ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க அவரது மகன் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க,
மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் பெற்ற ஆஸ்திரேலிய அழகி அமன்டா கதாநாயகியாக அறிமுகமாக, அருண் ராஜ் வர்மா என்ற புது இயக்குனர் இயக்கி இருக்கும் படம் சாஹசம் .
படம் பாயாசமா இல்லை ஆயாசமா ? பார்க்கலாம்
சீக்கிரமே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞன்(பிரஷாந்த்) … நியாயமாக வாழச் சொல்லும் அவனது அப்பா (நாசர்)
ஒரு பெரும்புள்ளி , பெரிய கொள்ளைக்காரன் ஒருவனோடு சேர்ந்து வங்கி ஒன்றை கொள்ளை அடிக்கிறார்கள் . நாயகன் மூலம் அது போலீசுக்கு தெரிய வருகிறது. எனினும் கொள்ளை நடந்து விடுகிறது .
ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கொள்ளையடித்தவர்களுக்கே தெரியாமல் மறைக்கப்படுகிறது .
நாயகனுக்கு ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்படுகிறது .
பணம் நம் கைக்கு வராமல் போனதற்கு நாயகன்தான் காரணம் என்று என்னும் கொள்ளைக்காரன் அவனை பழிவாங்க முயல்கிறான் . நாயகனின் தந்தை , தாய் , சகோதரி , காதலி…
எல்லோருக்கும் உயிராபத்து ஏற்படுத்துகிறான் . நாயகனை பழிவாங்கவும் ஸ்கெட்ச் போடுகிறான்
”உனது அதீத பண ஆசைதான் இதற்கு காரணம்” என்று நாயகனை அவனது தந்தை கண்டிக்கிறார்
”என்னோடான பிரச்னைக்கு சம்மந்தமே இல்லாத என் குடும்பத்தை கஷ்டப்படுத்துவது என்ன நியாயம் ?’ என்று பொங்கி எழும் நாயகன் வில்லனை எப்படிப் பழி வாங்கினான் என்பதே இந்த சாஹசம் .
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து வந்த ஜூலாயி படத்தின் ரீமேக் இது .
பிரஷாந்த் இன்னும் இளமையை மெயின்டைன் செய்து வருகிறார் . நன்றாக ஆடுகிறார் . சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறார் . கதாநாயகி அமன்டா அழகாக இருக்கிறார் . ஸோ கியூட்!
மழை, டீக்கடை, செயற்கை மழை காட்சிகள் நன்றாக இருக்கிறது .
தமன் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது . பாடல்களில் லொக்கேஷன் , உடைகள் நடனம் எல்லாம் நன்றாக இருக்கின்றன . நர்கீஸ் பக்ரி நட(ன)மாடும் பாட்டு ஒன்றும் படத்தில் இருக்கிறது .
ஆனால் சம்மந்தா சம்மந்தமில்லாமல் வந்து பாடல்கள் ஆஜராவது கொடுமை . கனல் கண்ணன் மற்றும் சுப்ரீம் சுந்தரின் சண்டைக் காட்சிகள் சேசிங் காட்சிகளும் தெறிப்பாக இருக்கின்றன .
எதையுமே லாஜிக் வைத்து பார்க்கும் நாயகனின் குணாதிசயமும் வில்லனும் நாயகனும் ஒருவரை ஒருவர் வீழ்த்த புத்திசாலித்தனமாக ஸ்கெட்ச் போடுவதும் ஓகேதான் .
ஆனால் தனி ஒருவன் படத்தில் இதை எல்லாம் இதைவிடவும் சிறப்பாக பார்த்து விட்டதால் இதில் செல்லுபடியாகவில்லை.
படு வீக்கான பழமை நெடி நிறைந்த புதிதாக எதுவும் இல்லாத திரைக்கதைதான் பெரிய பலவீனம், ஜூலாயி கதையும் தமிழ் ரசிகர்களுக்கு லுல்லல்லாயி தான்.
மீண்டும் ஜெயிக்கணும்னா , இன்னும் மெனக்கெடனும் பிரஷாந்த் மற்றும் தியாகராஜன் !