
ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேம்ஸ் சார்பில் சந்திரமோகன் தயாரிக்க, தம்பி ராமையாவுடன் பல புதுமுக நாயகன் நாயகிகள் நடிக்க, ஆர்.பார்த்திபன் எழுதி இயக்கி இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். பெயர் போட்டுக்கொள்ளும்படி வந்திருக்கிறதா படம் ? பார்க்கலாம்.
திரைப்பட இயக்குனராக ஆவதற்கு போராடும் ஓர் இளைஞன், தன்னைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வேலைக்குப் போய் சம்பாதிக்கும் மனைவியின் பொருளாதாரத்தின் உதவியோடு, வீட்டிலேயே தனது நண்பர்களுடன் கதை விவாதம் நடத்துகிறான்.
அவர்களில் நெடு நாட்களாக இயக்குனர் ஆகும் முயற்சியிலேயே காலம் கழித்து விட்ட நடுத்தர வயது தம்பி ராமையாவும் ஒருவர். இருபத்தெட்டு வயதாகியும் வசதி இன்மையால் திருமணம் ஆகாத மகள் ஒருத்தி இவருக்கு உண்டு .உடன் இருக்கும் உதவி இயக்குனர் நண்பர்களில் அம்மாவுக்கு மருத்துவம் பார்க்க வசதி இல்லாத இளைஞனும் ஒருவன்.
சுனாமியில் ஊரே அழிந்து உயிர் பிழைத்த ஒரு மனிதனின் கதை, சிங்கள ராணுவத்தான்களால் அநியாயமாக கொல்லப்பட்ட இசைப் பிரியா போன்ற ஒரு பெண்ணின் கதை, திறமை இருந்தும் வேலை கிடைக்காமல் போராடும் ஒரு இளைஞனின் கதை என்று பல கதைகளுக்கான கருக்கள் இவர்கள் வசம் இருந்தாலும், இவைகளுக்கு அப்பாற்பட்டு வித்தியாசமான கதை ஒன்றை உருவாக்க இவர்கள் போராடுகிறார்கள்
இயக்குனரின் வீட்டிலேயே இவர்கள் நடத்தும் கதை விவாதங்களால் பல வசதிக் குறைபாடுகளுக்கு ஆளாகும் அவனது மனைவிக்கு கணவனோடு மனஸ்தாபங்கள் அதிகரிக்கிறது . அது சண்டை , பிரிவு, விவாகரத்து வரை போகிறது.
இந் நிலையில் நடக்கப்போவதை முன் கூட்டியே உள்ளுணர்வு மூலம் சொல்லும் ஒரு பெண், திடீரென ஒரு சந்திப்பின் மூலம் இயக்குனரை விரும்ப ஆரம்பிக்க, அவள் குடும்பத்தில் நிகழும் ஒரு தற்கொலையால் இயக்குனர் குழு போலீஸ் ஸ்டேஷன் வரை போக நேர்கிறது. பின்னால் நிகழ இருப்பதாக அந்த உள்ளுணர்வுப் பெண் சொல்லும் விசயங்கள் நடப்பதற்கும் நடக்காமல் போவதற்கும் சமவாய்ப்பு இருப்பது உணர்த்தப்படுகிறது.

மனைவியுடனான மனஸ்தாபங்கள் , உள்ளுணர்வுப் பெண்ணின் செயல்பாடுகள் இரண்டையும இணைத்து, தனது மனைவிக்கு அந்த உள்ளுணர்வு இருந்தால் எப்படி இருக்கும் என்ற கட்டுமானத்தில் இயக்குனர் இளைஞன் உருவாக்கும் ஒரு கதை சிறப்பாக வருகிறது . அடுத்த நிமிடம் என்ன என்பது தெரியாமல் இருப்பதுதான் வாழ்வின் சுவாரஸ்யம் என்பதுதான் அந்தக் கதையின் சிறப்பம்சம் .
தான் அமைக்கும் திரைக் கதையில் வரும் கணவனும் மனைவியும் பிரிந்து போன நிலையில், கடைசியில் ஒன்று சேர்வார்களா இல்லையா என்பதை சொல்லாமல் ரசிகர்களின் முடிவுக்கே விடுகிறான் அந்த படைப்பாளி
இந்த நிலையில் அந்தக் கதையை கேட்கும் ஒரு தயாரிப்பாளர், “படத்தின் முடிவை நாம் சொல்லாமல் விடுவது சரியாக படவில்லை . எனவே உங்கள் கதையை படமாக்குவேனா இல்லையா என்பதை இரண்டு நாட்களில் சொல்கிறேன்” என்று கூறி விடுகிறார் .
