புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு ,
எந்த சார்பும் இல்லாமல் நடு நிலையில் நின்று சமூக அக்கறை உள்ள ஒரு சாதாரண குடிமகன் எழுதும் கடிதம் .
ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, கார்த்தி, ராஜ்கிரண், லக்ஷ்மி மேனன் , தம்பி ராமையா , சூப்பர் சுப்பராயன் ஆகியோர் நடிக்க , முத்தையா இயக்கி இருக்கும் கொம்பன் படத்தில்….
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி அதை தடை செய்ய நீங்களும் உங்கள் குழுவினரும் முழு மூச்சுடன் போராடியதை கவனித்து வந்தேன் .
அதற்காகவே படத்தை தவறவிடக் கூடாது என்பதால் இன்று காலை பத்திரிக்கையாளர் காட்சியில் படத்தை பார்த்தேன்.
ஒரு திரைப்படம் நல்ல விஷயங்களை சொல்லாவிட்டாலும் கெட்ட விஷயங்களை சொல்லக் கூடாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை . ஆனால் எந்தக் காரணத்துக்காக இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீங்கள் இப்படி போராடினீர்கள் என்பதுதான் கேள்வி . அப்படிப்பட்ட எந்த விஷயமும் இந்தப் படத்தில் இல்லாத நிலையில் !
தென் தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வாழும் மூன்று கிராமங்கள். அந்த மூன்று கிராம மக்களுக்கும் அதிகார ,கவுரவப் போட்டி . ஒரு கிராமத்தை சேர்ந்த கோவக்கார – ஆனால் நியாயத்துக்காக செயல்படும் இரக்கமுள்ள இளைஞன் கொம்பையா பாண்டியன் (கார்த்தி )…. உடன் விதவைத்தாய் கோட்டையம்மாள்.( கோவை சரளா ). தாய்மாமன் ராஜாக்கிளி (தம்பி ராமையா ). உடன் இருக்கும் துரைப்பாண்டி (வேல ராமமூர்த்தி ) உள்ளிட்ட சிலர் .
மற்றொரு கிராமத்தை சேர்ந்த நேர்மையான ஆட்டு வியாபாரி முத்தையா ( ராஜ்கிரண் ) அவரது மகள் பழனி (லட்சுமி மேனன்). இன்னொரு கிராமத்தை சேர்ந்த சில கதாபாத்திரங்கள் . இவர்களுக்குள் வரும் சண்டைகள் சச்சரவுகள்…இவற்றில் ஒரு ஊரைச் சேர்ந்த குண்டன் ராமசாமி (சூப்பர் சுப்பராயன் ) மற்றும் அவனது மகன்கள் மகள் மருமகள்.
மற்ற நபர்களுக்குள் வரும் சண்டை எல்லாம் வஞ்சகம் இல்லாத சண்டைகளாகவே இருக்க, குண்டன் ராம சாமி மட்டும் பதவிக்காக எதையும் செய்யும் குணம் உள்ளவன் .
பழனி மீது கொம்பையாவுக்கு காதல் வந்து பெண் கேட்டு போக, தாயில்லாத தனது மகளை கல்யாணம் செய்து கொள்பவன் நல்லவனாக இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் முத்தையா , கொம்பையா பற்றி அவன் ஊருக்கே வந்து விசாரிக்க, தன்னை பற்றி எல்லோரிடமும் முத்தையா விசாரித்தது கொம்பையாவுக்கு பிடிக்காமல் போகிறது .
கொம்பையா — பழனி கல்யாணம் நடந்தாலும் மாமனாருக்கும் மருமகனுக்கும் ஒத்துக் கொள்ளாமல் போகிறது . மாப்பிள்ளை எப்போதும் வம்பு வழக்கில் சிக்கிக் கொண்டாலும் நியாயத்துக்குதானே பேசுகிறான் என்ற பெருமிதம் மாமனாருக்கு இருந்தாலும் , ஒரு நிலையில் அது மகளின் நிம்மதியான வாழ்வுக்கே பிரச்னையாக போகுமோ என்ற பதட்டத்தில் முதன்முதலாக மருமகனிடம் நேருக்கு நேர் பேச, வாய் வார்த்தை கை கலப்பாகிறது.
மாமனாரின் மண்டையை மருமகன் உடைக்கிறான் . மனம் உடைந்த பழனி தன் அப்பாவுடன் சொந்த ஊருக்கே போக , கொம்பையாவின் அம்மாவும் ‘உன்னை மாதிரி கோபக்காரனிடம் இருப்பதை விட என் மருமகள் கூடவே இருக்கிறேன்’ என்று போய் விடுகிறாள் .
தவறை உணரும் கொம்பையா மனைவி, மாமனார் மற்றும் அம்மாவுடன் சமாதானம் ஆக முடிந்ததா ? இல்லையா ? இந்த நிலையில் கொம்பன் , முத்தையா இருவரையும் அழிக்க நினைக்கும் குண்டன் ராமசாமி மற்றும் அவனது கும்பலின் மிருக வெறி வென்றதா? இல்லையா என்பதே இந்தப் படம் .
இதில் என்ன பிரச்னை இருக்கிறது கிருஷ்ணசாமி அவர்களே !
படத்தில் கொம்பன் குடும்பத்துக்கு வரும் பிரச்னையை விட, இந்தப் படத்தால் அதிக பிரச்னை வரும் என்பது போல எதற்கு இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்?
வெகு ஜன மக்களோடு சம்மந்தப்பட்ட ஒரு வாழ்வியல் விசயத்தை ஒரே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பின்னணியில் அவர்களுக்குள்ளாகவே நடக்கும் சம்பவங்களை வைத்து ஆட்டம் பாட்டம் , சண்டை , நகைச்சுவை , கண்ணீர் , நெகிழ்ச்சி , மகிழ்ச்சி , என்று….. ஒரு குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வணிக ரீதியான படமாக சொல்லி இருப்பதில் உங்களுக்கு என்ன வெறுப்பு டாக்டர் ?
அந்த மக்களின் வாழ்வியல் , பழக்க வழக்கம் , சூழல் , ஆகிய விஷயங்களுடன் உறவுப் பிணைப்புகளை உணர்வுச் சிக்கல்களை வைத்து மண்மணத்தோடு படத்தை மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் முத்தையா . இதில் உங்களுக்கு என்ன பிரச்னை ?
உடம்பில் வீரம் , குணத்தில் ஈரம் , பிரச்னைகள் வரும் போதும் அஞ்சாத உரம் இவற்றை தனது நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி கார்த்தி நடித்துள்ளாரே ? அது உங்களுக்கு பிடிக்கவில்லையா ?
அல்லது நாம் பார்ப்பது சினிமாவில் வரும் கதாபாத்திரமா ? அல்லது நிஜத்தில் நம் கண் முன்னால் நடமாடும் உயிர்ப்பான மனிதனையா ? என்று நமக்கே சந்தேகம் வரும் அளவுக்கு முத்தையா கதாபாத்திரத்தில் நடிப்பாலும் குரலாலும் வாழ்ந்திருக்கிறாரே ராஜ்கிரண் . அது உங்களை முகம் சுளிக்க வைக்கிறதா ?
பல படங்களில் கிராமத்துப் பெண்ணாக நடித்து இருந்தாலும் இந்தப் படத்தில் பழனி என்ற கிராமத்துப் பெண்ணின் கதாபாத்திரத்தில் முத்தையா உலவ விட்டிருக்கும் ஆன்மாவை, சரியாக உணர்ந்து நடித்திருக்கிறாரே லட்சுமி மேனன்….அது உங்களை வெறுக்க வைக்கிறதா ?
வழக்கம் போல சீரியஸ் , நகைச்சுவை இரண்டிலும் கலக்கி இருக்கும் தம்பி ராமையா , கோப வெறி பிடித்த மனிதனாக வில்லன் வேடத்தில் நடித்து ஒரு பார்வையிலேயே அடி வயிற்றைக் கலங்க செய்யும் ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் , நகைச்சுவை பாதி , பாத்திரப் பொருத்தம் மீதி என்று அசத்தி இருக்கும் கோவை சரளா .. இவர்கள் இப்படி தங்கள் பங்களிப்பை சரியாக செய்ததால், உங்களுக்கு ஏதாவது டென்ஷனா டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே ?
எந்த வித பாசாங்கும் பளபளப்பும் இல்லாமல் கதை நிகழும் களத்துக்குள் நாமும் ஒரு அருவக் கதாபாத்திரமாய் நிற்கிறோமோ என்று உணரவைக்கும் அளவுக்கு, மிக அற்புதமான ஒளிப்பதிவால் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறாரே ஒளிப்பதிவாளர் (இயக்குனர் ) வேல்ராஜ் .. அது அவ்வளவு சிறப்பாக வந்திருப்பதில் உங்களுக்கு எதுவும் எரிச்சலா ?
மண் வாசனையின் மகத்துவம் உணரவைக்கும் இசையில் முதன் முதலாக பின்னி எடுத்திருக்கும் ஜி வி பிரகாஷ் குமார், படத்தை சரசர பரபரவென பறக்கச் செய்யும் கே எல் பிரவீனின் படத்தொகுப்பு , நடித்து மிரட்டி இருப்பது மட்டுமின்றி அதிரடி சண்டைக் காட்சிகளாலும் அசத்தி இருக்கும் சூப்பர் சுப்பராயன் .. இவர்கள் தங்கள் தங்கள் வேலையை (மட்டும்) மிக சிறப்பாக செய்து இருப்பது உங்களுக்கு அலர்ஜியாகி விட்டதா ?
தடை செய்ய வேண்டிய அளவுக்கு இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கு டாக்டர் ? ஒருவேளை உலகத்தில் யாரிடமும் இல்லாத ரொம்ப ஸ்பெஷலான டெலஸ்கோப் , மைக்ராஸ்கோப் எதையும் ரகசியமாகக் கண்டு பிடித்து வைத்துக் கொண்டு நீங்கள் மட்டும் பயன்படுத்துகிறீர்களா ?
இந்தப் படத்தின் எந்தக் கருத்து உங்களுக்கு பிடிக்கவில்லை டாக்டர் ?
நல்லவன் அழிஞ்சுறக் கூடாது. கெட்டவன் வாழ்ந்து விடக்கூடாது என்ற படத்தில் சொல்லப்படும் அழுத்தமான வசனம் உங்களைக் கோபப்படுத்துகிறதா ?
‘மாப்பிள்ளைக்கு மாமானாரும் இன்னொரு தந்தைதான். மாமனாருக்கு மருமகனும் ஒரு மகன்தான்’ என்ற கருத்தை நெகிழும்படியாக சொல்லி இருக்கிறார்களே . அதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா?
பெண்கள் கல்யாணம் ஆகிப் புருஷன் வீட்டுக்குப் போய் விட்டால் அப்பாவை அம்போ என விட்டுவிட வேண்டிய அவசியம் இல்லை என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கும் அதே வேளையில்….
கணவனுக்கும் அப்பாவுக்கும் பிரச்னை வரும்போது ஒரு பெண் எப்படி எந்தப் பக்கமும் சார்பின்றி இருவருக்கும் உரிய முக்கியத்துவத்தையும் தர வேண்டும்;கண்டிப்பையும் செய்ய வேண்டும் என்பதை, ஒரு மனோவியல் சிகிச்சை போல அற்புதமாக சொல்லி இருக்கிறாரே இயக்குனர் முத்தையா . அது உங்களுக்கு உறுத்துகிறதா ?
தன்னை அவமானப்படுத்துபவன் முன்பு ஒரு நிஜமான தமிழ்ப் பெண் எப்படி சிங்கம் போல கர்ஜிப்பாள் என்று இந்தப் படம் சொல்கிறதே .. அதில் உங்கள் புதிய தமிழகத்துக்கு உடன்பாடு இல்லையா ?
