ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் 7 ஜி பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா, ராதாரவி, கவுதம் வாசு தேவ் மேனன், தம்பி ராமையா, ராம்ஸ் , ஜே எஸ் கே கோபி , தீபா நடிப்பில் , திரௌபதி படப் புகழ் மோகன் ஜி எழுதி இயக்கி இருக்கும் படம் ருத்ர தாண்டவம் .
ஜாதி மத வித்தியாசம் பாராமல் அடுத்த தலைமுறை மீது அக்கறை கொண்டு போதைப் பொருள் விற்பனை மற்றும் பழக்கத்தை ஒழிக்கப் போராடும் ஒரு போலீஸ் அதிகாரி( ரிஷி ரிச்சர்டு).
கஞ்சா விற்கும் தாழ்த்தப்பட்ட சமூக சிறுவன் ஒருவனை அவர் கைது செய்ய முயல, துரத்தும்போது அந்த சிறுவன் விபத்துக்கு ஆளாகிறான் . அவனுக்கு அக்கறையோடு போலீஸ் அதிகாரி உதவிய நிலையில் அடுத்த நாள் அவன் மரணம் அடைகிறான்.
அந்தக் குற்றவாளி தாழ்த்தப்பட்டவன் என்பதால் அவனை மேற்படி போலீஸ் அதிகாரி அநியாயமாக தாக்கி , அவன் மரணம் அடையக் காரணம் ஆனார் என்று ,
சில சமூக விரோத சக்திகள் (கவுதம் மேனன் , ராம்ஸ் ) பி சி ஆர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த போலீஸ் அதிகாரியை குற்றவாளி ஆக்கி வேலையை விட்டு நீக்குகிறார்கள்
அதிகாரிக்கு இருந்த குற்ற உணர்ச்சியில் அவரே தன்னை குற்றவாளி என்று நம்ப, நியாயமாக நடந்தும் அந்த குற்ற உணர்ச்சி எதற்கு என்று மனைவி வாதாட, அதை போலீஸ் அதிகாரி ஏற்க மறுக்க, அது பிடிக்காத கர்ப்பிணி மனைவி கணவனைப் பிரிந்து செல்ல …
அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த ருத்ர தாண்டவம்.
பி சி ஆர் சட்டத்தை தவறாக- தங்களுக்குச் சாதகமாக– நேர்மையான மனிதர்களையும் பழிவாங்க – பயன்படுத்தும் பயன்படுத்தும் சமூக விரோதிகள்
இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதம் மாறியும் இந்து மத தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சாதிச் சலுகைகளை மதம் மாறியும் சட்ட விரோதமாக சலுகையை பயன்படுத்தும் சட்ட விரோதிகள் ….
– என்று இரண்டு நுணுக்கமான விசயங்களைக் கையில் எடுத்துக் கொண்டு , சுமார் இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடப் படத்தை பரபரப்பாக விறுவிறுப்பாக – அதே நேரம் எல்லோருக்கும் எளிமையாகப் புரியும் வகையில் கொண்டு சென்ற வகையிலேயே
ஒரு இயக்குனராக – படைப்பாளியாக ஜெயித்து விடுகிறார் இயக்குனர் மோகன் ஜி.
ஆனால் அதோடு நிறுத்தி விடாமல் போதைப் பொருட்களால் அடுத்த தலைமுறை எப்[படி அழிந்து கொண்டு இருக்கிறது என்பதை சொன்ன விதம்…. ( “நம்ம காலத்துலயாவது குடி மட்டும்தான்ணே. இப்போ நிலைமை இன்னும் மோசம் .. கண்ட கண்ட போதை மருந்துகளைப் போட்டு இளையதலைமுறை நாசமா போகுது” என்ற வசனம் அதிர அடிக்கிறது. படம் முழுக்கவே வசனங்கள் அருமை ) …
போதைப் பொருள் பயன்படுத்துவோர் நிலை , அவர்களுக்காக உள்ள செங்கல்பட்டு மருத்துவமனை நிகழ்வுகள், அது போன்ற மருத்துவமனைகள் இன்னும் தேவை என்ற சுரீர் உண்மை என்பதை உணர்த்திய விதம்…
பாதிக்கப்படும் மக்கள் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் காட்சிகளைப் படைத்து இருக்கும் மாண்பு
இவற்றால் சமூக அக்கறைப் படைப்பாளியாக ஜொலிக்கிறார் மோகன் ஜி .
