
கடந்த ஏழாம்தேதி வெளியான படங்களில் ரெமோ படம் வசூலில் முதல் இடத்தில் இருக்க , அதற்காக மக்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி சொல்லும் நிகழ்வை நடத்தியது படக் குழு .
திருப்பூர் சுப்பிரமணியம் உட்பட்ட — படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களும் மேடையில் இருந்தனர்.
சுப்பிரமணியம் பேசும்போது ” பொதுவாக படம் எடுத்த தயாரிப்பாளரை நாங்கள் போய்ப் பார்த்து வியாபாரம் பேசுவோம்.
ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா கொஞ்சம கூட ஈகோ இல்லாமல் எங்களை தேடிவந்து வியாபாரம் பேசினார். அப்போதே படத்தின் வெற்றி உறுதியானது.
தியாகராஜம பாகவதர், எம் ஜி ஆர் , ரஜினி , விஜய் ஆகிய மாஸ் ஹீரோக்களின் வரிசையில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்து விட்டார் ” என்றார் .
காஸ்டியூம் டிசைனர் அனு பார்த்தசாரதி பேசும்போது ” எல்லோரும் இந்தப் படத்தில் எனது வேலையை பாராட்டுகிறார்கள் என்றால்,
அதற்கு இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் கொடுத்த வழிகாட்டுதலும் மாதிரிக் குறிப்புகளுமே காரணம் ” என்றார்
படத் தொகுப்பாளர் ரூபன் தன் பேச்சில் ” இந்தப் படத்துக்கு நான்தான் எடிட்டர் என்று ஆரம்பம் முதலே சொன்னார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் .
ஆனால் ரசூல் பூக்குட்டி, அனிருத், பி சி ஸ்ரீராம், போன்ற பெரிய டெக்னீசியன்கள் வந்த பிறகும் அவர் மாறாமல் என்னையே எடிட்டராக பயன்படுத்திக் கொண்டார் . அதற்கு நன்றி ” என்றார் .
” இப்படி ஒரு வெற்றிப் படத்தில் நானும் இருப்பது சந்தோசம் ” என்றார் நடிகர் யோகிபாபு
“பதினஞ்சு வருஷமா அம்மாவா நடிச்சுட்டு இருக்கேன் . இன்னும் நான் அம்மாவா நடிச்சா படம் ஓடிடும்னு செண்டிமெண்ட் இருப்பதும்
எனக்கு எல்லோரும் தரும் ஆதரவும் பெருமையாக இருக்கிறது . இறைவனுக்கு நன்றி ” என்றார் சரண்யா .
“படத்தின் நான் பேசி இருக்கும் காமெடி ‘பன்ச்’கள் மக்களால் ரசிக்கப் படுவது சந்தோசம் . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், சிவ கார்த்திகேயன் ,
தயாரிப்பாளர் ஆர் டி ராஜா ஆகியோர் தங்கள் அடுத்த படங்களிலும் எனக்கு வாய்ப்பு தரணும்னு கேட்டுக்கறேன் ” என்றார் சதீஷ்
கீர்த்தி சுரேஷ் தனது பேச்சில் “இந்தப் படத்துக்காக சிவகார்த்திகேயன் கொடுத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல . அதன் பலன்தான் இப்போது வெற்றியாகவும் நல்ல பெயராகவும் அவருக்கு அமைந்துள்ளது.
‘இந்தப் படத்தின் மூலம் தான் ஒரு மாஸ் ஹீரோ மட்டுமல்ல , சிறந்த நடிகர் கூட என்று சிவ கார்த்திகேயன் நிரூபிப்பார் ‘ என்று,
படத்தின் ஆரம்ப விழாவிலேயே நான் சொன்னேன் அதுதான் இப்போது நடந்துள்ளது ” என்றார் .
ரசூல் பூக்குட்டி பேசும்போது
” சிவ கார்த்திகேயனுக்கான பெண் குரலைக் கொண்டு வரத்தான் மிகவும் சிரமப் பட்டேன் . அதற்காக ஏ ஆர் ரகுமான் எனக்கு சில தொழில் நுட்ப உதவிகள் செய்தார் .
சிவ கார்த்திகேயன் நான்கு முறை இந்தப் படத்துக்கு பின்னணி பேசி ஒத்துழைத்தார் . அவருக்கு நன்றி
படத்தின் ஒலிக் கலவை வேலை நடந்த போது, அனிருத்தின் உதவியாளர் ஒருவர் மியூசிக் டிராக்கை கொஞ்சம் சத்தமாக வைக்கச் சொல்லிக் கொண்டே இருந்தார் . எனக்கு அது பெரிய பிரச்னையாக இருந்தது .
எனவே அவர்கள் எல்லாம் போன பிறகு அனிருத்தின் மியூசிக் டிராக்கை திருடி நான் மீண்டும் பணியாற்றினேன். ” என்றார் .
பி சி ஸ்ரீராம் பேசும்போது
” நான் எல்லா வேலைகளையும் (மறைந்த ) என் மகளின் வழிகாட்டுதலின்படியே செய்து கொண்டு இருக்கிறேன்.
பல நேரங்களில் எனக்கு என்ன நடக்கிறது என்று எனக்கே தெரியாது . அவள்தான் என்னை வழி நடத்துகிறாள் ” என்று பேசி மனம் கனக்க வைத்தார் .
