
எண்பது சதவீதம் பாட்ஷா , பத்து சதவீதம் தளபதி, அப்புறம் கொஞ்சம் தீனா, கொஞ்சம் அசல் .. இவற்றின் கூட்டுப் பொரியலே அஞ்சான்.
கன்னியாகுமரியில் இருந்து மும்பை போகும் கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளியான சூர்யா, மும்பையையே தனது கைப்பிடியில் வைத்திருந்து விட்டு, ஒரு நிலையில் என்ன ஆனார் என்று தெரியாமல் போன தனது அண்ணன் ராஜு பாய் என்ற தாதாவை (இன்னொரு சூர்யா) தேடுகிறார்.
ராஜு பாயை தேடி வந்த இந்த தம்பியை, சம்மந்தப்பட்ட பலரும் ஒதுக்க , ராஜு பாய் மீது அன்பு கொண்ட சிலர் மட்டும் உதவுகின்றனர்.
ராஜுவின் கதை தம்பிக்கு கூறப்படுகிறது .
அதாவது ராஜுவோடு சேர்ந்து சந்துரு என்ற அவனது ஆருயிர் நண்பன் ஒருவனும் மும்பை நிழல் உலகை கட்டி ஆண்ட நிலையில் கமிஷனரின் மகளுக்கும் (சமந்தா) ராஜுவுக்கும் காதல் வருகிறது. இன்னொரு தாதா, ராஜு – சந்துரு குழுவைச் சேர்ந்த சிலரையே விலக்கு வாங்கி, ராஜு இல்லாத சூழலில் சந்துருவை குத்திக் கிழித்துக் கொல்கிறான்.
விஷயம் அறிந்து வந்த ராஜுவை, எதிர் தாதாவிடம் விலை போன இன்னொரு சக நபரே, சுட்டு ஆற்றில் தள்ளுகிறான்.அதன் பிறகு தனது அண்ணன் ராஜு பற்றி தகவலே இல்லை என்பது தம்பிக்கு தெரிய வருகிறது.
ஒரு நிலையில் ராஜுவுக்கு வேண்டாத சில நபர்கள் ராஜுவைத் தேடி வந்த தம்பியையே கொல்ல முயல, அவர்களை தம்பி திடீரென்று முரட்டு அடி அடிக்கும்போதுதான், ராஜுவின் தம்பி என்று சொல்லிக் கொண்டு வந்தவனே நிஜமான ராஜு பாய் என்பது தெரிய வருகிறது.
அப்புறம் என்ன ? துரோகம் செய்து தனது ஆருயிர் நண்பன் மாணிக் பாட்ஷாவை , அடச்சே ! சந்துருவை கொல்வதற்கு துணை போன துரோகிகளையும், கொன்ற எதிர் தாதாவையும் பழிவாங்கி விட்டு காதலியோடு சென்னைக்கு கிளம்பி வருகிறான் ராஜு . இதுதான் அஞ்சான் .
படத்தில் சூர்யாவின் கெட்டப் அருமை . கால் ஊனமுற்ற சூர்யாதான் உண்மையான ராஜு என்பது ரசிகர்களுக்கு புரிய வரும அந்த சண்டைக் காட்சி பிரம்மாதம் . காஸ்டியூம் கலை இயக்கம் இரண்டும் சிறப்பாக உள்ளது . யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பட்டையைக் கிளப்புகிறது. சிறப்பு சப்தங்கள் நன்று. இயக்குனர் லிங்குசாமியின் ஃபிரேம்கள் சிறப்பு .
இவற்றை தவிர படத்தில் பாராட்ட ஒன்றுமே இல்லை என்பதுதான் பரிதாபம். தவிர பொறுக்க முடியாத விஷயங்கள் பல.

சந்தோஷ் சிவனுக்கு என்ன ஆச்சு? சமந்தாவை ஏதோ சுப்பிரமணியபுரம் சுவாதி போல தப்பான கோணங்களில் படம் எடுத்து இருக்கிறார் .
தம்பியாக நடிப்பவர்தான் உண்மையான ராஜு பாய் என்றால் , அந்த விஷயம் ரசிகர்களுக்கு உணர்த்தப்படும் வரை அவரைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் விசயங்களை அவர் ஏன் நிஜமாகவே ஒன்றும் தெரியாதவராகவே கேட்கிறார் ? ரசிகர்களை ஏமாற்றுவதில் ஒரு புத்திசாலித்தனமான நேர்மை இருக்க வேண்டும். ஏய்ப்பு இருக்கக் கூடாது.
பிரம்மானந்தத்தை வைத்து காமெடி என்ற பெயரில் அறுத்துத் தள்ளுகிறார்கள்.
சமந்தா அதீத கவர்ச்சி காட்டியபோதும் , பாடல் காட்சிகளில் ரசிகர்கள் குண்டு விழுந்த வேகத்தில் வெளியே ஓடுகிறார்கள்.
சூர்யா பேசும்” என் சாவை நான்தான் முடிவு செய்வேன் . உன் சாவையும் நான் தான் முடிவு செய்வேன் ” என்ற பஞ்ச் டயலாக் ஒரு நிலையில் போகப் போக எரிச்சலையே ஏற்படுத்துகிறது.
பின் பாதியில் படத்துக்கான படா படா வேகத் தடைகளாக சமந்தா தொடர்பான காட்சிகள் வந்து, ரசிகர்களை டார்ச்சர் செய்கின்றன.
சமந்தாவை மீட்டு வரும் சண்டைக் காட்சி வெகு நீளம் . பார்ப்பவர்களை களைப்பாக்குகிறது அது .
இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சுவாரஸ்யம் என்று எதுவுமே இல்லை . பல காட்சிகளை வேண்டும் என்றே வெட்டிக்கு போட்டு நிரப்பி இருக்கிறார்கள் (உதாரணம் இந்திப் பாடல்களுக்கு சூர்யா சமந்தா நடனம் ஆடுவது !) இத்தனைக்கும் படம் மொத்தம் இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடம் நாற்பத்தைந்து நிமிடம் ஓடுகிறது
எதிர்பார்க்க முடிகிற திருப்பங்கள் சோர்வையே ஏற்படுத்துகின்றன. படத்தில் லாஜிக் மருந்துக்கும் இல்லாததால் படம் பார்ப்பவர்களுக்கு எந்த இடத்திலும் சிறு பரபரப்போ பதட்டமோ ஆர்வமோ ஏற்படவே இல்லை.
பலமுறை பார்த்து சலித்த கதை, புளித்த திரைக்கதை அலுத்த வசனங்கள் ….
அப்போது பார்த்த பாட்ஷாவின் திரைக்கதையில் நமக்குக் கிடைத்த சுவாரஸ்யத்தில் கால்வாசி கூட அஞ்சான் படத்தில் இல்லை
அஞ்சான் .. நோஞ்சான் . !