அது மட்டுமா ? ஜாதி வன்மம் இல்லாமல்,
நாயகனுக்கு உதவும் வக்கீலை (ராதாரவி) தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவராகவும் , நாயகனோடு களமாடும் சக காவலரை ( தம்பி ராமையா) உண்மையான கிறிஸ்தவனாகவும் காட்டி இருக்கும் விதத்தில் பிரகாசிக்கிறது மோகன் ஜி யின் நடுநிலைப் பார்வை.
இந்த பார்வை உள்ளவர்கள் எந்தக் கதையையும் சொல்லலாம் .
கடைசியில் குழந்தை கை மாறும் காட்சியில் உள்ள சமத்துவ சமூக உணர்வும் போற்றுதலுக்குரியது
எல்லோருக்கும் பொதுவான மாபெரும் தலைவரான அம்பேத்காரை ஒரு குறிப்பிட்ட சில சமூகங்களின் தலைவராக சுருக்கியதன் பின்னால் உள்ள அரசியலை இந்தப் படம் பேசும் விதமும் சிந்திக்க வைக்கிறது . (அதே நேரம் இதே தவறு, பசும்பொன் முத்துராமலிங்கனார், காமராஜர் , அவ்வளவு ஏன் கப்பல் ஓட்டிய தமிழன் வ உ சிக்கே நடக்கிறது அதுவும் தவறுதான்)
படமாக்கல் , காட்சி விவரணை போன்ற படங்களிலும் திரௌபதி படத்தை விட பல மடங்கு மேம்பட்டு இருக்கிறது ருத்ர தாண்டவம் . லொக்கேஷன்களும் அருமை .
குற்றம் செய்து விட்டுதான் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டும் என்று இல்லை சும்மா பிகினிக் மாதிரி கூட போய் வரலாம் என்பது போல அட்டகாசமாக இருக்கிது அந்த கடற்கரையோர போலீஸ் ஸ்டேஷன்.
நீதிமன்றக் காட்சிகள் அதகளம் . அதுவும் மிக சரியான சமயத்தில் நாயகனை வீழ்த்த சாதிச் சான்றிதழ் விசயத்தை கையில் எடுப்பது திரைக்கதையில் அடேங்கப்பா திருப்பம் .
படித்தால் மட்டும் போதுமா படத்தில் சிவாஜி உட்பட பல முக்கியமான , நீண்ட பங்களிப்புள்ள ஆண் கதாபாத்திரங்கள் இருந்தும் எல்லோரையும் ஒரு ஓரமாக நிற்க வைத்து விட்டு சாவித்திரி கதாபாத்திரம் மேல் படத்தைக் கொண்டு சென்று காவியமாக முடித்து பெண்மைக்குப் பெருமை சேர்த்து இருப்பார் இயக்குனர் பீம்சிங் .
இந்த படத்தின் முடிவும் அந்த வரிசையில் வைக்கத் தக்கது . அப்படி ஒரு நெகிழ்வான- அற்புதமான- மனம் உருக- நெகிழ- நெக்குருக வைக்கிற – பெண்மையைப் போற்றுகிற கிளைமாக்ஸ் . மனம் உள்ளோரால் கலங்காமல் இருக்க முடியாது சபாஷ் மோகன் ஜி
அக்கறையான நடிப்பால் பாத்திரத்தை உணர வைக்கிறார் ரிச்சர்டு,
தர்ஷா, ராதாரவி, ராம்ஸ், மாளவிகா அவினாஷ் , கோபி , தீபா ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
கவுதம் மேனன் … கட் கட் கட்…! வீ வான்ட் மோர் எமோஷன் சார் !
ஜுபின் இசையில் அம்மாடி பாடல் உள்ளம் துளைக்கிறது. பின்னணி இசை , தீம் மியூசிக் இவற்றிலும் கவனம் கவர்கிறார் இசை அமைப்பாளர்.
பொதுவாக படத் தொகுப்பில் சிறப்பாக செய்து இருக்கும் தேவராஜ் , முன்னரே காட்டிய காட்சிகளை பின்பு பிளாஷ் பேக்கில் காட்டும்போதும் இப்படி நீளமாகக் காட்டாமல் சுருக்கி இருக்கலாம் .
