2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அக்ராஸ் தி ஹால் (Across the Hall) என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தை 2009 ஆண்டு அதே அமெரிக்காவில் அதே பெயரில் படமாக எடுத்தார்கள்.
தன் ஜோடி மீது ஒருவனுக்கு சந்தேகம் . தனது நண்பனிடம் சொல்கிறான் . பதட்டப்படாமல் விசாரிக்க சொல்கிறான் நண்பன் . விமானப் பயணம் செல்லப் போவதாக சொல்லி விட்டு கிளம்பிய அவள் உள்ளூரில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருப்பது தெரிய வருகிறது .
அதே ஹோட்டலில் அதே மாடியில் அவள் அறைக்கு எதிர் அறையில் ரூம் எடுத்து அவளை கண்காணிக்கிறான் . அவளோடு தவறு செய்யும் இளைஞன் வேறு யாருமல்ல. இவன் ஆலோசனை கேட்கும் அந்த நண்பனேதான் .
அது மட்டுமல்ல அவளோடு தனது நண்பனே கள்ள உறவு வைத்திருப்பதும் இவனுக்கு முன்னரே தெரியும் . துரோகம் செய்யும் வருங்கால மனைவியையும் நண்பனையும் எப்படி திட்டமிட்டு மாட்டிவிட்டு பழி வாங்குகிறான் என்பதே அந்தப் படம்
இந்தப் படத்தின் கதையை முக்கால்வாசி சுட்டு , கடமைக்கு சிற்சில மாற்றங்களை செய்து, ஒரு வருடம் முன்பு தமிழில் உன்னோடு ஒரு நாள் என்ற படம் வந்தது.
அக்ராஸ் தி ஹால் படத்தை காட்சிக்கு காட்சி ஃபிரேமுக்கு ஃபிரேம் அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்து, ஆறு மாதம் முன்பு நேரெதிர் என்று ஒரு படம் வந்தது.
இப்போது அந்த அக்ராஸ் தி ஹால் கதையை அப்படியே சுட்டு கேவலமான மேக்கிங்கில் வந்து இருக்கும் படம்தான் கபடம் .
இன்னும் எத்தனை தடவைதான்யா அந்தப் படத்தை சுடுவீங்க ?
விட்ருங்கப்பா .. பாவம்ல அந்தப் படம் ?
அட,, ஒரு இன்ஸ்பிரேஷன் .. ஒரு ஃபீல் ல…. எந்தப் படத்தின் கதையாலாவது தூண்டப்பட்டு, ஒரு படம் பண்ணா பரவால்ல .
ஆனா இப்படியெல்லாம் ஜெராக்ஸ் காப்பியை விட சிறப்பாக அடுத்தவன் படைப்பை அப்படியே காப்பி அடிச்சுட்டு படம் எடுத்துட்டு ..
அப்புறம் ”திருட்டு விசிடி பாக்கறவன் பல்லை உடைக்கணும் . எடுக்கறவன் இடுப்பை உடைக்கணும்’என்றெல்லாம் பேசுவதில் அர்த்தம் இல்லை .
அக்ராஸ் தி ஹால் படத்தோட புரடியூசர் , டைரக்டர் இங்க வந்தா யாரோட எதை எதை எல்லாம் உடைக்க அவங்களுக்கு நியாயம் இருக்குன்னு யோசிச்சு பாக்கணும் .
இந்த லட்சணத்தில் இந்தக் கபடம் படத்துக்கு விலாவாரியாக விமர்சனம் வேறு வேண்டுமா என்ன?
கபடம்… கள்ளம் !