‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி !

‘ஸரோமி மூவி கார்லேண்டு’ நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.
 
ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா
 
மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர்  நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு  இசையமைத்துள்ளார். 
 
 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது, “சென்னை போன்ற பெரிய நகரங்களில்
 
அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
 
அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.
 
படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போன்று இருக்கிறதே என்கிற உணர்வு நிச்சயம் ஏற்படும்.
 
இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டன் படத்தை  சொன்ன நேரத்தில் எடுத்துக்கொடுத்துள்ளார்.
 
அவரை தயாரிப்பாளரின் இயக்குனர் என  உறுதியாக சொல்வேன்” என்றார்.  
 
முக்கிய வேடத்தில் நடித்துள்ள அப்புக்குட்டி பேசும்போது, “இதில் பள்ளி செல்லும் குழந்தைக்குத் தந்தையாக நடித்துள்ளேன்.
 
ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை இந்தப் படம் அழகாகச் சொல்கிறது.
 
இக்கட்டான நேரத்தில் ஒரு மனிதன் எந்த மாதிரியான முடிவை எடுக்கிறான் என்பதை இந்தப் படம் விறுவிறுப்பாகச் சொல்கிறது” என்றார். 
 
கில்டு சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “ஒரு பெரிய ஹீரோவின் படத்திற்கு 3000 தியேட்டர்கள் கிடைக்கின்றன.
 
ஆனால் ஒரு சின்ன படத்திற்கு 3 தியேட்டர்கள் தான் கிடைக்கின்றன இதுதான் இன்றைய சினிமாவின் அவல நிலை.
 
இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம்  நான் பேசி உள்ளேன். பெரிய படத்  தயாரிப்பாளர்களுக்கு, 
 
சிறிய பட தயாரிப்பாளர்களின் வலி தெரிய வேண்டும். அதை உணர்ந்து மற்றவர்களுக்கும் அவர்கள் வழி விட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
 
கன்னடத்தில் படம் எடுத்தால் அரசாங்க 10 லட்சம் தருகிறது.. அதேபோல இங்கேயும் நிச்சயமாக சினிமாவை காப்பாற்றும் ஒரு அரசாங்கம் வரும்.
 
இந்த அரசாங்கம் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்” என்றார் உணர்ச்சி பொங்க.
 
நடிகர் ஆரி பேசும்போது, ‘இந்த படத்தின் தயாரிப்பாளர் தங்கப்பாண்டி இயக்குனரைப் பற்றி பேசும்போது,
 
தயாரிப்பாளருக்கான இயக்குனர் என்று சொன்னாரே அதுதான் இந்த படத்தின் முதல் வெற்றி.
 
பெரிய படங்களின் விழாக்களுக்கு செல்வதை விட, இதுபோன்ற சின்ன படங்களை கைதூக்கி விடுவதற்கு நான் தயாராக உள்ளேன்.
 
அதனால் என்னை எப்போதும் தாராளமாக அழைக்கலாம். எப்போதுமே சமூக வேலைகள் என சுற்றி வருவதால்
 
பட வாய்ப்புகள் எதுவும் இல்லையோ  எனக் கேட்கும் அன்பான நண்பர்களுக்கு, தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
 
‘ரூட்டு’ என்கிற வார்த்தைக்கு எல்லாருமே ஆளுக்கு ஒரு விளக்கம் சொன்னார்கள். நானும் ஒரு ரூட்டு போட்டு தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.
 
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே எம்.ஜி.ஆர் தான். இப்போது எல்லாருமே எம்.ஜி.ஆர் ஆக வேண்டும் நினைப்பதால்தான், பல பிரச்சனைகள் உருவாகின்றன.
 
  சினிமாவில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன.  ஆனால் சினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வரத் துடிக்கிறார்கள் எனப் பலரும் கேட்கிறார்கள்.
 
இப்போது  சினிமாக்காரர்களை ஒழுங்காக சினிமா எடுக்க  விடவில்லை என்பதால்தான் ,
 
அவர்கள் அரசியலைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் வேலையைச் செய்ய குறுக்கே நிற்காதீர்கள்..
 
இந்த படத்தை இயக்குவதற்கு டைரக்டர் போட்ட ரூட்டு மாதிரி, இந்த படத்தின் தயாரிப்பாளர் இனி பட ரிலீசுக்காக தியேட்டர்களுக்கு ரூட்டு போட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
 
தயாரிப்பாளர் சங்கம் இந்த சிறிய படங்களுக்கும்,  படத்தை ரிலீஸ் செய்கிறவர்களுக்கும்  நல்ல முறையில் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
 
பணம் உள்ளவர்கள் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றால் மற்றவர்களெல்லாம் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகிவிடும்.
 