வில்லனாக வரும் வாதாபி ராஜன் கதாபாத்திரம் கம்யூனிஸ்டுகள் மற்றும் சீமானின் குறியீடு என்றால் அவரது பார்ட்னராக காவி கோட் வெள்ளை தாடி கெட்டப்பில் பேசும் நபர் மோடியின் குறியீடு . இந்த இடத்திலும் மோகன் ஜியின் நேர்மை பாராட்டுக்குரியது . .
நாயகன் கதாபாத்திரம் எந்த சாதிக் கதாபாத்திரம் என்று குறிப்பிட்டு சொல்லப்படாவிட்டாலும் மோகன் ஜி காட்டும் கிராமியப் பின்புலம் , காட்டுவது மோகன் ஜி என்ற விஷயமும், அதை வன்னிய சமூகப் பாத்திரமாகவே பார்க்க வைக்கும் .
எந்த வன்னியப் பெண் தன் கணவனிடம் கேதாரிநாத் போக வேண்டும் என்று கேட்கிறாள்?
ஒரு காலத்தில் ராயல சீமா வரை கட்டி ஆண்ட தூய தமிழ் இனம் வன்னிய இனம் . பின்னாளில் பக்தியின் பெயரால் இங்கே வட மொழி திணிக்கப்பட்டது. வன்னிய இனத்தின் உண்மையான பரம்பரை தெய்வ வழிபாடுகள் மறக்கடிக்கப்பட்டு ஆரியக் கடவுளர்கள் திணிக்கப்பட்டார்கள் . வன்னிய இன தேவாதிகளுக்கும் காவல் தெய்வங்களுக்கும் கூட வட மொழிப் பெயர்கள் வைக்கப்பட்டன. இதுதானே வரலாறு?
அப்படி இருக்க, இப்படி எல்லாம் காட்சி வைப்பதால்தான் இந்து மதம் இல்லை என்றால் தமிழ் இல்லை என்று ஹெச் ராஜா போன்றவர்களால் தைரியமாகச் சொல்ல முடிகிறது . இந்து மதம் என்ற ஒன்று உருவாகும் முன்பே தமிழ் மொழியும் இனமும் இருந்தது என்ற உண்மையை மறைக்க முடிகிறது .
படத்தின் முக்கியப் பிரச்னை …
பி சி ஆர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது மட்டுமல்ல .. வரதட்சணைத் தடுப்பு சட்டம் உட்பட எந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதும் கண்டிக்கப்பட வேண்டிய – தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் .
அப்படி இருக்க பிசிஆர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதும், மதம் மாறிய பின்னரும் முந்தைய மதத்தின் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்துவதும் தவறு என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டாமா ?
மதம் மாறியும் சலுகைகளை பயன்படுத்தி பலன் பெற்று வசதியாக வாழும் ஒரு கதாபாத்திரமும் படத்தில் காட்டப்படவில்லை
அதே போல
‘போலீஸ் அதிகாரி நியாயமாக நடந்து கொண்டார்… அவரை முடக்க சமூக விரோத சக்திகள் சற்றும் பொருத்தம் இல்லாமல் பி சி ஆர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தின… ஆனால் அந்த அதிகரிக்குள் எந்த குழப்பமும் தயக்கமும் இல்லை … ஏனென்றால் பாதிக்கப்பட்ட சிறுவனின் நல்வாழ்வுக்கே உதவியவர் அவர்… எனவே பிரச்னையை — சதியை அவர் கம்பீரமாக நேர்மையாக எதிர்கொண்டு வென்றார்…
என்று அல்லவா படத்தின் திரைக்கதை இருந்திருக்க வேண்டும்?
அதை விட்டு விட்டு என் மேலதான் தப்பு என் மேலயும் தப்பு என்று அவர் ஏன் ஓடி ஓடி ஒப்பாரி வைக்கிறார்?
பொட்டில் அடித்த மாதிரி சொல்ல வேண்டிய விஷயத்தை பொட்டுகடலை சாப்பிடுவது போல சொல்லி இருக்கிறார்கள் படத்தில் .
இதற்கே தடை கேட்டு களம் இறங்கி இருக்கின்றனர் சிலர்
அப்போ நாளை வரதட்சணைத் தடுப்பு சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது பற்றிப் படம் எடுத்தாலும் இப்படி மேலோட்டமாகத்தான் சொல்ல வேண்டுமா? உண்மையை வலுவாகச் சொன்னால் அதற்கும் தடை கேட்பார்களா?