அனிருத் தனது பேச்சில் “படத்தின் பாடல்களுக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு சந்தோஷமாக இருக்கிறது . படத்தின் இறுதிக் கட்டப் பணிகளின்போது நான் வெளிநாட்டில் இருந்தேன்.
எனினும் சிரமம் பாராமல் என் வேலையையும் சேர்த்துப் பார்த்த ரசூல் பூக்குட்டிக்கு நன்றி .
நாங்கள் ஒவ்வொரு படத்தின் போதும் சிவ கார்த்திகேயனிடம் ‘ இந்தப் படத்தில் இந்த லெவலுக்கு உயரணும், இவ்ளோ வசூல் வரும் படமாக இருக்கணும் ; என்று கோல் செட் செய்து கொடுப்போம்.
அதை அவர் சொல்லி அடிக்கும் விதம் அபாரமானது ” என்றார் .
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் பேசும்போது ” முதல் படத்திலேயே இப்படிப்பட்ட மாபெரும் படைப்பாளிகளுடன் பணிபுரியக் கிடைத்த வாய்ப்பு நான் செய்த பாக்கியம். தயாரிப்பாளர் ஆர் டி ராஜா அண்ணனுக்கு நன்றி .
எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது. அதுவும் பெர்ஃபெக்ஷன் என்ற பெயரில் நான் சிவா சாரை ரொம்ப கொடுமைப் படுத்தி இருக்கேன். அதற்கு அவர் என்னை மன்னிக்கணும் ” என்றார்.
விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நன்றி சொல்லிப் பேச்சை ஆரம்பித்த சிவ கார்த்திகேயன், ” எப்படி பி சி ஸ்ரீராம் சார் உள்ளே வந்த பிறகு இந்தப் படத்தின் தரம் உறுதி செய்யப் பட்டதோ ,
அப்படி திருப்பூர் சுப்பிரமணியம் வந்த போதே இந்தப் படத்தின் வெற்றின் உறுதி செய்யப் பட்டது .
எனது மினிமம் கேரண்டி காமெடி படங்களில் எல்லாம் அனிருத் இருக்க மாட்டார் . ஆனால் வித்தியாசமாக பரீட்சார்த்தமான படங்களை நான் செய்யும்போது எல்லாம்
அனிருத் அந்தப் படத்தில் இருப்பார் . அந்த வகையில் எனது கேரியரில் அணிருத்துக்கு பெரும் பங்கு உண்டு .
பாக்யராஜ் கண்ணன் மிக சிறப்பாக கதை சொன்னார் . நானும் நடிக்க ஆரம்பித்தேன்
ஆனால் அவ்வை சண்முகியை எடுத்த கே எஸ் ரவிகுமார் சார் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் எனது பெண் வேட கெட்டப்பைப் பாராட்டிய போதுதான்,
எனக்கு இந்த கேரக்டரை ஒழுங்காக நடிப்போம் என்ற தன்னம்பிக்கையே வந்தது .
சண்டைக் காட்சிகள் குறித்த எந்த தொழில் நுட்பத்தையும் நான் கற்கவில்லை . எனவே எனக்கு அது ரொம்ப கஷ்டம்.
ஆனால் இந்தப் படத்தில் நடித்த போது எனக்கு உடம்பு வலி கூட தெரியவில்லை . மாஸ்டர் அனல் அரசுவோடு அடுத்து இரண்டு படங்கள் செய்கிறேன் .
ரசூல் பூக்குட்டி , ரூபன் இவர்கள் படத்துக்கு பெரும் பலமாக இருந்தார்கள் .
நான் அழகானவன் இல்லை என்பது எனக்கே தெரியும் . ஆனால் ஸ்ரீராம் சாரின் கேமரா வழியாக பார்க்கும்போது நானும் அழகானவனாக தெரிந்தேன்.
பெண் வேடத்தில் நான் அழகா தெரிய இன்னொரு காரணம் , கீர்த்தி சுரேஷ் எனக்கு மேக்கப்பில் அவ்வளவு உதவினார். நம்மை விட அழகா தெரியக் கூடாதே என்று யோசிக்காமல் ,
ஈகோ பார்க்காமல் அவர் காட்டிய அக்கறை மறக்க முடியாதது .
நான் இந்தப் படத்துக்காக ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உழைத்து விட்டு வீட்டுக்குப் போய் விடுவேன் . ஆனால் 24 மணி நேரமும் உழைத்தவர் ராஜா “
என்ற சிவ கார்த்திகேயன் தொடர்ந்து பேச முடியாமல் கண்ணீரோடு சில நொடிகள் அமைதி காத்து விட்டு , பிறகு தொடர்ந்து பேசும்போது
“இந்தப் படத்துக்கு எவ்வளவு தடைகள் … எவ்வளவு பிரசனைகள்… நாங்க அப்படி என்ன தப்பு செஞ்சோம் ? குடும்பத்தோடு வந்து எல்லாரும் பார்த்து ரசிக்கிற மாதிரி சிரிக்கிற மாதிர்
மேலும் மேலும் நல்ல படம் பண்ண ஆசைப் படுறோம் . இது தப்பா ?
தயவு செஞ்சு எங்களை வேலை செய்ய விடுங்க . கெடுக்க நினைக்காதீங்க ” என்று யாருக்கோ சொல்லி விட்டு ,
“எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி . நீங்க எல்லாரும் பெருமைப் படும்படியான ஒரு படத்தை கண்டிப்பா நாங்க தருவோம் ” என்று திட்டவட்டமாக சொல்லி முடித்தார்