எம்.குமார் மற்றும் கே.உமா தயாரிக்க பாலாஜி , பார்த்திபன், மாரிக்கனி, செல்வா, திலீப் ஆகியோர் நடிக்க, கே.பி.செல்வா இயக்கி இருக்கும் படம் ரவுடியிசம்.
“முதல்வருக்கு முன்பு அமைச்சர் , அமைச்சருக்கு முன்பு எம் எல் ஏ.
எம் எல் ஏவுக்கு முன்பு வட்டச் செயலாளர் என்று, பல படிகளைக் கடந்துதான் இன்றைய நிலையில் அரசியலில் உயர்ந்த பதவிக்கு வரமுடிகிறது .
ஆக அந்த வட்டச் செயலாளர் பதவி அரசியலுக்கு அடிப்படை”
– என்ற ஒரு அப்டர்வேஷனை கூறுகிறது இந்த குறும்படம்.
இன்று அரசியலும் ரவுடியிசமும் ஒன்றுக்கு ஒன்று கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கும் நிலையில் அந்த வட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க நினைக்கும் ரவுடிகள் , அந்தப் போட்டி காரணமாகவே மேலும் ரவுடித்தனமாக செயல்படுவதை அச்சு அசலாக விவரிக்கிறது ரவுடியிசம்
ரவுடித்தனத்தை அரசியலும் அரசியலை ரவுடித்தனமும் எப்படி டாமினேட் செய்கிறது என்பதை அழுத்தமாக சொல்கிறது.
கடைசியில் அரசியல்வாதிகளின் ரவுடித்தனம் , ரவுடிகள் செய்யும் அரசியல் இரண்டில் எது ரொம்ப ஆபத்தானது என்ற கேள்வியை எழுப்பி முடிகிறது .
கதாபத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்கள், சூழலின் அழுத்தம் இவற்றை சாதித்ததன் மூலம் கவனம் கவர்கிறார் இயக்குனர் கே.பி.செல்வா
பி.முத்துசாமி மற்றும் எம்.ரெஜினா ஆகியோர் தயாரிக்க, சுபாஷ் , ராஜு பரத், மாரிக்கனி ஆகியோர் நடிக்க, நவீன் முத்துசாமி இயக்கி இருக்கும் படம் . ஹைக்கூ .
அப்பா அம்மா இல்லாத அண்ணன் தம்பிகள் . மாமாவின் குடும்பம்தான் துணை. அண்ணனுக்கு தன் மகளை திருமணம் செய்து தர விரும்பும் மாமா , நீச்சலில் ஆர்வம் உள்ள தம்பியை மட்டும் வெறுக்கிறார் .
அண்ணனுக்கு தம்பி மீது ரொம்பப் பாசம் . தம்பி பெரிய நீச்சல் வீரனாக வந்து மாமாவின் மனசை மாற்றுவான் என்று அண்ணன் நம்புகிறான் .
ஆனால் தம்பிக்கு நடந்த எதிர்பாராத விபத்தில் அவனது இரு கைகளும் போய் விடுகிறது . அவிழும் உடையை கூட சரி செய்ய முடியாத நிலைக்கு தம்பி போகிறான் . “பேசாமல் அவனை கிணற்றில் தள்ளி கொன்று விடு . அவனுக்கும் அதோடு துன்பம் தீரும் . நீயும் என் மகளைக் கட்டிக் கொண்டு நிம்மதியாக வாழலாம்” என்கிறார் மாமா .
தம்பியும் அதற்கு உடன்பட , அவனை கிணற்றில் தள்ளி விடுகிறான் அண்ணன் .
அடுத்து என்ன என்பதே இந்த ஹைக்கூ குறும்படம்.
நெகிழ வைக்கும் கதை. இதிலும் நடித்தவர்களின் நடிப்பு அருமை . அதுவே இயக்குனர் நவீன் முத்துசாமியை பாராட்ட வைக்கிறது.
இரண்டு படங்களிலும் வில்லனாக நடித்த மாரிக் கனி, இசையமைத்த நந்தா இருவரும் கவனம் கவர்ந்தார்கள் .
வாழ்த்துகள் !