சமீபத்தில் ஒரு நாளிதழில் ஒரு நடிகர் நடிக்கும் வெப் சீரியஸ் தொடருக்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்தார்கள்.
 
ஆனால் அதுவே தங்களது திரைப்படங்களுக்கு, தயாரிப்பாளர்கள் செலவழிக்க தயாராக இருந்தும் கூட,
 
அப்படி விளம்பரம் கொடுக்க கூடாது என நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இனி வரும் நாட்களில்
 
அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் போன்றவை எல்லாம் இப்படி சினிமாவிற்கு ஊடுருவ ஆரம்பித்து விடும்.
 
இதனால் சிறிய படங்கள் மேலும் தற்கொலைக்கு நிகரான ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
 
இதனால் சின்ன படங்கள் தியேட்டருக்கு வர முடியாத ஒரு அபாயகரமான சூழல் ஏற்படும்.
 
சினிமாவில் எல்லா இடங்களிலும் இரண்டு அணியாக இருக்கிறோம். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவம் அனைவரும் அறிந்ததுதான்..
 
அதை சரி என சொல்லவில்லை. தற்போது விஷால் அந்த நிகழ்வுக்கு காரணமானவர்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
 
இந்த இடத்தில்  விஷாலுக்கு  நாம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் தவறுக்கு தண்டனை கொடுப்பது மரபாக இருக்கலாம் .
 
ஆனால் அவர்களை தண்டிப்பதை விட, அவர்களை மன்னித்து அவர்களை அரவணைத்து செல்லலாம். 
 
அவர்களை ஒன்று சேர்த்து முடிவுகளை எடுக்க தவறினால் வரும் நாட்களில் படம் எடுப்பவர்கள் மிகப்பெரிய சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.
 
நமது மொத்த சம்பாத்தியத்தையும் வெளியில் இருந்து வருபவர்கள் அள்ளிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.
 
அதனால்தான் தயாரிப்பாளர் சங்கத்தில் நமக்கான ஒரு ஆப், நமக்கான ஒரு வலைதளத்தை உருவாக்கி
 
அதன்மூலம் புதிய வியாபார உத்திகளை கொண்டு வாருங்கள் என நான் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறேன்” என்றார் ஆரி. 
 
படக்குழுவினரை வாழ்த்தி இயக்குனர் பேரரசு பேசும்போது, “இந்த படத்தில் நடித்துள்ள அப்புக்குட்டி என்னுடைய திருத்தணி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார்.
 
அதற்கடுத்து ஒரு படத்திற்காக அவரை அணுகியபோது எத்தனை நாட்கள் கால்ஷீட் என்று கேட்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.
 
நடிகர் திலகம் சிவாஜி போன்ற மிகப்பெரிய நடிகர்களுக்கு கூட கிடைக்காத தேசிய விருது அப்புகுட்டிக்கு கிடைத்திருக்கிறது என்றால்
 
இதைவிட அவருக்கு வேறு என்ன பேரும் புகழும் கிடைத்து விடமுடியும்.. இந்த படத்தின் இயக்குனர் பெயர் மணிகண்டன்..
 
அதாவது ஐயப்பன் பெயர்.. அதனால் பிரச்சனை வரத்தான் செய்யும்.. அந்த மணிகண்டன் இடத்திற்கு பெண்கள் போகிறார்களோ இல்லையோ,
 
இந்த மணிகண்டன் படத்திற்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக வரவேண்டும்” என பேசினார். 
 
படத்தில் இயக்குனர் மணிகண்டன் பேசும்போது, “இந்தப்படத்தை முதலில் வேறொரு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது.
 
இடையில் சில காரணத்தால் அவர் அதிலிருந்து விலகிவிட, அந்த நேரத்தில் என்னிடம் உதவி இயக்குனராக இருந்த தங்கப்பாண்டிதான்,
 
‘இது அருமையான படம் இதை கிடப்பில் போட்டு விடக்கூடாது’ என கூறி தன்னுடைய சக்திக்கு மீறி இந்த படத்தை தானே தயாரிக்க முன்வந்தார்.
 
அதேபோல இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்தவர் படத்தின் முதல் நாள் திடீரென வர முடியாது என கூறி விட,
 
குறைந்த கால அவகாசத்தில் கதாநாயகியாக இந்த படத்திற்குள் வந்தவர்தான் இந்த மதுமிதா.
 
ஆனாலும் முதல் நாள் முதல் ஷாட்டிலேயே அவருடைய தேர்வு நியாயமானது என்பதை நிரூபித்து விட்டார்” என கூறினார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *