24 AM STUDIOS சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்க சிவ கார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க , பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் ,
சுந்தர் சி மற்றும் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் படம் ரெமோ . பாக்கலாமோ வேணாமோ ? பேசுவோம்
ரஜினி காந்த போல பெரிய ஹீரோவாக முயலும் இளைஞன் எஸ் கே (சிவ கார்த்திகேயன்) . ஓர் அழகிய இளம்பெண் (கீர்த்தி சுரேஷ்) அவனுக்கு காதல் வருகிறது
கே எஸ் ரவிக்குமார் இயக்கும் புது படத்துக்காக நடிகர் தேர்வுக்கு போன எஸ் கே வை, கே எஸ் ரவிகுமார் நிராகரிக்கிறார் .
அதே நேரத்தில் அவன் காதலிக்கும் பெண்ணுக்கும் வேறொருவனோடு திருமணம் நிச்சயம் ஆகிறது .
இந்த நிலையில் கேஸ் எஸ் ரவிகுமாரை நர்ஸ் கெட்டப்பில் போய் எஸ் கே பார்க்க, அவர் அடுத்த படத்தில் வாய்ப்புத் தருவதாக சொல்கிறார் .
வரும் வழியில் ஒருவன் (யோகி பாபு) நர்ஸ் கெட்டப் எஸ் கே வை பெண் என்று எண்ணி உரச, எஸ் கே காதலிக்கும் அந்த பெண் உதவிக்கு வருகிறாள்.
அவளும் எஸ் கே யை பெண் நர்ஸ் என்றே நம்புவதோடு , தான் டாக்டராக இருக்கும் மருத்துவமனையிலேயே எஸ் கே வுக்கு பெண் நர்சாக வேலை வாங்கித் தருகிறாள்.
அவளோடு இருந்தபடி , தன் காதலை நிரூபிக்கும் முயற்சியில் எஸ் கே வென்றானா இல்லையா என்பதே ரெமோ .
சபாஷ் சிவ கார்த்திகேயன் …! பெண் வேடத்தில் நர்ஸ் கெட்டப்பில் அந்த நடை என்ன? உடை என்ன ? பாவனை என்ன ? ஒட்டு மொத்த உடல் மொழிகளும் அருமை .
தொண்டை நோகும்படியாக மிகக் கஷ்டப்பட்டு பெண் குரலில் டப்பிங் பேசி அசத்தி இருக்கிறார் . .லவ்லி சிவ கார்த்திகேயனி !
தவிர ஆடல், பாடல், ஆக்ஷன் என அனைத்து ஏரியாவிலும் அசத்தல் .
ஆனால் இந்த சிரமம் எதுவுமே இல்லாமல் கியூட்டாக அழகாக அட்டகாசமாக இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாதமாக நடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் .
கீர்த்தி சுரேஷின் இளமை அழகுக்கு இணையாக ஜொலிக்கிறார் ஒளிப்பதிவு அழகன் பி சி ஸ்ரீராம் . தரமான ஒளிப்பதிவின் மூலம் வேறொரு தளத்தில் தொழில் நுட்ப உயரத்தில் ஜொலிக்கிறது படம் . கிரேட் சார்.
சிவகார்த்திகேயனின் பெண் குரலில் மேஜிக் சேர்த்திருக்கும் ரசூல் பூக்குட்டிக்கு ஒரு பூக்கூடை !
யோகிபாபு நர்ஸ் சிவகார்த்திகேயனை துரத்தி துரத்தி காதலிக்கும் இடம் ஆரம்பத்தில் சுமார்தான் என்றாலும் கிளைமாக்சில் நர்ஸை காணவில்லை என்று PKஸ்டைலில் அலையும் இடம் பி அண்ட் சி கல கல !
அனிருத் பாடல்கள் திரையில் ஓகே ரகம்தான் , பின்னணி இசையில் இன்னும் சிறப்பான பங்களிப்பு செய்து இருக்கலாம்
அவ்வை சண்முகி படத்தை வேறு வகையில் ஞாபகப் படுத்தும் கதை திரைக்கதையில் சத்து கம்மி .
சரண்யா, சதீஷ் எல்லாம் படுத்தி எடுக்கிறார்கள் . எல்லா பட கேரக்டர்களுக்கும் ஒரே மாதிரி நடிப்பதை தவிர்க்க வேண்டும் .
ரெமோ .. சிவ கார்த்திகேயனின் பர்ஃபார்மான்ஸ் டெமோ .