
நிகழும் சம்பவங்களால் ஒரு கொலைகாரன் கலைக்காரன் ஆனான் . ஒரு கலைஞன் தாதா ஆனான்.
குரூப் கம்பெனி எஸ்.கதிரேசன் தயாரிக்க, சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் பீட்சா புகழ் கார்த்திக் சுப்புராஜ் தனது இரண்டாவது படமாக இயக்கி இருக்கும் படமான ஜிகிர்தண்டாவின் ஒன்லைன் இதுதான். இந்தப் படம் ஒரு வித்தியாசமான ரசனை அனுபவம் என்பதில் சந்தேகம் இல்லை.
குறும்படப் போட்டி ஒன்றில் ஒரு அராத்து டைரக்டரால் (நாசர்) அநியாயமாகப் புறக்கணிக்கப்படும் வளரும் திரைப்பட இயக்குனரான கார்த்திக் சுப்பிரமணிக்கு(சித்தார்த்) அந்த டைரக்டரைப் பிடிக்காத ஒரு தயாரிப்பாளர் (நரேன்) படம் தருவதாக வாக்களிக்கிறார். அவருக்காக ஒரு வித்தியாசமான ரியலான கேங்ஸ்டர் கதையை எழுத விரும்பும் கார்த்திக், ஒரு நிஜ தாதா பற்றி அறிந்து கதை எழுத முடிவு செய்து மதுரைக்கு வருகிறான் . மதுரையையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சேது என்ற தாதாவை (பாபி சிம்ஹா) தேர்ந்தெடுத்து அவனைப் பற்றிய தகவல்களை தனது மதுரைக்கார நண்பன் ஊரணி (கருணாகரன்) மூலம் சேகரிக்கிறான்.

தன்னைப் பற்றி எழுதிய ஒரு பத்திரிக்கையாளரை சேது, கரும்புக் காட்டில் போட்டு பெட்ரோல் ஊறி சருகொடு சருகாக எரித்துக் கொல்வது முதற்கொண்டு பல விசயங்களை சேகரிக்கிறான் . சேதுவுக்கு சோறு சமைத்துப் போடும் பெண்மணியின் (அம்பிகா) மகளும் ஜவுளிக் கடையில் புடவை திருடும் பெண்ணுமான கயல் (லக்ஷ்மி மேனன் ) கார்த்திக்கை காதலிக்கிறாள்.
தன் கூட்டத்தில் இருந்து கொண்டே தனக்கு எதிராக செயல்படும் ஒருவனை பிடிக்க நினைக்கும் சேது, அதற்கு ஏற்ப தனது தொழில் எதிரி ஒருவனை தீர்த்துக் கட்ட திட்டம் போட, அதை சேதுவின் ‘கறுப்பாடு’ அடியாள் அந்த தொழில் எதிரிக்கே போட்டுக் கொடுக்க, அந்த அடியாளை முன்பே நண்பனாக்கிக் கொண்ட கார்த்திக், ரகசிய டிரான்ஸ்மீட்டர் கருவி மூலம், ‘சம்பவ’ இடத்தில் நடக்கும் நிகழ்வுகளை லைவ் ஆக கேட்கிறான். தனக்கு எதிரான அடியாளை கண்டு பிடிப்பதற்காகவே தொழில் எதிரிக்கு குறி வைத்த சேது தனது திட்டத்தில் வென்று, துரோக அடியாள் மற்றும் தொழில் எதிரி இருவரையும் சுட்டுக் கொல்கிறான்.
அதே நேரத்தில் துரோக அடியாள் வைத்திருந்த கேமராவுக்குள் பொருத்தப்பட்ட டிரான்ஸ்மீட்டர் கருவியை கண்டு பிடித்து , நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை யாரோ ஒட்டுக் கேட்பதை உணர்ந்த சேது , கார்த்திக்கையும் அவனது நண்பனையும் வளைத்து அவர்களை போலீஸ் ஆட்கள் அல்லது தன்னை கொலை செய்ய முயலும் எதிரணி ஆட்கள் என்று முடிவு செய்து போட்டுத்தள்ள துப்பாக்கியை உயர்த்திச் சுட , அங்கே இடைவேளை .
அதன் பின்னர் நடக்கும் எதிர்பாராத விஷயங்கள், நகைச்சுவையும் சீரியசுமான நிகழ்வுகள் , குணாதிசய மாற்றங்கள், காதல் குழப்பங்கள் கடைசியில் மாறுபட்ட சம்பவங்கள் , புதிய அனுபவம் தரும் சில காட்சிகள் என்று முற்றிலும் எதிர்பாராத படமாக வந்திருக்கிறது ஜிகிர்தண்டா .

முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை காட்சியமைப்பு , பின்புலம் , (மதுரைக்) களம், உத்தி என்று பல வகையிலும் படத்தை மிக சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். மதுரை நேட்டிவிட்டி படத்தில் அசத்தலாக வந்திருக்கிறது.
இரண்டாம் பகுதியில் வரும் எதிர்பாராத திருப்பங்கள், வேறு பாதையில் பயணிக்கும் திரைக்கதை , நெகிழ்வான கதாபாத்திரங்கள், காட்சிகள், முடிவில் இருக்கும் ஒரு நாவல்டி எல்லாம் அருமை .
லாஜிக் இல்லை என்றாலும் கதாபாத்திரங்களின் வாழ்வியலை மிக அழுத்தமாகப் பதிவு செய்து பாராட்ட வைக்கிறார் இயக்குனர்.
இதுவரை இது போன்ற படங்களுக்கு வழங்கப்பட்ட பின்னணி இசையில் இருந்து முற்றிலும் வேறு பட்டு நவீன மேற்கத்திய பாணி பின்னணி இசையை அட்டகாசமாகப் பொருத்தி பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். கவேமிக் யு ஆரியின் ஒளிப்பதிவு படத்துக்கு தேவையான சூழலையும் மன நிலையையும் பக்காவாகக் கொண்டு வந்திருக்கிறது. விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும் படத்தின் ஓட்டத்துக்கு பேருதவி புரிந்திருக்கிறது.
தண்ணி இல்லாத கிணற்றுக்குள் தண்ணி பார்ட்டி வைப்பது போன்ற இயக்குனரின் வித்தியாசமான கற்பனையை சிறப்பாக்கி சிறப்புப் பெறுகிறது ராஜுவின் கலை இயக்கம் . அந்த காட்சிகளில் ஒரிஜினல் கிணற்றையும் கிணறு செட்டையும் அழகாக இணைத்ததில் இயக்குனரின் ஃபிரேமிங் , எடிட்டரின் தொகுப்பு, கலை இயக்குனரின் வேலை மூன்றும் சபாஷ் போட வைக்கிறது.

கார்த்திக் சுப்பிரமணியன் கதாபாத்திரத்தில் சித்தார்த் இயல்பாக பொருந்தி நடித்து இருக்கிறார்.
லக்ஷ்மி மேனனுக்கு படத்தில் வேலை குறைவு. எனினும் செய் நேர்த்தி இருக்கிறது .
ஆயினும் கொடூர தாதாவாக , திடீர் ஹீரோவாக, நெகிழும் மனிதனாக, சூப்பராக நடித்து படம் முழுக்க வியாபித்து இருப்பவர் பாபி சிம்ஹாதான் .
இது வரையிலான பாபி சிம்ஹாவின் சினிமா பயணத்தில் ஜிகர்தண்டா அதி முக்கியமான படம் . வாழ்த்துகள் பாபி சிம்ஹா .
கடைசிக் காட்சிகளில் சித்தார்த் சிம்ஹா இருவருமே பட்டையைக் கிளப்புகிறார்கள் .
எல்லாவற்றுக்கும் பின்னணியாக சிறந்த படைப்பாளியாக நிமிர்ந்து நிற்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
(படத்தில் ஹீரோ பெயர் கார்த்திக் சுப்பிரமணி . சுப்பிரமணிக்கும் சுப்புராஜுக்கும் பெரிய அர்த்த வித்தியாசமில்லை . இது உங்க சொந்தக் கதையா கார்த்திக் சுப்புராஜ் ?)
சற்றும் எதிர்பார்க்க முடியாத முற்றிலும் வித்தியாசமான படம் இது .
ஜிகர்தண்டா … நாக்கு சுழற்றும் ருசி
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————-