சென்னை மேற்குத் தாம்பரத்தில் உள்ளது சாய்ராம் பொறியியல் கல்லூரி .
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இந்தக் கல்லூரி, ஒவ்வொரு வருடமும் கல்லூரிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துக் கொண்டு இருக்கிறது .
அதே நேரம் இதற்கு நேர் மாறாக , டிரஸ் கோட் உள்ளிட்ட சில விசயங்களில் மாணவ மாணவியரை நடத்தும் முறைகளில்,
மாணவர்களை மட்டுமல்லாது மாணவிகளையும் கொடுமைப்படுத்துவதாகத் தகவல்கள் வருவது உண்டு .
அவற்றுக்கு எதிராக மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழக வளாகம் , கல்லூரி இருக்கும் தாம்பரம் பகுதி , கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலகம் இருக்கும் தி.நகர் ஆகிய பகுதிகளில்,
அடிக்கடி போராட்டம் நடத்தியதும் உண்டு .
இந்த நிலையில் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இயந்திரவியல் படித்த அபிநாத் என்ற மாணவன் கடந்த 1. 03. 2016 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப் பட்டார் .
மேற்படி மாணவர் அபிநாத் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டுள்ளார் . ஆனால் அவருக்கு மருத்துவப படிப்பு கிடைக்கவில்லை . ஆனால் இயந்திரவியல் படிப்பு அரசு ஒதுக்கீட்டில் கிடைத்து உள்ளது .
எனவே பெரிதாக செலவழிக்கும் பிரச்னையும் இல்லை . கடன் வாங்கிய பிரச்னையும் அவருக்கு இல்லை .
இந்த நிலையில் அந்த மாணவர் முதலண்டுத் தேர்வில் பல பாடங்களில் அரியர் வைத்துள்ளார் .
அதற்காக அவரை கல்லூரி சம்மந்தப்பட்ட சில நபர்கள் அடித்ததாகவும் காலை நேரங்களில் ஸ்டடி ஹவர் என்ற பெயரில் தங்கள் கண் முன்னேயே வைத்து டார்ச்சர் செய்ததாகவும்,
அதனால் மனம் வெறுத்த அவர் கிணற்றில் விழுந்து இறந்து விட்டதாகவும் அபிநாத் தரப்பு மாணவர்கள் கூறுகிறார்கள் .
ஆனால் “அதுவரை நன்றாகப் படித்த மாணவர் தொடர்ந்து நன்றாகப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி படிக்கச சொன்னோம் .
ஆனால் படிப்பதற்குப் போய் அடிக்கவோ கொடுமை செய்யவோ இல்லை” என்கிறார் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோமுத்து .
அது பற்றி மேலும் கூறும் அவர் ” அவர் இறந்ததற்கு காரணம் மருத்துவப் படிப்பு கிடைக்காத சோகம்தான். ஆனால் அவரது பெற்றோர் அவரை வற்புறுத்தி இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து உள்ளனர் .
அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் எங்கள் கல்லூரி கிடைத்தது .
நாங்கள் மாணவர்கள் ஒழுங்காக படிக்கச் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம் . அதில் மனம் வெறுத்துப் போன அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .
அவர் இறந்தது வருத்தமான விஷயம்தான் . அதற்காக எங்கள் பழி போடுவது நியாயம் இல்லை .நங்கள் அவரை அடித்தோம் என்பது பொய்.
ஒரு சலவைத் தொழிலாளியின் மகன், வீட்டில் இருந்து வந்து படிக்க முடியாமல் கஷ்டப்பட்டபோது, நாங்கள் அவரை இலவசமாக கல்லூரி விடுதியில் தங்க வைத்துப் படிக்க வைத்தோம் .
அப்படி இருக்க ஒரு மாணவனின் மரணத்துக்கு காரணம் ஆக ஆசைப்படுவோமா ?” என்கிறார் .
“இறந்த அபிநாத் நீச்சல் தெரிந்தவர் என்று சொல்கிறார்களே ?”” என்று கேட்டால் ” எங்கள் மேல் வேண்டும் என்றே பழி சொல்பவர்கள் சொல்லும் விசயம் இது .
அவருக்கு நீச்சல் தெரியுமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது . ஆனால் அவர் செய்து கொண்டது தற்கொலைதான் . அதற்குக் காரணம் மருத்துவப் படிப்பு கிடைக்காத விரக்திதான் . ” என்கிறார் .
இதற்கிடையில் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் ஓர் இளைஞர் , அபிநாத் பிரச்னையை முன்னெடுத்து தொடர் போராட்டங்களை நடத்துகிறார் .
ஆனால் ‘அவர் கல்லூரியில் படித்தவர் அல்ல , பாலிடெக்னிக்கில் படித்தவர் . அதுவும் படிப்பை முடிக்காமல் போனவர் . படிக்கும் காலத்தில் சக மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டவர் .
வன்முறைகளில் ஈடுபட்டவர்’ என்பதற்கான, வலுவான ஆதாரங்களைக் காட்டுகிறார் சாய் பிரகாஷ் .
இப்போது பிரச்னை அது இல்லை .
அபிநாத் நீச்சல் தெரிந்தவர் என்பது உண்மை எனும்போது, இதன் பின்னால் உள்ள அநியாயத்தை வெளிக் கொணர வேண்டியது போலீஸ் துறையின் கடைமை .
இல்லாவிட்டால் இது இன்னொரு, விழுப்புரம் பங்காரம் சித்த மருத்துவக் கல்லூரி மாதிரி ஆகி விடும் . இன்னொரு வாசுகியின் நிலைமைதான் சாய் பிரகாஷ் லியோ முத்துவுக்கும் .
மாணவரை படிப்பு என்ற பெயரில் அடித்துக் கொடுமைப்படுத்தியது உண்மை என்றால் , அதற்குக் கல்லூரி நிர்வாகம் பதில் சொல்லியே ஆகவேண்டும் . சம்மந்தப்பட்ட நபர்களை கல்லூரி நிர்வாகம் தண்டிக்க வேண்டும் .
ஏனெனில் அந்தக் குற்றத்தை செய்தவர்களின் பிள்ளைகளும் நாளைக்கு வெளி உலகில் இயங்க வேண்டி வரும் .
கல்லூரியின் தரப்பில் குற்றம் இல்லை என்றால், பிள்ளைகளைப் பிடிக்காத படிப்புக்கு வற்புறுத்தி அனுப்பும் முன்பு, பெற்றோர் தங்கள் பிள்ளையின் மன நிலை , மன வலிமை அறிய வேண்டும் .
கிடைக்காத படிப்பினைப் பற்றி வருந்தாமல் கிடைத்த படிப்பில் முயன்று படித்து முன்னேறி சாதனை படைக்கும் மன நிலை மாணவர்களுக்கும் வர வேண்டும் .
ஆனால் ஒன்று உண்மை .
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை . பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை .
குற்றவாளிகள் நிரந்தரமாகத் தப்ப முடியாது . ஓம் சாய் ராம் !