சின்னச்சாமியும் சக்தியும் திவ்யாவின் வருங்காலக் கணவனை மிரட்ட நகரத்துக்குப் போக, அவர் ஒரு என் கவுண்டர் போலீஸ் அதிகாரி (ஜான் விஜய் ) என்பது தெரிகிறது. அந்த முயற்சியில் இருவரும் தோற்று திரும்புகிறார்கள் .
சந்துல சிந்து பாடுவது , சைக்கிள் கேப்பிலும் லாரி ஓட்டுவது என்பார்களே .. அப்படி காமெடி வாசனையுடன் படத்தைத் தருகிறார் இயக்குனர் சுராஜ் .
அதிலும் முக்கியமாக சக்தி திவ்யா தனிக் குடித்தனத்தில் சண்டை வந்து இருவரும் ஒரு மாதம் ஊரில் உறவுகளோடு இருந்து விட்டு டைவர்ஸ் செய்து கொள்ள முடிவு செய்ய, அடுத்து அரை மணி நேரம் இந்தப் படம் தொண்டையைப் பிடித்து , நெஞ்சை நக்கி கண்ணீரும் கம்பலையுமாகத்தான் போக முடியும் என்ற நிலையிலும்…
அதை அப்படியே திருப்பி , சூரி -அஞ்சலி ஒரு காட்சி சார்பாகவும் திரிஷா – ஜெயம் ரவி ஒரு அணியாகவும் தேர்தலில் போட்டியிடுவதாக (திரைக்)கதை சொல்வது பேஷ்!!! ப
ஆரம்பம் முதல் கடைசி வரை ஜெயம் ரவி, சூரி இவர்களோடு சேர்ந்து நான் கடவுள் ராஜேந்திரன் காமெடியில் பின்னிப் பெடல் எடுக்கிறார் . இவரை வைத்தே படத்தை காமெடியாக முடிக்கும் விதமும் செம தில்லு .
அதே போல அந்த ‘முப்பது நாளுக்கு பிறகு டைவர்ஸ்’ காலகட்டத்தில் திரைக்கதையின் இன்னொரு திசையில் வரும் முறைமாமன் விவேக் (இரட்டை வேடம் ) நொடிக்கு நொடி காமெடி பட்டாசு கொளுத்துகிறார்.
இந்த அரங்குகள் மட்டுமல்ல படம் முழுக்கவே வண்ணமயமாக ,அழகாக இருப்பதற்குக் காரணமாகிறது யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு , கூடவே வாசுகி பாஸ்கரின் ஆடை வடிவமைப்பும்
உலகம் சுற்றும் வாலிபனில் இடம்பெற தாய்லாந்து மிதக்கும் மார்க்கெட்டை இந்தப் படத்தின் பாடலிலும் பார்க்க முடிவது சிறப்பு.
மாயாவி படத்தில் இடம்பெற்ற காத்தாடி போல ஏன்டி பாடலின் பாதிப்பில் வரும் ஒரு பாடல் உட்பட எஸ் எஸ் தமனின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. . பின்னணி இசையிலும் குறை சொல்லும்படி ஒன்றும் இல்லை .
எடிட்டர் செல்வாவின் ‘கிராப்பிங் ஸ்லைஸ்’ எஃபக்டுகள் ஒரு நிலையில் எரிச்சல் ஆகத் துவங்கும்போதே நிறுத்திக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் .
அதே போல காமெடி விஸ்வரூபம் எடுத்து இருக்கும் இந்தப் படத்தில் கூட, அலகு குத்தி ரத்தம் வருவது, கிழியக் கிழிய அடித்து நொறுக்குவது ,பேண்ட்டில் உச்சா போவது, ஓரிரு இடங்களில் வரும் இரட்டை அர்த்தம், இதையெல்லாம் காமெடி என்று காட்ட வேண்டுமா ? மாறிடலாமே !
மிக அழகாக தனது கேரக்டரில் நடித்து இருக்கிறார் ஜெயம் ரவி.. திரிஷா, விவேக், அஞ்சலி, சூரி, நான் கடவுள் ராஜேந்திரன் என்று எல்லோரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்து இருக்கிறார்கள் .
திரிஷா , அஞ்சலி இருவரையும் சம அளவில் பயன்படுத்தி இருப்பதுவும் இயக்குனரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. படம் முடிவதே தெரியாமல் தொடர்ந்து உட்கார்ந்து இருக்கும் அளவுக்கு சுவாரஸ்யமாக போவது படத்தின் பெரும்பலம் .
மொத்தத்தில் சகலகலாவல்லவன் – அப்பா டக்கர் …. காமெடி டாப் டக்கர்