கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பாக கண்ணதாசன் விழா பதினோராவது ஆண்டாக சென்னை குமாரராஜா முத்தையா அரங்கில் நடந்தது.
இந்த ஆண்டுக்கான கவியரசர் விருதை மக்கள் கவிஞர் அரு.நாகப்பன் , கயல் தினகரன் இருவருக்கும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய இலக்கிய சிந்தனை ப.லட்சுமணன் வழங்கினார். நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
விழாவுக்கு வந்தவர்களை ஏ.வி.எம். சரவணன் , நல்லி குப்புசாமி செட்டி , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோர் கவுரவித்தனர். விருது பெற்றவர்கள் பற்றிய அறிமுக உரையை இயக்குனர் எஸ் பி முத்துராமன் வழங்கினார். அனைவரையும் அறக்கட்டளையின் தலைவரான மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் வரவேற்று பேசினார் டாக்டர் குமார ராணி முத்தையா குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார் .
கவியரசரின் பாடல்கள் தொடர்பாக நடந்த போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி , ‘கண்ணதாசன் பாடல்களுக்கு நான் பாடிய பாமாலைகள்’ என்ற தலைப்பில் , பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கவியரசரைப் பற்றி நெகிழ்ந்து பேசினார் . அவரது பாடல்களை பாடினார் .
கவியரசர் எழுதி தான் பாடிய பாடல்களை மட்டுமல்லாது டி எம் சவுந்திரராஜன் பாடல்களையும் பாடிய அவரது கண்களில் இருந்து நெகிழ்வான கண்ணீர் சிந்தியபோது … அவரைப் போன்றவர்கள் மனதில் எல்லாம் கண்ணதாசன் எப்படி ஒரு காவியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது .
‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை ” என்று பிரபஞ்சத்தை பார்த்து பேரிகை முழக்கியவர் அல்லவா கவியரசர் ?