அவரின் முடிவுக்காக காத்து இருக்கும் நிலையில் வறுமை காரணமாக தம்பி ராமையா பாத்திரத்தின் மகள் விஷம் குடிக்கிறாள் . இன்னொருஉதவி இயக்குநனின் அம்மாவின் மருத்துவத்துக்கு பணம் தேவைப் படுகிறது . கர்ப்பமான நிலையில் ‘இனியும உன்னை நம்ப முடியாது’ என்று இயக்குனரின் மனைவியும் பிரிந்து செல்கிறாள் .
தயாரிப்பாளர் சொல்லப் போகும் முடிவை வைத்தே இந்தப் பிரச்னைகள் எல்லாம் தீரும் என்ற நிலையில், அந்த தயாரிப்பாளரிடம் இருந்து போன் வருகிறது . அவர் என்ன பதில் சொன்னார்?
அடுத்த நிமிடம் என்ன என்பது தெரியாமல் இருப்பதுதான் வாழ்வின் சுவாரஸ்யம் என்ற அடிப்படையில் அந்த இயக்குனர் உருவாக்கி இருக்கும் கதையின் தன்மைக்கு ஏற்ப நாம் பார்க்கும் படமும் முடிகிறது .
இதுதான் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் .

அமைப்பு, உள்ளீடு, கதைப் போக்கு, தத்துவார்த்தம் என்று எல்லா விதத்திலும் வித்தியாசமான படமாக விளைந்து இருக்கிறது இந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் .
அர்த்தம், ஆழம் , சீரியஸ் . நகைச்சுவை, கவித்துவம் , “துப்பாக்கியில் ரவை இருக்கா? அப்போ போய் உப்புமா கிண்டி தின்னு ” என்று முதல் படமான ‘புதிய பாதை’ யில் ஆரம்பித்த பார்த்திபனுக்கே உரிய மாற்று சிந்தனை என்று…. எல்லா வகையிலும் யானை பலத்தோடு படத்தை கட்டி ஆள்கிறது பார்த்திபனின் வசனங்கள்.
தமிழ் சினிமா உலகின் கால கால வினோத வில்லங்கங்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உரித்து உப்புக் கண்டம போடும் அதே நேரம், ஆங்காங்கே பழைய தமிழ்த் திரைப்படங்களுக்கும் காலத்தை வென்ற படைப்பாளிகளுக்கும் அவர் செலுத்தும் மரியாதையாக வந்து விழும் பல கருத்துகள் விமர்சனங்கள்….. தமிழ் சினிமா மீதான பார்த்திபனின் கிண்டலுக்கும் காதலுக்கும் ஒரே நேரத்தில் உதாரணங்களாகி நிற்கின்றன.
சந்தோஷ், விஜய்ராம், தினேஷ், லல்லு, அகிலா கிஷோர், மகாலட்சுமி, சாஹித்யா ஜெகன்னாதன் ஆகிய புதுமுகங்களின் நடிப்பு இயல்பாக இருக்கிறது . ஆயினும் காமெடி சீரியஸ் இரண்டு வித நடிப்பிலும் ஆல் ரவுண்டராக வழக்கம் போல் ஜொலிக்கிறார் தம்பி ராமையா.
இவர்களோடு நடிகர்கள் ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, அமலபால் , டாப்சி, பிரகாஷ் ராஜ், சேரன், ஆகியோர் படத்தில் கவுரவத் தோற்றத்திலும் விமல், பரத், சாந்தனு, இனியா , ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஒரு புரமோஷன் பாடல் காட்சியிலும் நடித்துள்ளனர்.
ராஜரத்னத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலமாக அமைந்து காட்சிகளுக்க்குள் ரசிகனை கை பிடித்து அழைத்துப் போகிறது. விஜய் முருகனின் கலை இயக்கமும் அருமை.
தம்பி ராமைய்யாவின் கூப்பாடும் அழுகையும் சினிமாக் கனவுகளில் இருக்கும் ஒவ்வொரு மனிதனையும் உலுக்கி எடுக்கிறது .
கடைசியில் லேசர் கடிகார பிம்பம் சுவற்றில் ‘டிக் டிக்’ அடிக்க, என்ன நடக்குமோ என்ற பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்திய விதத்திலும் படத்துக்கு வரும் கதையின் குணாதிசயத்துக்கு ஏற்றபடி அட்டகாசமான வகையில் படத்தை முடித்த வகையிலும் இயக்குனராக ஜொலிக்கிறார் பார்த்திபன் .
கதை திரைக்கதை வசனம் இயக்கம் …. இயங்கும் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————–
ஆர், பார்த்திபன் , தம்பி ராமையா, ராஜ ரத்னம், ஆர்.கே.விஜய் முருகன்