விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி , வி டி வி கணேஷ், யோகி பாபு, தலைவாசல் விஜய், இளவரசு, சுதா நடிப்பில் அறிமுக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் படம்.
குடும்ப முன்னேற்றத்துக்காக மலேசியாவில் பல ஆண்டுகள் உழைத்து முன்னேறினாலும் அதனால் திருமணம் தள்ளிப் போனாலும் , பார்த்த உடன் மனம் கவரும் பெண்ணைத்தான் மணம் செய்து கொள்வேன் என்று காத்திருக்கும் நபருக்கு ( விஜய் ஆண்டனி ),
ஐ டி கம்பெனியில் வேலை செய்வதாகப் பொய் சொல்லி விட்டு சென்னையில் சினிமா ஹீரோயினாக முயற்சி செய்கிற- நண்பர்களோடு சேர்ந்து தம் தண்ணி என்று வாழும் – பெண்ணைப் (மிருணாளினி ரவி) பார்த்துக் காதல் வருகிறது .
கல்யாணமும் நடக்க, தனது டைரக்டர் , கேமரா மேன் மற்றும் உதவி இயக்குன நண்பர்களோடு சேர்ந்து அந்தப் பெண் சென்னையில் கணவனோடான வீட்டில் தன் விருப்பப்படி வாழ,
காதலால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் கணவன் , ஒரு நிலையில் தன்னை வெறுக்கும் மனைவியின் ஆசைப்படி ஒரு படமும் தயாரிக்க முன்வர,
முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் மேலும் கீழும் வேறு பல சம்பவங்கள் கிளைக்கதைகள் கொத்துக் கொத்தாய் குலைகுலையாய்க் காய்த்துத் தொங்க , நடந்தது என்ன என்பதே படம்.
தனக்கே உரிய பாணியில் மென்மையாக விஜய் ஆண்டனி வருகிறார். பேசுகிறார் நடிக்கிறார் .
மிருணாளினி நன்றாக நடித்து இருந்தாலும் சற்றும் நியாயம் லாஜிக் யதார்த்தம் இல்லாமல் படைக்கப்பட்டு இருக்கும் கேரக்டரால் பலவீனம் அடைகிறது அந்த நடிப்பு .
ஃபரூக் பாஷாவின் ஒளிப்பதிவு அழகாகவும் காட்சிகளில் உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.
படத்தின் பெரும்பலம் பரத் தனசேகரின் இசை .. முக்கியமாக பின்னணி இசை .
ஷாருக் கான் நடித்த இந்திப் படமான ராப் னே பனா தி ஜோடி பெரும்பங்கு , கொஞ்சம் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களை எடுத்துக் கொண்டு பக்குவமோ யதார்த்தமோ ஈர்ப்போ இல்லாத திரைக்கதை வசனத்தால் நிரப்பி திணற அடிக்கிறார்கள் .
அதனால் சில நல்ல திருப்பங்கள் கூட வலு இழக்கிறது . அப்படி வரும் நல்ல திருப்பங்களைக் கூட கையாண்டதில் அதீத குழந்தைத்தனம் .
மொத்தத்தில் ரோமியோ….. தேவதாஸ் .