ஜெய்,நஸ்ரியா இணையராக நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரனின்தயாரிப்பில் அனீஸ் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வெளிவந்திருக்கும் படம் திருமணம் எனும் நிக்காஹ் .
நிக்காஹ் நிக்குமா நிக்காதா ? பார்ப்போம்
குடும்ப நிகழ்ச்சிக்காக அவசரமாக கோவை போக வேண்டிய சென்னையைச் சேர்ந்த ஐயங்கார் பையன் ராகவன் (ஜெய்), பிளாக்கில் ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து பிழைக்கும் மயில்சாமி மூலம் அபூபக்கர் என்ற பெயரில் பயணிக்கிறான். அலுவலக விசயமாக அவசரமாக கோவை போகும் நிலைக்கு தள்ளப்படும் ஐயங்கார் பெண் விஷ்ணுபிரியா(நஸ்ரியா) ஆயிஷா என்ற அலுவலக தோழியின் டிக்கெட்டில் அதே ரயிலில் பயணிக்கிறாள்.
ரயில் பயணத்தில் ஈர்ப்பும் அப்புறம் சந்திப்புகளும் நிகழ, இருவருமே எதிராளியை உண்மையான முஸ்லிம் என்று நம்பி தானும் முஸ்லிம் என்றே நடிக்கிறார்கள். இருவருமே முஸ்லிம் மத கலாச்சார பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டு வந்து பேசி, நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். விஷ்ணு பிரியாவுக்கு அலுவலக தோழி ஆயிஷா இருப்பதால் பிரச்னை இல்லை .
ஆனால் ராகவன் ஒரு தீவிர உருது முஸ்லீமிடம் “நான் ஒரு இந்து – முஸ்லீம் கலப்பு மதப் பிள்ளை. . இனி முஸ்லீமாக வாழ விரும்புகிறேன்” என்று கூறி , விஷ்ணு பிரியாவை மேற்கொண்டு நம்பவைப்பதற்காக முஸ்லீம் கலாச்சார விசயங்களை அறிகிறான். ஆனால் அந்தப் பெரியவரின் மகள் (ஹெபா படேல்) ராகவன் சொல்வது உண்மை என்று நம்பி அவனை காதலிக்கிறாள் . ஆரம்பம் முதலே அந்தப் பெரியவரின் சகோதரியின் கோபக்கார மகனுக்கு ராகவன் வரவு பிடிக்கவில்லை.
ஒரு நிலையில் ராகவன் விஷ்ணுபிரியா இருவருக்குமே ஒரே சமயத்தில் தாங்கள் இருவருமே முஸ்லீம் இல்லை என்ற உண்மை புரிகிறது. இப்போது அவர்கள் அவர்களுக்கே யாரோ போல் தெரிகிறார்கள். இந்த நேரத்தில் ராகவன் என்கிற அபூபக்கர் இன்னொரு பெண்ணை காதலிப்பதை அறிந்த அந்த முஸ்லிம் பெண் மணம் உடைய , கொந்தளிக்கும் அந்த கோபக்கார இளைஞன் கத்தி கபடாவுடன் ராகவனை போட்டுத்தள்ள கிளம்ப .. அப்புறம் என்ன ஆனது என்பதுதான் திருமணம் என்னும் நிக்காஹ் .
