கிராமத்து இளைஞன் சகா என்கிற சகாதேவன் (சண்முகப்பாண்டியன் ) தனது நண்பனோடு (ஜெகன்) பிழைப்புக்காக மலேசியா போகிறான் . ஊரில் இருந்து மலேசியா போன ஒருவர் (ரஞ்சித்) என்ன ஆனார் என்பதே தெரியாத நிலையில் அவரது மனைவியிடம் ( தேவயானி) ” உங்கள் கணவரை கண்டு பிடித்து உங்களிடம் பேச வைக்கிறேன் என்ற வாக்கும் கொடுத்து விட்டு மலேசியா வருகிறான் சகா .
வந்த இடத்தில் சில குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசுக்கு உதவி மலேசிய போலீசின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெறுகிறான் . காணாமல் போன ஊர்க்காரரை கண்டுபிடிக்க முயலும்போது , அங்கு உள்ள ஒரு மருந்துக் கம்பெனி, மக்களுக்கு தீங்கு செய்யும் மருந்துகளை தயாரித்து இந்தியாவுக்கு அனுப்புவதைக் கண்டு பிடிக்கிறான் . விஜயகாந்தின் மகன் அறிமுகம் ஆகும் படத்தில் அப்புறம் என்ன நடக்கும் என்பதை சொல்லாமலே நீங்கள் அறிவீர்கள்.
போலி ஏஜெண்டுகளை நம்பி மலேசியா போகும் தமிழர்கள் எப்படி அங்கே கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையையும் இழந்து குடும்பத்தையும் தெருவில் விடுகிறார்கள் என்பதையும் சொல்வது, இந்தப் படத்தின் நல்ல விஷயம்
படத்தின் இறுதிப் பகுதியில் கவுரவத் தோற்றத்தில் தோன்றும் விஜயகாந்த் ” வெளிநாட்டுக்காரனுக்கு எப்படி நம்ம நாடு சுத்திப் பாக்கற இடமா மட்டும் இருக்கோ அதே மாதிரி நம்ம மக்களுக்கும் வெளிநாடு என்பது சுத்திப் பாத்துட்டு திரும்பி வர இடமா மட்டுமே இருக்கணும். சொந்த நாடு என்பது நம்ம பேருல எழுதி வச்ச சொத்து பத்திரம் மாதிரி . அதை பிரிஞ்சு பிழைப்பு தேடி வெளிநாட்டுக்கு போக தேவை இல்லாத சூழ்நிலையை அரசாங்கமே உருவாக்கணும் ” என்ற கருத்து … வெகு சிறப்பு .
சண்முகப் பாண்டியனின் உயரத்துக்கும் உடம்புக்கும் அவர் யாரை எத்தனை பேரை எங்கே எப்போது எப்படி அடித்தாலும் ஏற்றுக் கொள்ள முடிகிறது . விரைவில் சிறப்பாக நடிக்கவும் கற்றுக் கொள்ள வாழ்த்துகள் . ஆனால் திரைக்கதை மற்றும் படமாக்கலில் இன்றைய நவீனத்தன்மைக்கு ஏற்ப படங்களை சுயமாகத் தேர்ந்தெடுக்க கற்றுக் கொள்ள வேண்டும் சண்முகா !.
கார்த்திக் ராஜாவின் பாடல் இசையில் ஒரு மேட்டிமைத்தன்மையும் பின்னணி இசையில் மசாலாத்தனமும் இருக்கிறது. ஆனால் இன்னும் நன்றாக இருந்திருக்க வேண்டும்.
ராக்கி ராஜேஷ் மற்றும் பாங்காக்கை சேர்ந்த கேச்சா ஆகியோர் அமைத்து இருக்கும் சண்டைக் காட்சிகள் அதிரடி சரவெடி.
சகாப்தம் ….. இன்னும் பதமான சகாவாக இருந்திருக்க வேண்டும் .
புரட்சிக் கலைஞரின் வாரிசு சண்முகப் பாண்டியனுக்கு தனிப்பட்ட வகையில் வாழ்த்துகள் !