ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் முருகன் சுப்பராயன் , டாக்டர் செல்வா.தியாகராஜனுடன் இணைந்து தயாரிக்க, புதுமுகங்கள் ராஜ் – செரீனா இருவரும் இணையராக நடிக்க, இயக்குனர் பி.வாசுவிடம் உதவியாளராக பணியாற்றிய க.மூர்த்தி கண்ணன் எழுதி இயக்கும் படம் சாலையோரம் .
“கேட்டதெல்லாம் கிடைக்கும் வரமான வசதி வாழ்க்கை பெற்ற ஒரு இளம்பெண் , ஒரு நிலையில் மிக மிக விரும்பி ஒன்றைக் கேட்டாள். அது அவளுக்கு கிடைத்ததா இல்லையா என்பதே இந்தப் படம் ” என்று இயக்குனர் மூர்த்தி கண்ணனால் அறிமுகப்படுத்தப்படும் இந்த சாலையோரம் படத்தின் கதை குப்பையா(லா)னது . (இந்த வார்த்தை தாக்குதல் அல்ல . !)
குப்பை பற்றிய ஆராய்ச்சியில் பி ஹெச் டி பெற்ற ஒரு கல்லூரி மாணவி, குப்பை வண்டி மூலம் குப்பை அள்ளும் வேலை செய்யும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் இளைஞன் ஒருவன் .. இவர்களை சுற்றி வாடை அடிக்கும் படமே இது .
அஞ்சாதே படத்திற்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் பாண்டியராஜன் . அதே போல மிக வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் முத்துக்காளை.
சலங்கை ஒலி படத்தில் இடம் பெற்ற ”தகிட ததிமி தகிட ததிமி .. ” பாடலை, குப்பை மலை மேல் நின்று கொண்டு மது பாட்டிலை தலைக்கு மேல் வைத்துக் கொண்டு பாடும் கதாபாத்திரத்தில் சிங்கம் புலி நடித்து இருக்கிறார் (‘குப்’ வாடைக்கும் ‘கப்’ வாடைக்கும் சரியாப் போயிருக்குமோ ?)
இந்தப் படத்துக்காக அம்பத்தூர் அருகில் உள்ள அத்திப்பட்டு என்ற இடத்தில் உள்ள நிஜமான ஒரு மாபெரும் குப்பை மலையில் பத்து நாட்கள் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள் . அந்த நாற்றத்தில் சாப்பிடவே முடியாதாம். காலை பத்து மணிக்கு ஷூட்டிங் ஆரம்பித்தால் மாலை ஆறு மணிக்கு ஷூட்டிங் முடியும்வரை எல்லோரும் பட்டினிதானாம் .
இது மட்டுமின்றி, நாற்றம் பொறுக்க முடியாமல் நாயகி செரீனா அடிக்கடி வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பாராம் . ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்ததும் வெளியே கொண்டு வந்து குளிப்பாட்டி மாத்திரை கொடுத்து , சில சமயம் குளுக்கோஸ் ஏற்றி… இப்படியாக அந்தப் பெண்ணை கிளறி எடுத்திருக்கிறது அந்த குப்பைமலை ஷூட்டிங் !
படத்தின் இசையமைப்பாளர் எஸ் சேதுராம் சிங்கப்பூரில் இருந்து வந்தவராம் . (குப்பையே பார்க்க முடியாத ஊரில் இருந்து குப்பை பற்றிய படத்துக்கு இசையமைப்பாளர் . இதெல்லாம் அராஜகம் பா !)
ஏப்ரம் மாதம் இறுதியில் வெளிவர இருக்கும் இந்தப் படத்துக்காக குப்பை பற்றி ஒரு ஆராய்ச்சியே நடத்தி இருக்கிறார் இயக்குனர் மூர்த்தி கண்ணன்.
“ஒவ்வொரு மனிதனும் தினசரி சராசரி அரை கிலோ குப்பை போடுகிறான். வீடுகளில் நாம் மட்கிய குப்பை மட்காத குப்பை என்று இரண்டாக பிரித்தாலும் குப்பைக் கிடங்கில் அவை இரண்டும் ஒன்றாக சேர்த்துதான் கொட்டப்படுகிறது . குப்பையில் இருந்து டீசல் தயாரிக்கலாம் என்று ரேவதி என்ற ஒரு பெண் கண்டுபிடித்துள்ளார் . அரசு இன்னும் அதை கவனிக்கவில்லை.
குப்பை நம் வீட்டை விட்டுப் போய்விட்டால் போதும்.. அதனால் பிரச்னை இல்லை என்று நினைகிறோம் . ஆனால் உண்மை அப்படி இல்லை . அந்தக் குப்பை அழிக்கப்படாத வரை அது காற்றின் மூலமோ தூசியாகவோ நம்மைப் பதம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது …”
– என்று குப்பை பற்றி, மணம் மணமாய் பல விஷயங்களை சொல்கிறார் .
குப்பை பற்றி பேசினாலும் படம் கோமேதகமாக வரட்டும் !