சும்மா சொல்லக் கூடாது . இவ்வளவு டீடெய்லிங் ஆக ஒரு படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. படத்தில் ஒவ்வொரு விசயத்தையும் நல்ல விவரணை கொடுத்து அழுத்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அனீஸ். அதே போல இந்து முஸ்லீம் கலாச்சார விசயங்களை எல்லாம் அழகாக கூர்ந்து கவனித்து படத்தில் கொண்டு வந்திருக்கிறார். பொதுவாக எல்லாரும் இப்ராஹீம் – ஆப்ரஹாம் என்ற பெயரில் ஆரம்பித்து முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை பற்றிதான் பேசுவார்கள்
ஆனால் இந்து மதத்தில் உள்ள பரமாத்மா ஜீவாத்மா தத்துவமும் இஸ்லாமிய மதத்தில் உள்ள டுயலிசமும் அடிப்படையில் ஒன்றே என்று சொல்வது முதற்கொண்டு பல விசயங்களில் ஒரு பெரிய மத ஆராய்ச்சியே நடத்தி இருக்கிறார் இயக்குனர் . கூர்ந்து கவனித்தால் கொஞ்சம் புத்திசாலித்தனமான வில்லங்கம் தெரிந்தாலும் இயல்பாகப் பார்க்கையில் மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்திருக்கிற படிமம் அருமையாக எழுகிறது.
படம் ஆரம்பித்து அரை மணி நேரம்தான் ஆனது போல இருக்கிறது. ஆனால் அதற்குள் ஒரு மணி நேரம் பத்து நிமிடம் ஓடி இடைவேளை வந்து விடுகிறது. அவ்வளவு சுவையான சுவாரஸ்யமான பரபரப்பான முதல் பாதி.! (இரண்டாம் பாதியிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை ). காரணம் காசி விஸ்வநாதனின் அற்புதமான படத் தொகுப்பு . (குறிப்பாக அந்த சண்டைக் காட்சி !)
படத்தில் லோகநாதனின் ஒளிப்பதிவு, கிராபோர்டு தர்மேந்திராவின் கலை இயக்கம் , வனிதா சீனிவாசனின் உடைகள் , மூன்றும் படத்தை கண்ணில் ஒத்திக் கொள்ளும்படியாக, அழகியல் திருவிழாவாக மாற்றித் தருகின்றன.
ஜெய் கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்திருக்கிறார் காதல், சோகம், சுறுசுறுப்பு எல்லா உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். நஸ்ரியா துள்ளலும் துடிப்புமாக பண்பட்ட நடிப்பை தருகிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களிலும் சிக்சர் அடிக்கிறார் .
ஹெபா படேல் அழகாலும் நடிப்பாலும் கேரக்டராலும் மெல்லத் திறந்தது கதவு அமலாவை ஞாபகப்படுத்துகிறார் . இன்னும் கொஞ்சம் அந்த பொண்ணைக் காட்டுங்கப்பா என்று ஏங்குகிறது மனசு .
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் இனிமை . பின்னணி இசை ஒகே .
இப்படி பாராட்ட பலப்பல விஷயங்கள் இருந்தும் கடைசி பதினைந்து நிமிடத்தில்தான் ஏகப்பட்ட குழப்பம்.
இதுவரை விஷ்ணுபிரியாவை ஆயிஷாக ராகவனும் ராகவனை அபூபக்கராக விஷ்ணுபிரியாவும் உணர்ந்திருந்த நிலையில் ‘புதிய விஷ்ணுபிரியா’ ராகவனுக்கும் ‘புதிய ராகவன்’ விஷ்ணுபிரியாவுக்கும் அந்நியமாகத் தெரிவதாக ஒரு கதையை இயக்குனர் சொல்கிறார் . இதன் வளர்ச்சியாக இருவருமே முஸ்லிமாக மாறி திருமணம் செய்து கொள்வது போன்ற ஒரு கிளைமாக்சுக்கு இயக்குனர் முயன்று இருப்பது புரிகிறது .
ஆனால் மாறிய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக அந்த கிளைமாக்சை இயக்குனர் எடுக்க முடியாமல் போய்விட்டது என்பது புரிகிறது. அப்படிப் பார்த்தாலும் அந்த கிளைமாக்சுக்கு உரிய நியாயமான திரைக்கதையை இயக்குனர் அமைக்கவில்லை என்பதே உண்மை .
