குப் புறம்பாக துரோகமாக ஒரு படத்தை எடுத்துக் காட்டினால் என்ன நியாயம்?
 
இதே ரிபெல் படத்தில் 
 
தமிழர்கள் தங்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தில் படும் துயர வாழ்க்கைக்கு எதிராக படித்து முன்னேறப் போக , அது பிடிக்காத மலையாளிகள் அவர்களை ஒடுக்கி அசிங்கப்படுத்த , சூழலுக்குப் பயப்படாமல் ஒரு தந்திரம் செய்து ஒடுக்குமுறை செய்பவர்களை ஏமாற்றி வென்றான் ; சாதித்தான் என்று …
 
 உண்மையான வரலாற்றை காப்பி அடித்து ஒரு கதை சொல்லி இருந்தால் கூட  படத்தில் வரும் அரைவேக்காட்டுத்தமான அபத்தமான காட்சிகளுக்குக் கூட  உயிர் கிடைத்து இருக்கும் . 
 
”ஹலோ… ஸ்டாப் .. இருங்க …  சினிமா என்பது வியாபாரம் . இந்த கருத்து தமிழ் உணர்ச்சி , உப்பு  இதெல்லாம் விடுங்க .. படம் நல்லா இருக்கா .. அது போதும்” என்று  சிலர் யோசிக்கலாம் . தப்பில்லை. 
 
ஆனால் அதுவும் இல்லை என்பதுதான் கொடுமை. 
 
பிரேமலு படத்தைத் தூக்கி நிறுத்திய மமிதா பைஜூதான் இந்தப் படத்தின் கதாநாயகி . 
 
அந்தப் புள்ள கையில் ஒரு ஹமாம் சோப்பைக் கொடுத்து , ” போய் நல்ல மூஞ்சி கழுவி துடைச்சிட்டு வாம்மா ” என்று சொல்லி கேமரா முன் நிறுத்தினாலே அது அழகாக இருக்கும் . 
 
அதுக்கு ஒரு மேக்கப் போட்டு, செயற்கையாக நடிக்க வைத்து , நாயிடம் கிடைத்த முழு தேங்காய் போல அந்த பெண்ணை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல்  மூக்கால் முட்டி முட்டி ஆங்காங்கே உருட்டிக் கொண்டே  இருக்கிறார்கள் 
 
பலவீனமான திரைக்கதை . செயற்கையும்  நேர்த்தியும் இல்லாத வசனங்கள் ….. படத்தை  டேட் பாடியாகவே ஆக்கும்  ட்ரீட்மென்ட் … ஒழுங்காக எழுதப்படாத காரணத்தால் சவ ஊர்வலம் போல நகரும் தேவையற்ற மாண்டேஜ் காட்சிகள்… வரலாறும் உயிர்ப்புமான பிரச்னையில் போஜ்பூரி இயக்குனர்களே  கிண்டல் செய்யும் அளவுக்கு மசாலாத்தனம் …
 
கொஞ்சம் கூட எமோஷனலாக இல்லாமல் கடைசி வரை ஸ்டேட்மென்ட் ஆகவே, அதும் அபத்தமான ஸ்டேட்மென்ட் ஆகவே  போகும் படம்,  சினிமாவை நேசிப்பவரின் பொறுமையையே,  கெட்ட வார்த்தை பேசும் அளவுக்கு சோதிக்கிறது படம். 
 
ஒருவன் தன்னிடம் உள்ள தங்கத்தை வைத்து தோடு, மூக்குத்தி, நெத்திச் சுட்டி, வளையல், நெக்லஸ், கொலுசு, ஒட்டியாணம், அண்ணாக்கயிறு , அட அரைமூடி கூடச் செய்யலாம். 
  
ஆனால் உங்கள் தங்கத்தைத் திருடி ஒருவன்  ஆணி, குண்டூசி, ஜெம் கிளிப், நட்டு, போல்ட்டு, வாசர், காட்டர் பின் செய்கிறான் என்றால் அவனை என்ன சொல்வீர்கள் . அது கூட பரவாயில்லை . அதை மண்ணில், புழுதியில், சகதியில், மலத்தில் , சிறு நீரில் போட்டு புரட்டி எடுத்து தலைமேல் அபிஷேகம் செய்து கொண்டு ,பிறகு அதையும் கொண்டு போய் கூவத்தில் வீசி எறிந்தால் அவனைப் பற்றி என்ன சொல்வீர்கள்?
 
அதுதான் ரிபெல் படம். 
 
தங்கம் மூணாறு வாழ் தமிழர்களின் உண்மை வரலாறும்  வாழ்க்கையும். மற்றது எல்லாம் ரிபெல் படத்தின் கதை திரைக்கதை வசனம் , இயக்கம் , எல்லாம் .. எல்லாம் . 
 
ஒரு வரலாற்றை சினிமாவாக எடுக்கும்போது பொறுப்பும் சுயமரியாதையும்  வேண்டாமா ?  வேறு எந்த மொழியிலாவது இப்படி தங்கள் வரலாற்றையே கேவலப்படுத்திக் கொள்ளும் படத்தை எடுக்கிறார்களா?
 
தெரியாது, புரியாது, முடியாது என்றால் எதற்குத் தொட வேண்டும் ?
 
சினிமா என்ற பெயரில் நமக்கான உண்மை வரலாற்றை நாமே  மாற்றி கேவலப்படுத்திக் கொண்டு ஒரு படம் எடுப்பதன் நோக்கம் என்னவாக இருந்தாலும்  அது மேல சொன்னது போல ஆபாசப் படம் எடுப்பதை விட ஆபாசமானது . கேவலமானது . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *