
தங்கத் தட்டில் வேகாத சோறும் வெள்ளிக் கிண்ணத்தில் திரிஞ்ச பாலும் வைத்து சாப்பிடச் சொன்னால் தங்கம் வெள்ளி என்பதற்காக சாப்பிடத் தோன்றுமா ? இல்லை உடம்பு முக்கியம்னு தள்ளி வைக்கத் தோன்றுமா ?
இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்பதை பொறுத்தே அமர காவியம் உங்களுக்கு பிடித்த படமாகவோ பிடிக்காத ஜடமாகவோ தெரியும் .
1988 இல் துவங்கி அடுத்த இரண்டே வருடத்தில் முடிகிற பீரியட் படம் . ஊட்டியில் மேல் நிலைப் பள்ளியில் படிக்கிற ஜீவாவும் (நாயகன் சத்யா ) பாலாஜியும் (ஆனந்த் நாக்) நண்பர்கள் . சக மாணவி கார்த்திகா (நாயகி மியா ஜார்ஜ்) பாலாஜியை காதலிப்பதாக நண்பர்கள் இருவருமே நம்புகிறார்கள். .
பாலாஜிக்காக ஜீவா தூது போக , அப்போதுதான் கார்த்திகா தன்னை காதலிப்பதை அறிகிறான் ஜீவா. முதலில் அதிர்ச்சி அடுத்து இன்பம் என்றாகிறது. ஜீவாவும் கார்த்திகாவின் காதலை ஏற்கிறான். அதே நேரம் நண்பனுக்கு எப்படி உண்மையை சொல்வது என்று தவிக்கிறான் . ஒரு நிலையில் கார்த்திகா , ஜீவா இருவருமே பாலாஜியிடம் மிக கண்ணியமாக நியாயமாக மென்மையாக தங்கள் காதலை சொல்லியும் பாலாஜி மனதில் விஷ விதை விழுகிறது .
காதலர்கள் தனிமையில் இருந்த ஒரு சமயத்தில் போலீஸ் வசம் சிக்க, இரண்டு வீட்டுக்கும் விசயம் தெரிகிறது. காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள் .
அப்பா இறந்து போய் அம்மா இன்னொரு கல்யாணம் செய்து எல்லோரும் ஒன்றாக வாழும் சூழலில் இரண்டாவது அப்பா அன்பாக இருந்தாலும் தனது வீட்டில் அன்னியமாக வாழ்ந்த ஜீவாவுக்கு, கார்த்திகாவை பிரிந்து இருப்பது மிகுந்த மனச் சோர்வு மற்றும் ஆத்திரத்தை ஏற்படுத்த மன நல மருத்துவரிடம் சிகிச்சைக்கு போகிறான்.
காதலர்கள் சந்திக்க செய்யும் அரை குறை முயற்சிகள் எல்லாம் வஞ்சக நண்பன் பாலாஜியின் செயலால் தடுக்கப்படுகிறது. கார்த்திகா குடும்பத்தோடு இருக்கும் இடமே ஜீவாவுக்கு தெரியாமல் போக அது தெரிந்த பாலாஜி ஜீவா பைத்தியமாகி விட்டான் என்று கார்த்திகாவிடம் சொல்ல…
நீண்ட போராட்டத்துக்கு பிறகு கார்த்திகாவை சந்திக்க , அவள் தன்னை விட்டு விலகிப் போய் விடுவாள் என்று எண்ணி ஜீவா செய்யும் ஒரு காரியம் …..
படத்தையே கத்தியால் சொருகி கிழித்து ரத்தக் காடாக்கி தரையில் கிடத்தி விடுகிறது .
முதலில் நல்ல விசயங்களை பாராட்டி விடுவோம் .
படத்தை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் ஜீவா ஷங்கரின் ஒளிப்பதிவும் ஃபிரேம்களும் வண்ணங்களும் ஒளி ஆளுமையும் மனதை மயக்குகின்றன . காதலை சொல்லிக் கொண்ட பிறகு, முதன் முதலாக ஜீவாவும் கார்த்திகாவும் சந்தித்துப் பேசும் இடத்தில் ஒரு மீடியமான லாங் ஷாட்டில் மிக மெதுவாக ஒரு டிராலி ஷாட் எடுத்து இருக்கிறார் பாருங்கள் . சும்மா சொல்லக் கூடாது . உலகத் தரம்.

படத்தில் வரும் அந்தக் கால கட்டத்தில் சீசன் இல்லாத சமயங்களில் ஊட்டி என்பது ஆளரவமே இல்லாத தீவுக் காடு மாதிரியே இருக்கும். அதை அப்படியே படத்தில் கொண்டு வந்திருப்பது இயக்குனர் ஜீவா சங்கரின் திறமை.
படம் முழுக்கவே ஜிப்ரானின் இசை இதயத்துக்குள் குளிர்ச்சியாக சர்க்கரைப் பாகை காய்ச்சிக் கொண்டே இருக்கிறது . ரீ ரிக்கார்டிங்கில் ஜிப்ரானின் அருமையான முதல் படம் இதுவே .
கேரக்டருக்கு பொருத்தமாக, காட்சிகளை உணர்ந்து நடித்து இருக்கிறார் சத்யா .
இளநீரில் தேன் கலந்து அதை பூவாளி வழியாக ஊற்றி வளர்த்த செடியில், ஒரு பட்டு ரோஜா பூத்தால் அது எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறார் நாயகி மியா ஜார்ஜ் . நடிப்பும் அபாரமாக இருக்கிறது. பள்ளி மாணவி, கல்லூரி மாணவி கதாபாத்திரத்தை விட இளம் மனைவி மாதிரியான கேரக்டர்களுக்கு இவர் நூறு சதவீதம் பொருத்தமாக இருப்பார்.

சில பல இடங்களில் கலை இயக்கமும் கவர்கிறது.
நிற்க .. இப்போது கட்டுரையின் முதல் பாராவை ஒரு முறை படித்து விட்டு தொடர்ந்து படிக்கவும் .
பீரியட் பிலிம் என்பதற்காக அந்தக் கால கட்டத்தில்,பல படங்களில் வந்த அதே திரைக்கதையை இப்போது படமாக்கினால் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் ? இந்த திரைக் கதையில் புதுசாக என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் எங்கே?
நண்பன் காதலை சொல்லப் போன இடத்தில் அவள் தன்னை காதலிப்பது ஹீரோவுக்கு தெரிகிறது . உடனே அவளை காதலிக்க ஆரமபித்து விடுகிறான் . எனில் அந்தக் காதலின் சுயம் என்ன? அந்தக் காதலுக்காக படத்தின் பின் பகுதியில் அவன் மன நோயாளியோ என்று தோன்றும் அளவுக்கு நடந்து கொள்கிறான் என்று காட்சிகள் இருக்கும்போது, அவள் மேல் அவனுக்கும் காதல் வருவதை ஒரு உணர்வாக நிகழ்வாக சொல்லாமல், சும்மா வசனத்தால் மட்டும் சொல்லி விட்டுப் போவது அநியாயம்
காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது என்றாலும் காதலர்களுக்கு இடையே படத்தில் அழுத்தமாக உணர்வு பூர்வமாக ஒரு காட்சி கூட இல்லாதது குறையே . அடிக்கடி ஐ லவ் யூ என்று சொல்லிக் கொள்வதையாவது இன்னும் அதிகமாக படம் முழுக்க ஒரு குணாதிசயம் போல கொண்டு வந்திருக்கலாம் .

‘ஜீவாவுடனான நமது காதலால் பாலாஜி பாதிக்கப்பட்டவன்’ என்று நன்கு தெரிந்தும், தான் ஊரு விட்டுப் போகும் தகவல் அடங்கிய கடிதத்தை கார்த்திகா பாலாஜியிடம் கொடுத்து ஜீவாவிடம் கொடுக்க சொல்வது ஏன்? வேறு யாருமே இல்லையா ? பள்ளிக்கு வெளியே வெளியே வடை விக்கிற ஆயாவிடம் கொடுத்து இருந்தால் கூட பத்திரமாக கொடுத்து இருக்குமே .
