ரெட்டை வாலு @விமர்சனம்

retai vaalu review
rettai vaalau review
வாலு இரவு

பிரணவ் புரடக்ஷன் சார்பில் எஸ்.கே. ஜெய இளவரசன் தயாரிக்க, அகில் மற்றும் சரண்யா நாக் இணை நடிப்பில்,  தேசிகா இயக்கி இருக்கும்.. கிராமம் நகரம் கலந்த படம் ரெட்ட வாலு .

ஒவ்வொரு வாலும் நீளம் எவ்வளவு என்று பார்ப்போம் .

சிறுவயதில் செய்யும் அளவுக்கு மீறிய குறும்புத் தனம்,  மெல்ல மேல குற்றங்களாக வளர, பெற்ற தந்தையாலேயே திட்டமிட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு முரடனாக மாறி, பின்னர் பிக்பாக்கட்காரனாக மாறி , பெற்ற தந்தையாலேயே அடிக்கடி போலீசில் பிடித்துக் கொடுக்கப்பட்டதால் அவர் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டு வளரும் இளைஞன் அவன்(அகில்).

ஒரு நிலையில் போலீசின் துரத்தல் காரணமாக சென்னையில் இருக்க முடியாத நிலையில்,  திருவண்ணாமலை அருகில் உள்ள கீழ் பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லந்தல் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெரியவருக்கு (ஜோ மல்லூரி) எதிர்பாராத விதமாக உதவுகிறான்.

அந்த பெரியவரின் அன்பைப் பெற்று அவரது ஊருக்கு சென்று அவர் வீட்டில் தஞ்சம் புகுகிறான். அவருக்கும் அவரது  மனைவி (கோவை சரளா)வுக்குமான ஒரே மகள் (சாய்லதா ),   அவர்களுக்கு தெரியாமல் காதல் கல்யாணம் செய்து கொண்டு அதே ஊரில் கணவரோடு (தம்பி ராமையா) வாழ , அவர்களுக்கு ஒரே மகள் (சரண்யா நாக்) .

திருட்டுக் கல்யாணம் காரணமாக பெரியவருக்கும் அவரது மகள் குடும்பத்துக்கும் பகை இருந்தாலும் இரண்டு வீட்டுக்குள்ளும் போய் வரும் உறவுரிமை,  பேத்தியான அந்த இளம்பெண்ணுக்கு  மட்டுமே இருக்கிறது.

குடும்பம், கவுரவம், ஊர், உறவு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த குடும்பத்தில் பிக்பாக்கெட் நாயகனின் நுழைவு பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது . அவனை நல்லவன் என்று நம்பி  அந்த பெண் அவனை காதலிக்க ,உண்மையை சொல்லாத அவன் அந்த காதலை ஏற்கிறான். அவளது நகைகளையே திருடி அடகுவைத்து செலவு செய்கிறான் .

ஒரு நிலையால் திருட்டு வெளிப்பட்டும் அவனை அவள் நம்ப , இருவரும் சென்னைக்கு ஓடி வருகிறார்கள். வந்த இடத்தில் அவனது குடும்பத்தின் ஆதரவு கிடைக்காத நிலையில் பழைய திருட்டு நண்பர்களின் உதவியில் அவர்களுடனே தங்க வேண்டி வருகிறது. பெண்ணின் அப்பாவும் தாத்தாவும் பெண்ணைக் கண்டு பிடிக்க சென்னை வந்து மிகுந்த சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.

இந்த நிலையில் காதல் ஜோடி நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்தார்களா ? தேடி வந்த குடும்பத்தோடு அந்தப் பெண் இணைந்தாளா? திருட்டுக் கும்பலின் சகவாசத்தால் சிக்கலுக்கு ஆனாளா என்பதே இந்த ரெட்ட வாலு .

rettavaalu review
காமடியாட்டம்

படத்தின் மிகப் பெரிய பலம் கிராமம் சம்மந்தப்பட்ட காட்சிகள். கிராமத்து இயல்பை ,உறவின் வலிமையை,  உறவுச் சிக்கல்களை , பகையையும் மீறிய பாசத்தை,  ஒரு கள்ளங் கபடில்லாத பெண்ணின் முரட்டுக் காதலை…. மிக அருமையாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் தேசிகா .

பெரியமனுஷியான பேத்திக்கு சீர் செய்ய தாத்தாவும் பாட்டியும் போக, பெண்ணின் தந்தை தடுக்க, அங்கே சண்டை வர….பெரியவரின் மனைவி , மருமகன் , இரண்டு தரப்புக்கும் இடையில் சிக்கிக் கொண்ட பெரியவரின் மகள் என்று….  மூன்று தரப்புக்கான நியாயங்களையும் விளக்கும் இடத்தில் வசனம் முழுமையாக கம்பீரமாக ஜொலிக்கிறது . சபாஷ் !

அவமானப்படுத்தப்பட்ட தனது தாத்தாவையும் பாட்டியையும் அடுத்த காட்சியிலேயே அவர்களது வீட்டுக்குள் நுழைந்து பேத்தி சமாதானப் படுத்தும் காட்சி … நாம் பார்ப்பது சினிமா அல்ல. ஒரு நிஜ வீட்டில் நடப்பதை நேரடியாக பார்க்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது . அருமை

கதாநாயகி ஓடிப்போன அடுத்த நொடி,  அதுவரை சண்டை போட்டுக் கொண்டு விலகி இருந்த மாமனாரும் (பெண்ணின் தாத்தா ) மருமகனும் (பெண்ணின் தந்தை) பாசத்துடன் ஒன்று சேர்ந்து,  பெண்ணை தேடக் கிளம்பும் காட்சியில் உறவுகள் பற்றிய இயக்குனரின் அனுபவ அறிவு பளிச்சிடுகிறது.

ஒட்டு மொத்தமாகவே கிராமத்துக் காட்சிகள் மனம் கவரும்படி இருக்கின்றன. இசை பாடல்கள் ஒளிப்பதிவு  படத்தொகுப்பு இவற்றில் குறை சொல்லவும் ஒன்றும் இல்லை.

காமெடி , கோபம் , பாசம் கலந்த ஆல் ரவுண்டர் கேரக்டரில் அசத்துகிறார் தம்பி ராமையா. (சென்னையில் மகளைப் பார்க்கும் காட்சியில் மட்டும் நெகிழ்ச்சிக்கு பதில் அவரது எக்ஸ்பிரஷன் சிரிப்பை வரவழைக்கிறது.) தவிர கருப்பசாமி கெட்டப்பில் அசத்தலாக ஓர் ஆட்டமும் போடுகிறார் தம்பி ராமையா .

ஆரம்பக் காட்சிகளில் வழக்கமான அழுத்து அழுத்தி செயற்கையாக பேசினாலும் போகப் போக கேரக்டருக்குள் கரைந்து நிறைந்து கலக்குகிறார் கோவை சரளா . ஒரு இயல்பான எளிய கிராமத்துப் பெண் காரக்டரில் சரண்யா நாக் சிறப்பாக நடித்து இருக்கிறார்.  நாயகன் அகில், ஜோ மல்லூரி, சாய்லதா, சாய் ரமணி ஆகியோர் கேரக்டருக்கு பொருத்தமாக நடித்துள்ளார்கள்.

retta vaalu review
ரெட்டை தலைகள்

படத்தில் அயோக்கியன் , நல்லவன் , மொள்ளமாரி , முடிச்சவிக்கி எல்லோருக்கும் ஒரு நியாயம் சொல்கிறார் இயக்குனர் . அது தப்பு  சார்.

 அதே போல கதாநாயகன் கேரக்டர் விஷயத்தில் குழம்பி இருக்கிறார் இயக்குனர்.

ஒன்றுமறியாத இளம்பெண்கள்,  திடீரென்று அறிமுகமாகும் தகுதியே இல்லாத மோசமான நபர் மீது உண்மையான காதல் வைத்து,  அவர்களை நம்பிப் போய் என்ன கதிக்கு ஆளாகிறார்கள் என்ற ரீதியில்,  இதன் திரைக்கதையை கொண்டு போயிருந்தால்,  வயசுக்கு வந்த பெண்களுக்கு பாடமாகவும் அவர்களது பெற்றோருக்கு எச்சரிக்கையாகவும் அமைகிற,  ஓர் அதிர வைக்கும் படமாக இன்னும் சிறப்பாக இந்தப் படம் வந்திருக்கும்.

நாயகன் நல்லவனாகவே இருக்க வேண்டும் என்றால் …..

அவனை அராஜக போலீஸ் அநியாயமாக துரத்துவது போன்ற யூகத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்தி, சென்னையில் இருந்து வந்த அவன் கிராமத்தில் தஞ்சம் புகுந்தான் ; குடும்பத்தோடு பழகினான் ; அந்தப் பெண்ணுக்கு அவன் மீது காதல் வந்தது ; ஆரம்பத்தில் தயங்கிய அவன் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டான் என்று கதை சொல்லி எல்லாம் நன்றாக நடக்கும் சமயத்தில் அவனது பழைய திருட்டு வாழ்க்கை வெளிப்பட்டு , எல்லோரும் அவனை ஒதுக்க…..

தான் எப்படி திருடனானேன் என்பதை கதாநாயகியிடம் அவன் சொல்லி,  இனி திருடமாட்டேன் என்றும் சொல்ல, அவன் மீது காதல் குறையாத அந்தப் பெண் அவனோடு கிளம்பி ஓடிப் போக, அவளைத் தேடி குடும்பம் வர  …. வாழ்வில் அவள் ஜெயித்தாளா? தோற்றாளா…

— என்பது இன்னொரு கதை .

ஆனால் இந்த இரண்டு கதையிலும் கொஞ்சம் கொஞ்சம் வேண்டும் என்று இயக்குனர் ஆசைப் பட்டதால் வந்த குழப்பம்தான் படத்தின் பலத்தை சற்று குறைத்து விட்டது.

எனினும் இதயத்தை தொடுகிற விஷயத்தை எடுத்து படமாக்கி இருப்பதற்கு பாராட்டலாம் .

ரெட்டை வாலு ….மொட்டை இல்லை .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →