ருத்ரமாதேவி @ விமர்சனம்

rud

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என். ராமசாமி தயாரிக்க அனுஷ்கா நடிப்பில் குணசேகர் இயக்கி இருக்கும் படம் ருத்ரமாதேவி தமிழ் வடிவம்  . படம் ருத்ரமா? மாதவமா ? பார்க்கலாம் .

காகதீய அரசனுக்கு (கிருஷ்ணம ராஜு) நான்கு புறமும் எதிரிகள் . அது தவிர காகதீயனின் பங்காளிகளே அரசனை வீழ்த்தி விட்டு ஆட்சிக் கட்டிலைப் பிடிக்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அவனுக்கு வாரிசும் இல்லை . வாரிசு இல்லாத நாடு என்பதால் பக்கத்து நாட்டு அரசன் ஒருவன் காகதீய தேசத்தைக் கபளீகரம் செய்யத்  துடிக்கிறான் . 
இந்நிலையில் மகாராணி கர்ப்பம் அடைகிறார் . ஓர் இளவரசர் பிறப்பார் என்று நாடே காத்துக் கிடக்க, பிறந்ததோ பெண் குழந்தை !. பெண் குழந்தை மட்டுமே பிறந்ததால் நாட்டைக் காக்கும் வாரிசின்றி அழிந்த பக்கத்து தேசம் ஒன்றின் கதை,  மந்திரி மஹாதேவ ஐயரால் (பிரகாஷ்ராஜ்) அரசருக்கு உணர்த்தப்படுகிறது 
எனவே அரசரும்   மந்திரியும்  சேர்ந்து ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்து விடுகின்றனர் . பெண் குழந்தையை ஆண் குழந்தை போலேவே வளர்க்கின்றனர். . ருத்ரமாதேவி என்று அழைக்க வேண்டிய பிள்ளையை ருத்ர தேவன் என்று பெயர் சொல்லி அழைக்கின்றனர் . ருத்ரமாதேவி வளர வளர பெண் தன்மையும் விகசிக்கிறது. 
rud 1
ஆனாலும் அவள் நாட்டுக்காக தன் உணர்வுகளை தியாகம் செய்து, ஆணாக நடிக்கிறாள் . கோனா கண்ணா ரெட்டி என்ற மக்கள் தலைவன் (அல்லு அர்ஜுன் ) ருத்ரதேவனை கொல்லப் போவதாக சபதம் செய்கிறான் 
ருத்ரமாதேவி உண்மையில் ஒரு பெண் என்பது , அவளது மழலைப்  பருவம் தொட்ட  நண்பனான சாளுக்கிய இளவரசன் வீரபத்ரனுக்கு (ராணா டகுபதி ) முதலில் தெரிய  வருகிறது . ரகசியம் காக்கும் அவன்,  ஒரு நிலையில் அவளைக் காதலிக்கவும் செய்கிறான் . ஆனால் ருத்ரமாதேவியோ நாட்டுக்காக வாழ்வதுதான் தனக்கு முக்கியம் என்கிறாள் . 
இந்நிலையில் அரண்மனை ஒற்றர்கள் மூலம் ருத்ரமாதேவி பெண் என்பது அரசனின் பங்காளிகளுக்கும்   தெரிய வருகிறது. அவர்கள் அதை ஒரு பிரச்னையாக வெளிக்கொணர முயல , மந்திரியே முந்திக் கொண்டு அதை அரசவையில் அறிவிக்கிறார் . நாட்டின் பாதுகாப்புக்காக அவளை ஆணாக நடிக்க வைத்ததை சொல்கிறார் . 
ஆனாலும் பங்காளிகளுக்கு வேண்டியவர்கள் மக்களில் ஒரு பகுதியினரைத்  தூண்டி விடுகிறார்கள் . கலகம் வர, பிரச்னையை கையில் எடுக்கும் ராஜகுரு ஒருவர் , ருத்ரமாதேவியை அனாதையாக்கி நாடு கடத்துகிறார் . 
இளவரசனாக வாழ்ந்த ருத்ரமாதேவி ஓர்  அனாதைப் பெண்ணாக நாட்டின் எல்லையில் உள்ள கோவிலில் தஞ்சம் அடைகிறாள். 
rud 6
எதிரிகளால் நாடு சூறையாடப் படுகிறது . கோனா கண்ண ரெட்டி ருத்ரமாதேவியைக் கொல்ல வர..
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த ருத்ரமாதேவி .
இது முழுக்க முழுக்க அனுஷ்காவின் படம். அவரது உயரம், முக அமைப்பு உள்ளிட்ட தோற்றம்,….  சில நொடிகளுக்குள் அவரை ருத்ரமாதேவியாக ஏற்றுக் கொள்ள வைக்கிறது. நடிப்பு வழக்கம்போல்தான் என்றாலும் யானையேற்றம், குதிரையேற்றம் , கத்திச் சண்டை , பாய்ந்து பறந்து அடிப்பது என்று பிரம்மாண்டமான உழைப்பைக் கொடுத்து இருக்கிறார் அனுஷ்கா .சபாஷ் அனுஷ்கமாதேவி ! 
இப்படி கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள  படத்தில் அல்லு அர்ஜுனும் , ராணா டகுபதியும் குறைந்த பங்களிப்பே உள்ள ஒரு கேரக்டரை நிறைவாக செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். 
அரங்குகள், கலைப் பொருட்கள் , கிராபிக்ஸ் மூன்றும் பின்னிப் பிணைந்து கொடுத்திருக்கும் பிரம்மாண்டம் கண்களை விரிய வைக்கிறது . 
காஸ்டியூம்ஸ் மிக சிறப்பு . இளையராஜாவின் இசை படத்துக்கு அழகு சேர்க்கிறது . 
rud2
இத்தாலி யாத்ரீகன் மார்க்கோபோலோ  இந்தக் கதையை சொல்வது போல படம் துவங்கும் விதமும் சிறப்பு . 
நாட்டின் நன்மைக்காக ஒரு பெண் குழந்தையை ஆண் என்று சொல்லி இளவரசி போல அல்லாமல் இளவரசன் போலவே 25 வருடம் வளர்த்தார்கள் என்ற கதை உண்மையிலேயே அட்டகாசமானது .  ஒழுங்காக திரைக்கதை அமைத்தால் உலகம் தொடும் வாய்ப்புள்ள கதை . 
ஆனால் அதற்குரிய பரபரப்பை , அழுத்தத்தை, எமோஷனலை திரைக்கதையில் கொண்டு வராததுதான் பரிதாபம். அல்லு அர்ஜுன் , ராணா டகுபதி என்று சுற்றிலும் ஹீரோக்களும் அவர்களுக்கான ஹீரோயிசமும் இருப்பதால் ருத்ரமாதேவியின் முக்கியத்துவம் குறைகிறது . தவிர அந்த ஹீரோக்களின் காட்சிகளிலும் திருப்தி வரவில்லை .
பழிவாங்கல் மற்றும் போர்க் காட்சிகளில் பில்டப் இருக்கும் அளவுக்கு உணர்வாக்கம் இல்லை . 
இன்னொரு கொடுமை பா.விஜய்யின் வசனம் . 
இரண்டாம் தர தெலுங்கு டப்பிங் படங்களில் வரும் ”எட்டி உதைச்சா ஏரியில போய் விழுந்துடுவ …” என்பது போன்ற வசனங்களைப் போல,  இந்தப் படத்தில் போய் “அட .. அண்ணாக் கயிறுல  தாயத்து…” என்று அல்லு அர்ஜுனை சொல்ல வைத்திருக்க வேண்டாம் . அது படத்தின் தரத்தைக் குறைக்கிறது .
rud4தவிர இன்னொரு முக்கிய விசயத்தையும் சொல்ல வேண்டி இருக்கிறது 
மொழிமாற்றம் என்பதற்காக படத்தின் அடையாளங்களை மாற்றாமல் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் வடிவத்திலும் ருத்ரமாதேவியை காகதீய அரச வம்சப் பெண் , தெலுங்கனா மகராணி என்றே குறிப்பிடுகின்றனர் .
அதாவது, இது வரலாறும் கற்பனையும் கலந்த கதை என்றாலும் —- மொழிமாற்றம் செய்யப்பட்டாலும்–   ருத்ரமாதேவி என்பது தெலுங்கு அடையாளத்துடனே மற்ற மொழிகளுக்கும் போக வேண்டும்  என்பதில் தெலுங்கு மூலப் படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள் .
அதனால் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்பது அவர்களின் கொள்கை முடிவாக இருந்துள்ளது . அவர்களின் இன உணர்வு போற்றப் படவேண்டியது . 
ஆனால் காஞ்சிபுரத்தில் பிறந்து சீனா சென்று குங்பூ கலையை உருவாக்கிய போதி தர்மனின் வரலாற்றை சொன்ன ஏழாம் அறிவு படம் , தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டபோது காஞ்சிபுரத்தையே ரேனிகுண்டா என்று மாற்றினார்கள் .
rud 7போதிதர்மனை தெலுங்கன் ஆக்கினார்கள் . ”குங்பூ கலையை சீனாவில் உருவாக்கிய போதி தர்மன் உண்மையில் ஓர் தெலுங்கன்” என்று வசனத்தை மாற்றினார்கள்,  படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினும் இயக்குனர் ஏ. ஆர் . முருகதாசும் .