அந்த கிளைமாக்சுக்கு முயன்று இருக்க வேண்டும் எனில், விஷ்ணுபிரியாவை காட்டும்போது எல்லாம் ஆயிஷவாகவே காட்டி இருக்க வேண்டும். அதுபோல ராகவனை அபூபக்கராகவே காட்டி இருக்க வேண்டும். அவர்கள் உண்மையில் முஸ்லீம்கள் இல்லை என்பதை விசயமாக மட்டுமே சொல்லி இருக்க வேண்டும்.
விஷ்ணு பிரியாவை விஷ்ணுபிர்யாவின் வீட்டுச் சூழலிலும் ராகவனை அவனது வீட்டுச் சூழலிலும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்கு பின்புதான் காட்சிப்படுத்தி இருக்க வேண்டும் . அவர்களை அவர்களது குடும்ப சூழலில் பார்ப்பது ரசிகர்களுக்கே புதிதாக, விநோதமாக, ஒரு மாதிரியாக இருக்கும்படி ஒரு கட்டத்தில் கதையைக் கொண்டு போயிருக்க வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் ஏற்படும் அந்த வித்தியாச உணர்வு ரசிகனுக்கும் ஏற்படும்
அதை விட்டு விட்டு ஆரம்பம் முதலே ராகவன் விஷ்ணுபிரியா இவர்களின் ஐயங்கார் வீட்டு சூழலையும் அட்டகாசமாக காட்டிக் கொண்டே வருகிறார் இயக்குனர். அதனால் இருவரும் நிஜமான முஸ்லிம் இல்லை என்பது இருவருக்கும் தெரியும்போது அவர்களுக்கு வருவதாக இயக்குனர் கூறும் உறுத்தல் படம் பார்க்கும் ரசிகனுக்கு வரவே இல்லை.
எனவே அங்கேயே அவர் எடுக்க நினைத்த கிளைமாக்ஸ் அர்த்தமற்றுப் போய்விட்டது.
தவிர காரணங்கள் பொய்யாக இருந்தாலும் காதல் உண்மை எனும் பட்சத்தில் அதுவும் இரண்டு வீட்டாருமே வேற்று மத மாப்பிள்ளையை ஏற்கமாட்டார்ககுள் எனும் பொது அவர்கள் இருவரும் முஸ்லீம்கள் இல்லை என்பதும் இருவருமே ஐயங்கார்கள் என்பதும் சந்தோசம் தரும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் . இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். அப்படி இருக்க அந்த இன்ப அதிர்ச்சி இந்த இருவருக்கும் உறுத்தலாக இருந்தது என்று கதை சொல்லி இருப்பது கத்துக்குட்டித்தனம் . அரைவேக்காட்டுத்தனம்.எனவே எந்த வகையிலும் படத்தின் கடைசி பகுதி இந்த படத்துக்கு ஏற்றதாக அமையாமல் போனது வருத்தமே!
சரி..இந்தக் கதையை எப்படி சொல்லி இருக்கலாம்?
இருவருமே முஸ்லிம் என்று முதலில் சொல்லி அப்புறம் நாயகன் முஸ்லிம் இல்லை என்று மட்டும் சொல்லி, பெண்ணுக்கு உண்மை தெரியும்போது என்ன ஆகுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தி, அப்புறம் அவளும் முஸ்லிம் இல்லை என்று சொல்லி….
ஆனால் இதுவரை இவர்கள் இப்படி பொய் சொன்னபோது நடந்த ஒவ்வொரு சிறு சிறு சம்பவங்களும் செயல்களும் பூதாகரமாக உருவெடுக்க வேறொரு களத்தில் தளத்தில் கதை பயணித்து நாட்டையே நல்லவிதமாக திரும்பிப் பார்க்க வைத்திருக்க வேண்டிய படம் இது . இயக்குனரின் உள்ளார்ந்த மதப்பற்று படத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டது .
எனவே …
திருமணம் எனும் நிக்கா…. அழகான முக்கால் கிணறு
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————
மு.காசி விஸ்வநாதன், லோகநாதன், நஸ்ரியா, ஜெய்,கிராபோர்டு, தர்மேந்திரா, வனிதா சீனிவாசன் ,