ஊருக்கு ஊர் வெட்டியாக பரபரப்பை ஏற்படுத்தி பிரச்னையை உருவாக்குவதை விட, நம்மையே நம்பி இருக்கும் உறவுகளுக்கு ஒரு மனிதன் உண்மையாக இருக்க வேண்டும் என்று, இந்தப் படம் ஒரு கருத்துருவாக்கத்தை தருகிறதே … அதனால் ‘மேன் பவர்’ குறைந்து விடும் என்பது உங்கள் பயமா ?
ஏன் டாக்டர் இப்படி ?
இல்லை …
மாமனாரின் உயர்ந்த குணத்தை மருமகன் கதையில் உணர்ந்த பிறகு, எதாவது ஒரு காட்சியில் மாமனாரின் கம்பீர வீரத்தை அவருக்கே தெரியாமல் பார்க்கும் மருமகன் , இப்படிப்பட்ட நிஜமான சிங்கத்தையா நாம் பலமுறை அவமானப்படுத்தி இருக்கிறோம் என்று மலைத்துப் போய் குற்ற உணர்ச்சியில் வருந்தும்படி ஒரு கதைப்போக்கு இருந்திருந்தால்…..
படம் இன்னும் இன்னும் மிக மிக சிறப்பாக வந்திருக்குமே . அதை செய்யாமல் விட்டு விட்டார்களே என்ற ஆக்கப் பூர்வமான ஆதங்கக் கோபத்தில்தான் படத்துக்கு தடை கேட்டீர்களோ ? அப்படியானால் உங்களை மனப்பூர்வமாகப் பாராட்டலாம் டாக்டர்.
இத்தனை நாள் படத் தை தடை செய்ய வேண்டும் என்று பிரச்னை இறங்கி வேண்டிய ‘ வெளிச்சம்’ பெற்றுக் கொண்ட பிறகு, இப்போது நீங்கள் புது வாதமாக ” எந்த ஒரு சமூகத்தையும் மிக உயர்வாக காட்டக் கூடாது . அப்படிக் காட்டினால் அதை தடை செய்ய வேண்டும் ” என்று கூற ஆரம்பித்து இருக்கிறீர்களாம்.
எனில் நாளைக்கு தமிழர்களின் பெருமையை கொண்டாடி தமிழர்களோ… தெலுங்கர்களை உயர்வாகக் காட்டி தெலுங்கர்களோ படம் எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால் தடை செய்ய வேண்டும் என்று யாராவது டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டால் உங்களுக்கு ஒகே வா டாக்டர் ? எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை .
அட .. அதை விடுங்கள் .
புதிய தமிழம் கட்சியை உயர்வாகச் சொல்லி நீங்கள் பேசக் கூடாது . பிரச்சாரம் செய்யக் கூடாது என்று யாராவது சொன்னால் மீறி நீங்கள் பேசும்போது உங்கள் கட்சிக்கு தடை கேட்டால் என்னாவது ? நாங்கள் அதை எல்லாம் ஆதரிக்கவே மாட்டோம் டாக்டர்
டாக்டர் என்பவர் நோயைக் குணப்படுத்துபவராக இருக்க வேண்டும் . நோய்களை உருவாக்குபவராக இருக்கக் கூடாது . அர்த்தமில்லாத பரபரப்புகளும் அவற்றால் ஏற்படும் சலசலப்புகளும் கூட ஒரு நோய்தான் .
சராசரிக்கும் மேற்பட்ட படங்களில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்தவர்களை மகுடம் சூடும் கலைஞர்கள் என்ற அடையாளத்தோடு சிறப்பிப்பது எனது விமர்சனத்தில் ஒரு பகுதி .
இதோ .. அதை இப்போது உங்களிடமே அறிவிக்கிறேன் . இந்தப் படத்தின் ,
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————
ராஜ்கிரண், கார்த்தி, முத்தையா , வேல்ராஜ், ஜி வி பிரகாஷ் குமார், சூப்பர் சுப்பராயன் , கே.எல். பிரவீண், லக்ஷ்மி மேனன்,இவர்களுடன் கே .ஈ. ஞானவேல் ராஜா .
நன்றி டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே !
என்றும் உண்மையுடன்
சு.செந்தில் குமரன் .