இவர்களுக்கு இன உணர்வை விட பண உணர்வு முக்கியம் . இது ஒரு பக்கம் இருக்கட்டும் . 
ருத்ரமாதேவி என்பது தெலுங்கு அடையாளத்துடனே மற்ற மொழிகளுக்கும் போக வேண்டும்  என்பதில் தெலுங்கு மூலப் படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்திருக்கும் அதே நேரம் இந்தப் படத்தில் பா விஜய் ஒரு வசனம் எழுதி இருக்கிறார் . 
காகதீய அரசரின் எதிரிகள் என்று குறிப்பிடும் போது பல்வேறு திசையிலும் பல அரசர்களை குறிப்பிடும் பா . விஜய் , தெற்குத் திசையில் பாண்டியர்களை குறிப்பிடுகிறார் . அதைத் தொடர்ந்து   ” இந்த நரிகளிடம் இருந்து காகதீய தேசத்தைக் காக்க வேண்டும்” என்று ஒரு வரி எழுதி இருக்கிறார் .
அதாவது பாண்டியர்களை அரசர்களை நரிகள் என்கிறார் .  கொடுமை .
வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பாண்டியர்களின் போர்த் தந்திரங்களில் வஞ்சம் என்பது மிகக் குறைவு . தவிர்க்க முடியாத சூழல்களிலும் அது மூவேந்தர்களுடன் மட்டுமே இருந்துள்ளது . 
rud 5
இன்னொரு பக்கம் பாண்டியர்களின் — சொல்லப் போனால் மூவேந்தர்களின் — தொன்மைக்கும் கலாச்சாரத்துக்கும் போர் அற நெறிகளுக்கும் முன்னாள் காகதீயர்களும் , சாளுக்கியர்களும் ,ஹொய்சாலர்களும் , ராஷ்டிரகூடர்களும் ஒன்றுமே இல்லை. 
ருத்ரமாதேவியின்  காலம் பதிமூன்றாம் நூற்றாண்டு என்கிறது இந்தப் படம் . பதிமூன்றாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழ வம்சமே முடிவுக்கு வந்து விட்டது . அதன் பிறகு பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சி வருகிறது . அவர்களில் ஒருவரான சுந்தரபாண்டியன் பலம் பெறுகிறான் . 
ஒரு வாதத்துக்காக அவனை ருத்ரமாதேவியின் காகதீய தேசத்துக்கு எதிரி என்று சொல்லலாம் என்று பார்த்தால் கூட ….
பிற்காலச் சோழரகளிடம் இருந்து  மதுரையை மீட்டுக் கொண்தோடு  சோழ வம்சத்தை அடியோடு அழித்ததே அவனது செயலாக இருந்திருக்கிறது . பிற்காலப் பாண்டியர்கள்  காகதீயம் வரை எல்லாம் போகவில்லை . அப்படியிருக்க பாண்டியகளை காகதீய தேசத்துக்கு எதிரிகள் என்று பா . விஜய் எழுதி இருப்பது மடமை என்றால் …
இந்த மடமையிலும்… பாண்டியர்களை நரிகள் என்று சொல்வது பா.விஜய்யின் இனத் துரோகம் ! 
rud 3“பா.விஜய்யா அப்படி சொல்கிறார்? படத்தில் வரும் கேரக்டர் அப்படி சொல்வதாகத்தானே பா. விஜய் எழுதி இருக்கிறார் . இதில் என்ன தப்பு ?” என்று கேட்கலாம் .
அப்படியானால் ஒரு தெலுங்கு வார்த்தை கூட இடம்பெறாத ருத்ரமாதேவி படத்தில் தமிழ் வடிவத்தில் ருத்ரமாதேவியை  சோழ இளவரசி என்று கூட சொல்லி இருக்கலாமே . மாறாக காகதீய அரசி , தெலுங்கானா ராணி , ரெட்டி குல விளக்கு என்று  வைராக்கியத்தோடு மூச்சு முட்ட அடையாளப் படுத்துகிறார்களே.
அப்படி மாற்றி எழுத முடியாத போது , தேவை இன்றி பாண்டியர்களை இழுப்பதோடு அவர்களை நரிகள் என்று சொல்வது நியாயமா ? பா. விஜய்க்கு அந்த வைராக்கியம் இருந்திருக்க வேண்டாமா ?
ஆக ருத்ரமாதேவி என்ற ஒரு படத்திலேயே இன்றைய தெலுங்கு மக்களின் இன உணர்வும் நமது படைப்பாளிகளின் சோரம் போகும் தன்மையும் தெரிய வருவது வருத்தமே .
ருத்ரமாதேவி … அனுஷ்கா ராணி . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →