வரம் கிரியேஷன்ஸ் சார்பில் சத்யா நாகராஜ், எஸ்.செல்லத்துரை, சாமி பி.வெங்கட் , பாலாமணி ஜெயபாலன் ஆகியோர் தயாரிக்க, விவந்த் — ஈடன் இணை நடிப்பில் கே.எம்.சரவணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் இருக்கு ஆனா இல்ல.
ஆனால் நீங்கள் இந்தப் படத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு இன்னொரு படத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
ரீஸ் விதர் ஸ்பூன் என்ற நடிகையும் மார்க் ரஃப்ஃபலோ என்ற நடிகரும் இணையராக நடிக்க, மார்க் லெவி என்பவர் எழுதிய ‘ஈஃப் ஒன்லி இட் வேர் ட்ரூ’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, மார்க் வாட்டர்ஸ் என்பவர் இயக்கி, 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படம் ‘ஜஸ்ட் லைக் ஹெவன்’.
மேற்படி’ஈஃப் ஒன்லி இட் வேர் ட்ரூ நாவலை படமாக்கும் உரிமையை ஸ்பீல் பெர்க் வாங்கி வைத்திருக்க அவரிடம் இருந்து உரிமையை பெற்று இதை படமாக்கினார் மார்க் வாட்டர்ஸ் .

கதை இதுதான்.
எலிசபத் என்ற ஒரு பெண் டாக்டர் முகம் பார்த்திராத ஒரு புதிய நண்பனோடு டேட்டிங் போகும் ஆவலில் பயணிக்கும்போது கோரமான விபத்தில் சிக்குகிறாள். எலிசபத் வாழ்ந்த வீட்டுக்கு, எதிர்பாராத ஒரு விபத்தில் மனைவியை இழந்த டேவிட் என்ற ஒரு ஆர்க்கிடெக்ட் குடிவருகிறான். அந்த வீட்டில் எலிசபத்தின் உருவம் நடமாடுகிறது.
ஒரு நிலையில் அவர்கள் சந்தித்துக் கொள்ளும்போதுதான அவள் இறந்து போனதே அவளுக்கு தெரியவில்லை என்பதும் அவள் யார் என்பதும் அவளுக்கு தெரியவில்லை என்பதும் புரிகிறது. எலிசபத் என்னும் அந்த பேயை வீட்டை விட்டு ஓட்ட டேவிட் செய்யும் முயற்சிகள் வீணாகின்றன.

எலிசபத் இருப்பதும் பேசுவதும் டேவிட்டுக்கு மட்டுமே தெரிவதால் மற்ற எல்லோரும் அவனுக்கு ‘பிரம்மை புடிச்சுப் போச்சு’ என்று சொல்கின்றனர். ஒரு நிலையில் எலிசபெத்துக்கும் டேவிட்டுக்கும் இடையில் ஒரு ‘பந்தம்’ வருகிறது. அவன் அவளை அழைத்துப் போகும் ஒரு மலைவாசஸ்தல தோட்டம் மருத்துவ மனையில் பணியாற்றியபோது அவள் கனவில் பார்த்த ஒரு தோட்டம் போலவே இருக்கிறது.
டாரி என்ற நண்பனின் உதவியுடன் எலிசபத் யார் என்று கண்டுபிடிக்கும்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. எலிசபத் இன்னும் சாகவில்லை . அவள் கோமா ஸ்டேஜில் இருக்கிறாள்.
எதிர்பாராத விபத்துக்கு ஆளானால் மருத்துவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவள் முன்பே எழுதிக் கொடுத்திருந்த உயிர் பிரமாணப் பத்திரப்படி (அமெரிக்காவில் இது வழக்கம் . நமது உடல் எனும் சொத்துக்கு நாம் தரும் ‘பவர் ஆஃப் அட்டர்னி’ இது )… அவளை அப்படியே சாக விட்டுவிட மருத்துவமனை முடிவு செய்திருப்பது தெரிய வருகிறது .
அவளை சாக விட விரும்பாத டேவிட் தன்னைப் பற்றியும் தனக்கு எலிசபத்தின் உருவம் தெரிவது பற்றியும் எலிசபத்தின் சகோதரியான அபியிடம் சொல்கிறான் . ஆனால் அவனை லூஸ் என்று என்று திட்டும் அபி, விரட்டி விடுகிறாள். இத்தனைக்கும் அபி டேவிட்டின் நண்பன் எலிசபத்தின் தோழிதான்.
அதுமட்டுமல்ல விபத்து நடந்த தினம் அன்று எலிசபத் சந்திப்பதற்காக வந்து கொண்டிருந்த முகம் தெரியாத புதிய நண்பனே டேவிட்தான் . அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவனே நண்பன் டாரிதான்.

எலிசபத் விபத்தில் சிக்கும் முன்பு அவள் டேவிட்டை சந்திக்க வந்து கொண்டு இருந்ததால்தான் கோமா நிலைக்கு போன அவள் டேவிட்டின் கண்ணுக்கு மட்டும் உருவமாக தெரிகிறாள் . அவள் பேசுவது அவனுக்கு மட்டும் கேட்கிறது.
இந்த நிலையில் எலிசபத்தை தான் காதலிப்பதை டாரிக்கு உணர்த்தும் டேவிட் கோமா நிலையில் உள்ள எலிசபத்தின் உடலை மருத்துவமனையில் இருந்து கடத்தி அவளைக் காப்பாற்றுகிறான் . ஆனால் உயிர் பிழைத்த எலிசபத்துக்கு டேவிட் யாரென்று தெரியாமல் போக மூன்றாம் பிறை கமல் மாதிரி நொறுங்கிப் போகிறான் டேவிட் .
எனினும் சோக முடிவு இல்லை.
அப்பார்ட்மென்ட்டுக்கு வரும் எலிசபத், வீட்டின் சாவியை கேட்க, டேவிட் அதை கொடுக்கும்போது இருவரின் விரல்களும் உரச… இதுவரை நடந்த சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து, காதல் எரிமலை பொங்கி வழிய… இழுத்து இழுத்து கிஸ் அடித்து படத்தை முடிக்கிறார்கள் .
லாஜிக் இல்லை என்று சொல்லப்பட்டாலும் படமாக்கப்பட்ட விதத்துக்காகவும் நடிகர்களின் நடிப்புக்காகவும் மிகவும் சிலாகிக்கப்பட்ட படம் இந்த ஜஸ்ட் லைக் ஹெவன் .

இந்தக் கதையை எடுத்துக் கொண்டு சினிஷ் என்பவர் உருவாக்கிய என்றென்றும் என்ற படம் சில மாதங்களுக்கு முன்பு வந்தது.
கொடுமைக்கார அப்பாவிடம் சிக்கி இறந்து போன அம்மாவை மறக்க முடியாத ஒரு இளைஞன் சென்னைக்கு வந்து ஒரு அபார்ட்மென்ட்டில் தங்க வீட்டுக்குள் பெண் உருவம் தெரிகிறது . பயம், சண்டை, நட்பு, காதல் !
அவள் இறந்ததன் காரணம் அவளுக்கே தெரியாத நிலையில் அவள் விருப்பப்படி காரணத்தை நாயகன் தேட , ஒரு பள்ளியில் டீச்சராக பணியாற்றிய அவளை அங்கு பணிபுரியும் ஒருவன் கொடூரமாக கற்பழித்து ….அங்கேயும் பெண் சாகவில்லை .கோமா ஸ்டேஜ்தான்.
சம்மந்தப்பட்ட குற்றவாளியை ஹீரோ கொல்ல, கோமா ஸ்டேஜிலேயே அவள் இறந்து போக , இறந்து போன காரணத்தால் அவள் உருவம் அவன் கண்ணுக்கு தெரியாமல் போக, அவளைப் பார்க்க முடியாத நாயகன் , அவளது நிலைக்கு காரணமாக இருந்த அனைவரையும் கொன்று விட்டு தானும் செத்து மேலுலகில் அவளோடு இணைவதுதான் என்றென்றும் படம்.
“”என் படத்தில் ஆரம்பத்திலேயே ஜஸ்ட் லைக் ஹெவன் படத்துக்கு கிரடிட் கார்டு போட்டேன் சார் ” என்று இப்போது சொல்கிறார் இயக்குனர் சினிஷ் வாழ்க!

என்றென்றும் படத்தில் கதாநாயகி அழகாக இருந்தார். திரைக்கதையில் ஒரு தெளிவும் படமாக்கலில் ஒரு கனமான சோகமும் என்றென்றும் படத்தில் பாராட்டும்படி இருந்தது .
ஆச்சா?
இதே கதையில் இந்த வாரம் வந்திருக்கும் இருக்கு ஆனா இல்லை படத்தில்..
ஹீரோ வெங்கட் (விவந்த்) ஓர் ஐடி இளைஞன். ஆபீசில் ஒழுங்கா வேலை செய்யாமல் எல்லோராலும் கிண்டல் செய்யப்படுபவன்.
தண்ணி அடித்து விட்டு டூ வீலரில் வருகையில் இவனும் சம்மந்தப்படும் ஒரு எதிர்பாராத விபத்தில் சிக்கிய திவ்யா என்ற இளம்பெண் (ஈடன்) உயிருக்கு போராடுவதை பார்க்கிறான். காப்பாற்ற விரும்பி நண்பன் மீனாட்சி சுந்தரத்திடம் (ஆதவன்) போனில் உதவி கேட்கிறான். ”குடிபோதையில் இருக்கும் உன்னையே போலீஸ் சந்தேகப்படும் ”என்று நண்பன் மிரட்ட, அப்படியே விட்டு விடு வந்து விடுகிறான்.
மறுநாள் இரவு முதல் அப்பார்ட்மென்ட்டுக்குள் அந்தப் பெண் பேயின் நடமாட்டம். பயம் , சண்டை , நட்பு வருகிறது. ஆவி திவ்யா தரும் அட்வைஸ்களால் வெங்கட்டுக்கு அலுவலகத்தில் முக்கியத்துவமும் அந்தஸ்தும் உயர்கிறது. திவ்யா மீது காதலும் வருகிறது.

