விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க,
விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க, அருந்ததி நாயர், ஒய் ஜி மகேந்திரன் , கிட்டி என்கிற கிருஷ்ண மூர்த்தி , முருகதாஸ் ஆகியோர் உடன் நடிக்க ,
எழுத்தாளர் சுஜாதாவின் ஆ நாவலை – உரிமை பெற்று படத்தின் முதல் பாதியை அமைத்து, தொடர்ந்து திரைக்கதை எழுதி பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கி இருக்கும் படம் சைத்தான் .
கணிப்பொறி மென் பொருள் புலியான தினேஷ் (விஜய் ஆண்டனி ) , மணப்பெண் விளம்பரத்தின் வழி ஓர் இளம்பெண்ணை (அருந்தாதி நாயர் ) பார்த்து விரும்பி மணக்கிறான் .
சில நாட்களுக்குப் பிறகு அவனுக்கு மண்டைக்குள் யாரோ பேசுவது போல குரல் கேட்கிறது , அவனுக்கு யாரென்றே தெரியாத — ‘ஜெயலட்சுமி’யை கொல்ல வேண்டும் என்று கட்டளை இடுகிறது .
மாடியின் உச்சியில் இருந்து குதிக்கத தூண்டுகிறது.
அந்த குரலால் நண்பனின் (முருகதாஸ்) மரணத்துக்கே காரணமாகிறான் தினேஷ் . இதற்கிடையே அந்தக் குரல் அவனை தஞ்சாவூருக்கு அழைக்கிறது . அங்கே போனால் …..
அறுபது அன்டுகளுக்கு முன்பு, தன் வளர்ப்பு மகன் கோபாலனுடன் வாழ்ந்த சர்மா என்ற தமிழ் ஆசிரியரை (விஜய் ஆண்டனி இரண்டாம் வேடம்) ,
உதவி கேட்டு வந்த ஜெயலட்சுமி என்ற ஏழை பிராமணப்பெண் (ஜெயலட்சுமி) மணந்து கொண்டு , அதே நேரம் நடராஜ் என்ற ஆங்கில ஆசிரியர் மீது கள்ளக் காதல் கொண்டதும்,
அதன் விளைவாக நடந்த சம்பவங்களால் சர்மாவும் கோபாலனும் ஜெயலட்சுமியாலும் அவளது கள்ளக் காதலனாலும் கொல்லப் பட்டதும் சொல்லப்படுகிறது .
இந்த நிலையில் தினேஷின் மனைவி ஓர் தவறான இளைஞனிடம் சிக்கி , காணாமல் போகிறாள் . மனைவியைத் தேடும் தினேஷுக்கு நடக்கும் சம்பவங்களே சைத்தான் .
நடிப்பில் இன்னொரு உயரத்தை தொட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரனில் நெகிழ்த்தியவர் இதில் மன நோயாளியாக மிரண்டு சைத்தானாக மிரட்டுகிறார் .
நடிப்பதற்கு கஷ்டமான ஒரு கேரக்டரில் உழைத்து நியாயம் செய்து இருக்கிறார் பாடல்கள் ஒகே . பின்னணி இசை பிரம்மாதம்.
அருந்ததி நாயர் ஒகே . முருகதாஸ் கிட்டி, ஒய் ஜி மகேந்திரன், சாரு ஹாசன், விஜய் சாரதி, மீரா கண்ணன், ஆகியோரும் ஜஸ்ட் நடிக்கிறார்கள் . அவ்வளவுதான் .
சுஜாதாவின் ஆ நாவல் படத்தில் வரும்வரை படம் சுவாரஸ்யம்தான் . ஆனால் அதன் பிறகு ஸ்டீராய்டு மருந்தோடு கலக்கும் ஆவி, உடல் உறுப்பு திருட்டு , பொண்டாட்டி துரோகம் என்று…
அநியாயத்துக்கு வழுக்கி விட்டார்கள் . லூசி , என்னை அறிந்தால் , சிவாவின் காக்கி சட்டை , சிவாஜியின் புதிய பறவை எல்லாம் வந்து போகிறது .
முதல் பாதி நவீனத் தன்மையில் இருந்து பின் பாதி முற்றிலும் மாறாக பழைய – பார்த்து சலித்த விஷயங்களுக்குள் பயணிக்கிறது படம் .
ஆரம்பக் காட்சியில் ஓய ஜி மகேந்திரன் ஒரு எலக்ட்ரானிக் கார்ட் பற்றி சொல்கிறாரே , அதை வைத்து பின் பாதியில் திரைக்கதை அமைத்து இருந்தால் படம் வேறு பரிமாணத்தில் விஸ்வரூபம் எடுத்து இருக்கும்
படத்தின் ஒவ்வொரு பகுதியும் அளவுக்கு மீறிய நீளத்தில் இருக்கிறது . ஜெயலட்சுமி யார் என்பதை கண்டு பிடிக்க இடைவேளை வரை பயணிக்க வேண்டிய கதை இல்லை இது .
அடுத்து என்ன என்பதை படம் முழுக்கவே வெகு சுலபமாக யூகிக்க முடிவது பெரிய குறை
சைத்தான் …. அர்ஜுனன் (‘விஜய’ன்) கையில் அட்டைக் கத்தி