நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும் ; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.
தயாரிப்பதற்கு முன்பு விநியோகம் அறிய வேண்டும் என்ற புத்திசாலித்தனமான முடிவின் அடிப்படையில், பத்மா மகன் இயக்கிய நேற்று இன்று நாளை படத்தை முதன் முதலாக வாங்கி வெளியிட்டார் . அடுத்து இரவும் பகலும் வரும் என்ற படத்தை வாங்கி வெளியிட்டார்.
மூன்றாவதாக இவர் வாங்கி வெளியிடும் போக்கிரி மன்னன் படம் வரும் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளிவருகிறது.
தமிழகமே மதுவுக்கு எதிராகப் பயணித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தமிழ் சினிமா மட்டும் டாஸ்மாக் கடைக் காட்சிகளையே எடுத்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது .
ஆனால் இந்த போக்கிரி மன்னன் படம் மூலம் மதுவுக்கு எதிராக பயணிக்கிறார் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.
எப்படி?
பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய ஸ்ரீதர் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும் நடிக்க மாதேஷ் ராகவ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படம் அப்படி ஒரு வித்தியாசமான பிரச்னையைப் பேசுகிறது .
“கள்ளச் சாராயம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் பொதுவான மதுக்கடைகளிலேயே திடீர் என அதிகரிக்கும் தேவையை சமாளிக்க, போலி மது , கலப்பு மது விற்பனை நடக்கிறது . குடிப்பது தவறுதான். ஆனால் நம்பிக் குடிக்க வரும் அப்பாவிகளை இது போன்ற போலி மது மூலம் உடல் நலச் சீர்கேட்டுக்கும் உயிரிழப்புக்கும் ஆளாக்கும் அநியாயம் நடக்கிறது.
இந்த அநியாயத்தால் தன் உறவுகளை இழக்கும் ஒருவனின் கோபமே இந்தப் படம் .போக்கிரியாக இருந்த ஒருவன் இப்படிப்பட்ட இழப்புக்குப் பின்னால் திருந்தி மன்னன் ஆகிறான் ” என்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் மாதேஷ் ராகவ்
போக்கிரி மன்ன படத்தின் ஆடியோ விழாவில் பேசிய இயக்குனர் ஒருவர் படத்தின் ஹீரோவான டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரைப் பாராட்டும்போது “இனிமே இவரு டான்ஸ் மாஸ்டரா மற்ற ஹீரோக்களுக்கு என்ன ஸ்டெப்ஸ் கொடுப்பாருன்னு தெரில. அந்த அளவுக்கு இந்தப் படத்துஅ எல்லா ஸ்டெப்சையும் போட்டு முடிச்சிருக்காரு.
ரஜினி நடிச்ச படம் போக்கிரி ராஜா . விஜய் நடிச்ச படம் போக்கிரி . அந்த ரெண்டு படம் வெற்றியையும் இந்தப் படம் சேர்த்துப் பெறணும்” என்று வாழ்த்த,
கலைப்புலி எஸ். தாணு அதையே சற்று இம்ப்ரூவ் செய்து “விஜய் நடிச்ச படம் போக்கிரி . ரஜினி நடிச்ச படம் மன்னன் . அந்த ரெண்டு மெகா ஹிட் படங்களின் வெற்றியையும் இந்தப் படம் பெறட்டும் ” என்றார் .
இந்த போக்கிரி மன்னன் படத்தை அடுத்து படத் தயாரிப்பில் இறங்கி இருக்கும் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கிறார் ஒரு படத்தின் பெயர் மதுரை மாவேந்தர்கள் . இன்னொரு படத்தின் பெயர் ரங்கராட்டினம்.
தயாரிப்பு மாவேந்தராக ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்கொடிகட்ட வாழ்த்துகள் !