எப்படி செத்தோம் என்பதே தெரியாத திவ்யாவுக்காக அவள் யார் என்று தேடிப் போனால் … கோமா ஸ்டேஜில் அதே உருவம் . ஆனால் அவள் ஆவியாய் நிற்கும் திவ்யா இல்லை . அவளது டுவின்ஸ் தங்கை காவ்யா . மருத்துவமனையில் கோமா ஸ்டேஜில் உள்ள காவ்யாவுக்கு மருந்து வாங்க ஆட்டோவில் போன அந்த இரவுதான் திவ்யா விபத்தில் சிக்கி இருக்கிறாள் . அப்புறம் இறக்கிறாள் (ஆட்டோக்காரர் காத்துல கரைஞ்சுட்டாரா டைரக்டர் ?)
கோமா ஸ்டேஜில் இருக்கும் காவ்யாவை வேண்டும் என்றே சாகடித்து அவளது உடல் உறுப்புகளை திருட டாக்டர் முயல , அதை அறியும் ஆவி திவ்யா வெங்கட்டிடம் விஷயத்தை சொல்ல , அதை அவளது அம்மாவிடம் சொல்கிறான் . ஆனால் அதை நம்பாத திவ்யா காவ்யாக்களின் அம்மா அவனை விரட்டுகிறாள் (ஒரிஜினல் ஜஸ்ட் லைக் ஹெவன் படத்தில் எலிசபத்தின் தங்கை அபி செய்யும் வேலை இது . ஆனால் இங்கே ஹீரோயின் நிஜமாகவே செத்து தங்கை கேரக்டர் கோமாவில் இருப்பதால் அந்த விரட்டு வேலை அம்மா கதாபாத்திரத்துக்கு போய் விட்டது . கூடவே செத்துப் போன மகள் தன்னால் பார்க்க முடியாதபடிக்கு அருவமாக இருப்பதை உணர்ந்து கலங்கும் அம்மா செண்டிமெண்ட்டும் ! )
கடைசியில் காவ்யாவை ஆக்ஷன் செய்து ஹீரோ காப்பாற்ற , குணமான காவ்யா நன்றி சொல்ல வெங்கட்டின் வீட்டுக்கு வர, ஒரு சென்டி-ரொமான்ஸ் லுக் கொடுத்து படத்தை முடிக்கிறார் இயக்குனர் .
கோமா ஸ்டேஜில் உள்ள பெண் ஆவியாக வருகிறாள் என்பது நிஜமாகவே வித்தியாசமான சுவாரஸ்யமான் ஐடியாதான் , ஆனால் அதை லாஜிக் இல்லை என்று ஹாலிவுட்டிலேயே கழுவிக் கழுவி ஊத்தி விட்டதால் இந்த இருக்கு ஆனா இல்லை படத்தில், ஆவியாக வரும் திவ்யா செத்துப் போனவள்தான் . கோமா ஸ்டேஜில் இருப்பது டுவின்ஸ் தங்கை காவ்யா என்று ‘வாணி ராணி’ ஓட்டி இருக்கிறார் இயக்குனர் .

ஆனால் திரைக்கதைதான் தறிகெட்டுப் பாய்கிறது. ஆதவனின் நகைச்சுவை எப்போதாவது சிரிக்க வைக்கிறது . முந்தைய படங்கள் பற்றி அறியாதவர்களுக்கு உணர்வுக் குவியலாக வரவேண்டிய காட்சிகள் ஜஸ்ட் லைக் (ஹெவன் இல்லாமல் ) கடந்து போகின்றன.
நாயகன் விவந்த் ஆரம்பக் காட்சிகளில் ஓவர் ஆக்டிங் காட்டினாலும் (உபயம் டைரக்டரோ?) குரல் நடிப்பால் கவனம் கவர்கிறார்.
சும்மா கார்டன் மாதிரி இருக்கிறார் ஈடன் . சற்றே வளர்ந்த திரிஷா போல இருக்கும் இவர் படத்துக்கு பலம். கேரக்டரை உள்வாங்கி நடிப்பதிலும் அக்கறை காட்டுகிறார் . நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் கொடி ஏற்றலாம்.
படம் முழுக்க கொப்பளிக்கும் இளமை இந்தப் படத்தின் பலம் .
இருக்கு ஆனா இல்ல ஆனா இருக்கு ஆனா இல்ல ஆனா இருக்கு ……….. to the infinitive !