தாஸ் படத்துக்குப் பிறகு மீண்டும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு ஜெயம் ரவி நடிக்கும் இரண்டாவது படம்.
எம்.குமரன் s/o மகாலட்சுமி படத்துக்கு பிறகு ஜெயம் ரவியும் விவேக்கும் நடிக்கும் படம் .
காமெடி, கவர்ச்சி, கலகலப்பு என்று படம் கலர்ஃபுல்லாக வந்திருக்கும் உற்சாகத்தோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .
படத்தின் இரண்டு முன்னோட்டங்களையும் பாடல்களையும் போட்டுக் காட்டினார்கள்.

திரிஷா , அஞ்சலி இருவரோடும் மாறி மாறி ஆடுகிறார் ஜெயம் ரவி. அதிரடியாய் சண்டை போடுகிறார் . சூரி வழக்கம்போல நட்பு , பீர் என்று காமெடி பண்ணுகிறார் சூரி . அஞ்சலி கெட்ட ஆட்டம் போடுகிறார். திரிஷாவும் இவற்றோடு அடிஷனலாக சவுண்டு கொடுக்கிறார். பிரபு சீறுகிறார். விவேக் ஒரு ஷாட்டில் தோன்றுகிறார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பச்சைக் கிளி முத்துச் சரம் பாடல் வரும் திரைக்கதைப் பகுதி படமாக்கப்பட்ட தாய்லாந்து மிதக்கும் மார்க்கெட்டில் (FLOATING MARKET )இந்தப் படத்துக்கான ஒரு பாடலைப் படம் பிடித்து இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் முரளிதரன் “என் மகன் கோகுல கிருஷ்ணன் சினிமா தயாரிக்க விரும்பியதால் மறுபடியும் படம் எடுக்க வந்தேன் . அவர்தான் படத்தை தயாரிக்கிறார் . நான் பணம் கொடுத்தேன் . என் அனுபவத்தையும் கொடுத்தேன். அவ்வளவுதான்.

“இந்தப் படத்தில் நடித்து நல்ல அனுபவம் . நல்ல கேரக்டர் . ” என்றார் அஞ்சலி .
திரிஷா பேசும்போது ” அடாவடியான ஒரு கேரக்டரில் காமெடியும் கலந்து தெலுங்கில் ஒரு படம் செய்து இருக்கிறேன். தமிழில் இதுவரை அது போல படம் செய்யவில்லையே என்ற குறையை இந்தப் படம் போக்கும் ” என்றார் .
வருண் மணியனுடனான கல்யாண அறிவிப்பு மற்றும் ரத்து பற்றி சில பத்திரிக்கையாளர்கள் திரிஷாவிடம் பேசியபோது ” அது நடந்து முடிந்து போன விஷயம். நான் அது பற்றிப் பேச விரும்பவில்லை” என்றார் . எப்போது கல்யாணம் என்று கேள்விக்கு ” கல்யாணம் செய்து கொள்ளாமலே நிறைய பேர் வாழ்கிறார்கள் ” என்றார் திரிஷா .
படத்தின் இயக்குனர் சுராஜ் பேசும்போது ” இது முழுக்க முழுக்க காமெடி படம் . எனக்கு காமெடிதான் வரும். திரிஷா , அஞ்சலி இரண்டு பேரையும் காதலிக்கிற ஒரு கேரக்டரில் சூரி நடித்து இருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சூரி இன்னும் பெரிய உயரத்துக்கு போவார் . விவேக் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார். இதுவரை அவரை பார்க்காத ஒரு வித்தியாசமான புது தோற்றத்தில் மொட்டை அடித்துக் கொண்டு அவர் நடித்திருக்கிறார். ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி ஆகியோர் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்” என்றார் .
ஜெயம் ரவி தனது பேச்சில் ” திரிஷா இந்தப் படத்தில் ரொம்ப ஜாலியான நல்ல பெண்ணாக நடித்து இருக்கிறார். திரிஷாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களுக்கு இது மூணாவது படம். திரிஷாவோட சிந்தனை, பிரச்னைகளை சமாளிக்கும் விதம் , தெளிவு எல்லாம் மிக சிறப்பானது.
அப்பாவி கிராமத்துப் பெண்ணா அஞ்சலி சிறப்பா நடிச்சு இருக்கார். சுராஜ் சார் சொன்ன மாதிரி இந்தப் படம் சூரிக்கான படம் . படத்தில் 50 சதவீதம் அவர்தான் . மீதி 50 சதவீதம்தான் நான் திரிஷா அஞ்சலி எல்லாம் .
படத்துல நான் ஒரு பாட்டுப் பாடி இருக்கேன் . அது எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கறதுல சந்தோசம். காமெடி அவ்வளவு சிறப்பா வந்திருக்கு.
ஆனா அதையும் மீறி இன்னொரு விஷயம் இருக்கு. புருஷன் பொண்டாட்டி சேர்ந்து வாழ்ந்தாலே, அவங்கள கூட்டுக் குடும்பம்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்களோ என்ற பயம் வர ஆரம்பிச்சு இருக்கற இந்தக் காலத்தில், உறவுகளின் அருமையை சொல்ற படமா இது இருக்கும் ” என்றார் .
எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது இந்த சகலகலா வல்லவன் .