உண்மையான காதலில் ஒரு பிரிவு – இழப்பு ஏற்படும்போது சம்மந்தப்பட்டவர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும் . ஆனால் இந்தப் படத்தில் எல்லோரும் எல்லா வேலைகளையும் வழக்கம் போல செய்து கொண்டே இருப்பது எரிச்சல் .
அவ்வளவு பிரச்னை களேபரம் நடந்த பிறகும் கார்த்திகாவின் வீட்டுக்கு வரும் ஜீவா ”அவளிடம் ரெண்டு நிமிஷம் பேசணும்” என்று சொல்ல , உடனே கார்த்திகாவின் அப்பா அவளிடம் ‘ரெண்டு நிமிஷத்துல வந்துடணும்’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறாரே …அதிசயம் புரியல . அவ்வளவு டீசன்டான ரீஜண்டான அப்பா ஒரு நிலையில் மகளின் காதலை ஏற்பார் போல என்று எண்ணி காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்ததுதான் மிச்சம் .அப்படியும் நடக்கவில்லை
இப்படியாக எந்தக் கதாபாத்திரமும் முறையாக உருவாக்கப் படவில்லை .
கதாநாயகியின் அப்பா ஊட்டியில் இருந்து ரகசியமாக டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு குடும்பத்தோடு …. குவீன்ஸ்லாந்துக்கு ஒண்ணும் போகல. பக்கத்துல கோயம்புத்தூருக்குதான் வந்து இருக்காங்க. அடுத்த சில நாட்கள் கார்த்திகாவை காணாமல் தேடும் ஜீவா , ஒரு நிலையில் பாலாஜி சொன்ன தவறான செய்தியை வைத்து சென்னைக்கு போய் அவளை தேடுகிறான் .
சரி…. இருக்கட்டும்! கோயம்புத்தூருக்கு குடும்பத்தோடு வந்து விட்ட கார்த்திகா, பஸ் பிடித்தால் இரண்டரை மணி நேரத்தில் ஊட்டிக்கு போய் ஜீவாவை சந்தித்து விடலாமே ? அட, கள்ளக் காதல் ஜோடிகளே அப்படிதான்மா போறாங்க .

தீவிர காதலன் என்று காட்டப்படும் ஜீவா கார்த்திகாவை கண்டுபிடிக்க உருப்படியாக ஒரு புல் கூட பிடுங்கவில்லை. படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை படத்தில் காட்டப்படும் அந்த ஊட்டி காபி பாரில் வேலை செய்கிற பையன்தான் அந்த விசயததையும் ஜீவாவுக்கு சொல்கிறான் .
80 களின் காலகட்டக் காதல்களில், காதலித்த பெண்ணை தேடி ஓடும் காதலர்களின் வீரியம் மற்றும் தீவிரம் குறித்த எந்த புரிதலும் இல்லாத திரைக்கதை இது !
படத்தில் வரும் மருத்துவர், ஜீவாவை பரிசோதித்து விட்டு “அவனுக்கு மன நோய் எல்லாம் எதுவும் இல்லை” என்கிறார் . ஆனால் கடைசியில் ஜீவா செய்யும் காரியத்தை பார்த்தால் அந்த டாக்டர் பயபுள்ள போலி டாக்டரோன்னு சந்தேகம் வருது . அந்த தறுதலைய புடிச்சு ஜெயில்ல போடணும் .
இல்லையெனில் நாயகானான ஜீவாவுக்கும் , சென்னையில் வினோதினி என்ற பெண் மீது ஆசிட் ஊற்றிக் கொன்ற குற்றவாளிக்கும் என்ன வித்தியாசம்?
தனது தம்பியான சத்யாவை பிரபல ஹீரோவாக்க நடிகர் ஆர்யா சொந்தமாக தயாரித்த படமாம் இது . இத்தன வருஷம் சினிமாவில் இருந்தும் ஆர்யாவின் ஸ்டோரி நாலேட்ஜ் இவ்வளவுதானா ?
அமர காவியம்…. நெஞ்சில் அமராத படம் !